Wednesday, 2 May 2012

வேண்டுவதெல்லாம் ஒரு முழக்கயிறு


  1. வாருங்கள், சீவல்சருகு கிராமத்துக்கு. பாருங்கள், தென்னை விவசாயிகளின் அவலத்தை. சென்னையில் இளநீர் 20 ரூபாய்க்கு விற்கலாம். இங்கு தேங்காய்க்குக் கிடைக்கும் விலை 2 ரூபாய். 
  2. வாருங்கள் நடுப்பட்டிக்கு. இது செம்பட்டிக்கு அருகில் உள்ள வெங்காய ஊர். வெங்காயத்தை விவசாயிகள் அறுவடை செய்யவில்லை. கிடைக்கும் விலை கிலோ ரூ. 5. அறுவடைச் செலவும் ரூ. 5. ஆகவே, யார் வேண்டுமானாலும் வெங்காய வயலில் இறங்கி வேண்டுமென்கிற அளவுக்குப் பறித்துச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை.
  3. நெல்லின் கதியும் மோசம். அரசாங்க விலை ரூ. 1,000. விவசாயிகள் பெறும் விலை ரூ. 650. மேற்படி மூன்று பொருள்களையும் விளைவிக்கும் ஒரு விவசாய நண்பரைச் சந்தித்தேன்.
"விவசாய விலை வீழ்ச்சியால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. மனைவி மக்களைப் பிறந்த ஊருக்கு அனுப்பிவிட்டேன். உத்திரம் பலமாயுள்ளது. வேண்டுவதெல்லாம் ஒரு முழக்கயிறு" என்கிறார். 

மேலும் படிக்க குறையும் வறுமைக் கோட்டில் வளரும் கொள்ளைக் கோடு 

First Published : 01 May 2012 01:32:42 AM IST


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பலதரப்பட்ட சாதனைகளில் வரலாற்றையே கலக்கும் சாதனையாக வறுமைக்கோட்டை வகுத்து, வறுமையை ஒழித்துள்ளதுவே. 2004-05-இல் 37.2 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டுக்குள் வாழ்ந்தனர். இன்றைய புதிய தகவல், வறுமைக்கோட்டின் எல்லை 29.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

 தேனான விஷயம் எதுவெனில், நகர்ப்புற வறுமையைவிட கிராமப்புற வறுமைக் குறைப்புதான். நகர்ப்புற வறுமை 25.7 சதவிகிதத்திலிருந்து 20.9 சதவிகிதமாக 4.8 சதவிகிதம் குறைந்துள்ளது. கிராமப்புற வறுமை 41.8 சதவிகிதத்திலிருந்து 33.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

 1994-இல் வறுமைக்கோட்டை 19 சதவிகிதமாகக் குறைத்தபோது, இன்றைய பிரதமர் அன்றைய நிதியமைச்சர். வறுமையை ஒழிப்பதில் புதிய தந்திரத்தை உருவாக்கிய பெருமை நமது பிரதமரையே சாரும்.

 1987-88-இல் வறுமைக்கோடு 25.5 சதவிகிதமாயிருந்தது. 1993-94-இல் வறுமைக்கோடு 19 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. வறுமையை ஒழித்த விழாவும் நடந்தது.

 வறுமைக்கோடு தொடர்பான புள்ளிவிவர ஊழலை அல்லது புள்ளிவிவர தில்லுமுல்லுகளை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெருமைக்குரியவராகப் பேராசிரியர் மது தண்டவதே கருதப்படுகிறார்.
 1996-இல் மது தண்டவதே திட்டக்கமிஷன் துணைத் தலைவராயிருந்தபோது, ""பாரதவாசிகளே, என்னை மன்னியுங்கள். ஏனெனில், இந்தியாவின் வறுமையை நான் இரண்டு மடங்கு கூட்டிவிட்டேன்...'' என்று கூறி 1994-இல் பழைய கணக்கின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியபோது, ஊடகங்கள் மிக மிக நல்ல மனிதரான மது தண்டவதேயை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. கணக்குச் செய்து வறுமையை 19 சதவிகிதமாகக் குறைத்தபோது அந்நாளைப் பொன்னாள் என்று ஊடகங்கள் வர்ணித்தன.
 1994-இல் வறுமைக்குறைப்பு 2012-இல் ரிப்பீட் ஆகும்போது, தில்லி நாடாளுமன்றமே கலகலக்கிறது. வறுமையை ஒழித்தவராக ஊடகங்கள் பிரதமரை வாழ்த்தியவண்ணம் உள்ளன.
இந்தியாவில் இரண்டு டெண்டுல்கர் உள்ளனர். சதமடித்து சதமடித்து நூறு முறை சதமடித்த சச்சினைவிட, வறுமைக்கோட்டை உடைத்த சுரேஷ் டெண்டுல்கர் என்ற பேராசிரியரே பிரதமரால் விரும்பப்படுகிறார்.

