Wednesday 24 November 2010

குடி.. குடீ... குடீஈஈஈஈஈஈஈ .......1971 - 1989 - 2010 வரை



டாஸ்மாக் பற்றி பல முறை பல வண்ணங்களில் பலர் கூறிய கருத்துக்களை பதிவு செய்தாகி விட்டது. இந்த முறை இதன் ஆணி வேர் யார் என்பதை கொணரும் வண்ணம் சில காரடூனுடன் இந்த பதிவை செய்கிறேன். கீழிருக்கும் கார்டூன்கள் 1971 முதல் 1989 விகடனில் திரு.மதன் அவர்களால் வரையப்பட்டவை. தொடர்ந்து தனது சித்திரங்கள் மூலம் சாடிவரும் மதன் அவர்களுக்கு அனைவர் சார்பாக நன்றிகள்.


நடந்தது நடந்ததாக இருக்கட்டும்...

எஸ். முத்துக்குமார்

First Published : 23 Nov 2010 05:15:28 AM IST

தமிழகத்தில் இப்போது தினசரி மது அருந்துவோரின் எண்ணிக்கை 49 லட்சம் என்பதும், அவர்களின் சராசரி வயது 28-லிருந்து 13 ஆகக் குறைந்துள்ளது என்பதும் அதிர்ச்சியளிக்கும் தகவல்.

பள்ளிச் சிறார்களிடமும் மதுப் பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. மேலும், தற்கொலைக்கு முயல்வோரில் 37 சதவீதத்தினர் மதுப்பழக்கம் உள்ளவர்களே.

தமிழகத்தில் அண்மைக்காலத்தில் சுமார் 10 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதேநேரத்தில், 10 ஆயிரம் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம், ஆட்சியாளர்கள் நம்மை எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

மக்களை நல்வழியில் வழிநடத்திச் செல்ல வேண்டிய அரசு, அவர்களின் கைகளைப் பிடித்து மதுக் கடைகளுக்கு அழைத்துச் செல்வது வேடிக்கைதான்.

தமிழக அரசின் மொத்த வருவாயில் டாஸ்மாக் விற்பனையும், இயற்கையை அழித்தொழிக்கும் மணல் காசுமே முக்கியப் பங்காற்றுகின்றன. இதன் மூலம் சுமார் ரூ. 42,000 கோடி முதல் ரூ. 45,000 கோடி வரையிலான பொதுமக்களின் பணம் பல்வேறு வழிகளில் அரசின் கஜானாவுக்குச் செல்கிறது.

இவ்வாறு முறைகேடாக வரும் வருவாயை மக்களுக்கு இலவசங்கள் என்ற பெயரில் வாரி வழங்குவதில் என்ன பயன்? கட்சி மாநாடுகள், பொதுக் கூட்டங்களுக்கு கூட்டம் சேர்க்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் கட்சியினர், தொண்டர்களுக்கு மது போதையை இலவசமாக வழங்கி, கட்சியை வளர்க்கிறார்கள். இதனால், ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மதுவால் சாலை விபத்து, வீண் தகராறு, குடும்பப் பிரச்னை, நிம்மதியின்மை, உடல் நலக் கேடுகள் ஏற்படுகின்றன. மது கூடாது என நினைப்போரையும்கூட, திரும்பிய பக்கமெல்லாம் மதுக் கடைகளைத் திறந்து அரசு அழைப்பு விடுக்கிறது. பள்ளிகள் இல்லாத ஊர்களில்கூட இப்போது மதுக் கடைகள் உள்ளன.

ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், குடும்பத் தலைவரை குடிக்கு அடிமையாக்கி, விபத்தில் அவர் இறந்து, அவரது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இது அந்த ஏழைக் குடியானவன் இதுவரை அரசுக்குச் செலுத்தி வந்த டாஸ்மாக் கப்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியமா என்பதை அரசுதான் விளக்க வேண்டும்.

மது தீமை தரும் என எழுதி மட்டும் வைப்பதால் பயனில்லை. வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் மது கேடு என்றால், அதற்குத் தடை விதிப்பதுதானே சரியாகும். அதை விட்டு எச்சரிக்கை செய்வது மட்டுமே எங்களது கடமை எனக் கூறுவதற்கு ஓர் அரசு தேவையில்லையே!

மது கூடாது என்ற தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் பிரசாரத்துக்கும் நடுவில், மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டே செல்கிறது. 2009-ல் தீபாவளிக்கு தமிழகத்தில் ரூ. 81 கோடிக்கு நடந்த மது விற்பனை, தற்போது ரூ. 95 கோடியைத் தொட்டுள்ளது. இதுவும் தங்களது அரசின் சாதனைதான் என்று திமுக அரசு சொல்லப் போகிறதா?

மதுவின் தீமைகளை உணர்ந்த பெரியார், தனது தோட்டத்திலிருந்த தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். போதை எந்த வடிவிலும் மக்களைக் கெடுத்து விடக்கூடாது என்பதற்காக, தனது சொத்துகளை அவர் இழந்தார்.

ஆனால், இப்போது, மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை என்றெண்ணி மது உற்பத்திச் சாலைகளை கட்சியினரே தொடங்குவது எந்த விதத்தில் நியாயம்?

தான் படிக்காவிட்டாலும், கிராமங்கள்தோறும் கல்விக்கூடங்களைத் திறந்து கல்விக் கண் திறந்துவைத்தவர் காமராஜ். ஆனால், இன்று பள்ளிகள் பல மூடப்பட்டு, மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன.

இதன்மூலம் இளைய சமுதாயத்தை குற்றச் சமூகமாக இன்றைய அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது. மது போதையில் தவறுகள் செய்யத் துணிபவன், போதை குறைந்ததும் தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கொலையும் செய்யத் துணிகிறான்.

நாள்தோறும் மதுவைக் குடித்துவிட்டு வீதிகளில் விழுந்து கிடப்போரை நாம் சக மனிதர்களாகப் பாவிப்பதில்லை. இதனால் யாரேனும் வேறு காரணங்களால் மயங்கிக் கிடந்தாலும், நாம் அவர்களைக் கண்டுகொள்ளாமல் சென்று விடுவதால், தேவையில்லாத உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

ஆட்சி, அதிகாரங்கள், வரும் போகும். ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தோம் என்பதை வைத்துத்தான் வரலாறு எழுதப்படும்.

எனவே, இளைய தலைமுறையையும், ஏழைக் குடும்பங்களையும் காக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கு என்பது இப்போதைய தேவை. இதன்மூலம் எதிர்காலத் தமிழகத்தை திறமையான, வளமான சமுதாயமாக்க முடியும். எனவே, இதுவரையில் நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனிமேலாவது, நடப்பது நல்லதாக இருக்கட்டும். மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாகச் சிந்திக்கட்டும்!

நன்றி: தினமணி மற்றும் விகடன் மதன்.

மேலும் பாக்க http://www.agriculturetheaxisoftheworld.com/2010/05/revisited.html


1 comment:

  1. No government will take step towards that direction...
    Its very very difficult task for them to control the "Kalla Sarayam"... Law and Order...

    Also they are not willing to loss the easy money..
    they are not care about people or their health/wealth... all towards getting their vote to keep their power for next 5 years....

    ReplyDelete