 வறுமையை அளவிடுவதில் ஏகப்பட்ட சிக்கல். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட உணவு உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் "இலவச உணவு' பெறத் தகுதியுள்ள ஏழைகளைக் கண்டறிய ஐ.நா. உணவு விவசாய நிறுவனம் 1,700 கலோரி உணவைக்கூட வாங்கச் சக்தியற்றவர் கணக்கை வழங்கப் பணித்தபோது, அந்தப் பொறுப்பை சுரேஷ் டெண்டுல்கர் ஏற்று, பிரதமருக்குச் சாதகமாக வழங்கிய அறிக்கையில் நகர்ப்புற ஏழைகளின் கலோரி 1,776 என்றும் கிராமத்து ஏழைகளின் கலோரி 1,999 என்றும் நிர்ணயித்து ஏழைகளின் வாங்கும் சக்தி - வருமானம் கிராமம் என்றால் மாதம் ரூ. 446.68 என்றும் நகரம் என்றால் அதுவே 578.8 என்றும் டெண்டுல்கர் நிர்ணயித்து வெளியிடப்பட்டபோது இதை எதிர்த்து தில்லி உச்ச நீதிமன்றம் வரை சென்றது.

 திட்டக்கமிஷன் இறங்கிவந்து கிராம வறுமைக்கோட்டை 28.3 சதவிகிதமாகவும் நகர வறுமையை 25.7 சதவிகிதமாகவும் குறைத்தது. திட்டக்கமிஷன் முடிவும் தவறு என்று பல்வேறு சமூகத் தொண்டு நிறுவனங்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்த்தபோது பிரதமரின் ஆணைப்படி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரகம் என்.சி. சக்சேனா தலைமையில் குழு நியமித்து வறுமை நிலையைக் கண்டறிந்து, அவர் வகுத்த வறுமைக்கணக்கில் வறுமைக்கோட்டு மக்கள் 50 சதவிகிதம். அவர் வகுத்ததை திட்டக்கமிஷன் ஏற்கவில்லை. அது அரசுக்கு ஆதரவாயில்லை.
 ஆகவே, இறுதியில் சுரேஷ் டெண்டுல்கர் அறிக்கையை ஏற்றுக்கொண்டு நகர்ப்புற வறுமை 4.8 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது என்றும் கிராமப்புற வறுமை 8 சதவிகிதம் குறைந்துவிட்டதாக அறிவித்துப் பெரிய நட்சத்திர ஓட்டலில் விழாவும் கொண்டாடிவிட்டதாகத் தெரிகிறது.
 இப்படிக் கணக்குக்காட்டி வறுமையை ஒழித்த பிரதமர் வருமான வரிக் கணக்கைக் காட்டாத கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் கோடு கிழித்து நமது நியாயமான வருமானம் கள்ளப்பணமாக சுவிஸ் வங்கிக்கு ஏற்றுமதியாவதையும் நிறுத்துவது நலம். வறுமைக்கோட்டை டெண்டுல்கர் போட்டால் என்ன? திட்டக்கமிஷன் போட்டால் என்ன? என்.சி. சக்சேனா போட்டால் என்ன? விவசாயிகளின் தற்கொலைக்கு விடுதலை உண்டா?

 வறுமையை ஒழிப்பது வேறு. வறுமையை நிர்ணயிக்கக் கோடு போடுவது வேறு. வறுமையை நிர்ணயிப்பதில் பொருளியல் - புள்ளிவிவர வரையறைகள் உண்டு. ஒரு மனிதன் உயிர் வாழத் தேவையான கலோரி - அதாவது அவன் உண்ணும் உணவு மூலம் பெறக்கூடிய கலோரியே அலகாகக் கொள்ளப்படுகிறது.

 உணவுக்கும், கலோரிக்கும் தொடர்பு செய்துள்ள டாக்டர் சுகாத்மா 600 கிராம் அரிசி வடித்த சோற்றில் 2,200 கலோரி உள்ளதை நேரு காலத்தில் வகுத்து வழங்கிய கணக்கு இன்றும் மையமாயுள்ளது. அரைப் படி அரிசியில் வடிக்கப்படும் சாதம் 2 தட்டுக்கு மேல் வரும். இதில் புரதச்சத்துள்ள பருப்பு, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்து உண்டால்தான் அம்மனிதன் நலமுடன் இயங்க முடியும்.

 வருமான வரையறை இன்னமும் அபத்தம். விஷயம் உச்ச நீதிமன்றம் சென்றபோது, ஒரு கிராமத்தில் ரூ. 26 - ஒரு நகரத்தில் ரூ. 32-ஐயும் வைத்துக்கொண்டு ஓர் ஏழை எதை வாங்கி எப்படிச் சாப்பிடுவான் என்று நீதிபதிகள் எள்ளி நகையாடினார்கள். இப்போது அந்த அளவும் குறைக்கப்பட்டு கிராமத்தில் நபர் வருமானம் ரூ. 22.42 என்றும் நகரத்தில் இதுவே ரூ. 28.35 என்று நிர்ணயமாகிறது.

 வறுமையை ஒழிப்பது என்றால் புள்ளிவிவர வரையறையை ஒழிப்பதுதான் என்று புரிந்துகொள்ளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அடுத்த சாதனை கூடிக்கொண்டு செல்லும் கார்ப்பரேட் வரி ஏய்ப்புக் கொள்ளைக் கோடு. ஒவ்வோராண்டிலும் கார்ப்பரேட்டுகள் வருமான வரி, எக்சைஸ் வரி, கலால் வரி (கஸ்டம் டூட்டி) கட்டாமல் ஏமாற்றும் தொகை நிலுவையில் உள்ளது.

 2005- 2006-இல் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை ரூ. 2.29 லட்சம் கோடியாக இருந்தது. 2011-2012-க்கு வரும்போது ரூ. 4.87 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. யூனியன் பட்ஜெட் வழங்கும் தகவல்படி 2005-06-லிருந்து 2011-12 வரை கார்ப்பரேட்டுக் கொள்ளை ரூ. 25.740 லட்சம் கோடியாகும்.

 நம்முடைய கண்ணோட்டத்தில் இது கார்ப்பரேட்டுக் கொள்ளை. ஆனால், மத்திய அரசு இதை வளர்ச்சிக்குரிய வரிவிலக்கு என்று பூசி மெழுகுகிறது. இப்படிப்பட்ட சலுகைகள் - ஏறத்தாழ 2ஜி ஊழல் தொகையைப்போல் 15 மடங்கு அதிகம்.

 ஆண்டுக்காண்டு லட்சம் கோடி லட்சம் கோடி என்று கார்ப்பரேட் பெறுவது கப்பம். ஆனால், நமக்கெல்லாம் அப்பம் வழங்கும் விவசாயி வளர்ச்சியாக அடையாளமாகாமல், வீழ்ச்சியாக அடையாளமாகிறான். வாருங்கள், சீவல்சருகு கிராமத்துக்கு. பாருங்கள், தென்னை விவசாயிகளின் அவலத்தை. சென்னையில் இளநீர் 20 ரூபாய்க்கு விற்கலாம். இங்கு தேங்காய்க்குக் கிடைக்கும் விலை 2 ரூபாய். வாருங்கள் நடுப்பட்டிக்கு. இது செம்பட்டிக்கு அருகில் உள்ள வெங்காய ஊர். வெங்காயத்தை விவசாயிகள் அறுவடை செய்யவில்லை. கிடைக்கும் விலை கிலோ ரூ. 5. அறுவடைச் செலவும் ரூ. 5. ஆகவே, யார் வேண்டுமானாலும் வெங்காய வயலில் இறங்கி வேண்டுமென்கிற அளவுக்குப் பறித்துச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை.

 நெல்லின் கதியும் மோசம். அரசாங்க விலை ரூ. 1,000. விவசாயிகள் பெறும் விலை ரூ. 650. மேற்படி மூன்று பொருள்களையும் விளைவிக்கும் ஒரு விவசாய நண்பரைச் சந்தித்தேன்.
 விவசாய விலை வீழ்ச்சியால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. மனைவி மக்களைப் பிறந்த ஊருக்கு அனுப்பிவிட்டேன். உத்திரம் பலமாயுள்ளது. வேண்டுவதெல்லாம் ஒரு முழக்கயிறு என்கிறார்.

 வறுமைக்கோட்டை இறக்கிக் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக் கோட்டை உயர்த்தத் தெரிந்த அரசுக்கு, வளர்ச்சியின் அச்சாணியாயுள்ள விவசாயிகள் வெந்து மடிவது கண்ணுக்குத் தெரியவில்லையா?No comments:

Post a Comment