Sunday 1 February 2009

வேர் படும் பாடு! மனிதகுலம் வீழும்!




வணக்கம்,

எந்த ஒரு மனிதனின் வெற்றியையும் புகழும் மனிதர்கள், அந்த வெற்றியின் பின்னே இருக்கும் கஷ்டத்தை அதற்கு உதவியவர்களை பெரும்பாலும் பார்ப்பதில்லை. அது போல், செடிகளின், மரங்களின், பயிர்களின், கொடிகளின் மேற்ப்புற வளர்ச்சியை மட்டுமே பார்க்கும் நாம் பெரும்பாலும், அத்தகைய வளர்ச்சிக்கு காரணமான வேரினை அதன் வளர்ச்சி பற்றிய சிந்தனை இருப்பதில்லை. பயிருக்கு உழவு ஓட்டினால் போதும், நீர் விட்டால் போதும், உரம் போட்டு களை எடுத்தால் போதும் என்ற நிலையிலே நமது விவசாய அறிவு வந்து விட்டது.

மண்ணை பற்றிய கடுகளவேனும் அறிவு நம்மிடம் இருந்தால் பல பிரச்சனைகளை விவசாயத்தில் இன்று தவிர்க்கலாம். மண்ணின் இயற்ப்பியல் தன்மை (மணல், சரளை, களி மண்), மண்ணின் ஆழம், நீர் பிடிப்பு தன்மை, மேலும் நாம் செய்யும் செயல்களால் மண்ணில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றை ஆழ்ந்து நோக்கும் தன்மை, மேலும் அதனை நீண்ட கால அளவில் அதன் மாற்றங்களை மனதில் நிறுத்தி முடிவெடுக்கும் திறன் போன்றவை இருத்தல் அவசியம்.

வேருக்கு வருவோம். மேற்ப்புற பயிரின் வளர்ச்சி என்பது, கீழ்ப்புற வேரின் வளர்ச்சி மற்றும் அதன் ஆரோக்கியம் முதலியவற்றை பொறுத்தே இருக்கிறது. வேரின் வளர்ச்சி தடைபட்டால், வேரினால் ஆழ்ந்து சென்று நீரிணை உறிஞ்ச இயலாது, பயிருக்கு நிற்கும் சக்தியை கொடுக்க இயலாது, பயிருக்கு வேண்டுகிற சத்தினை உறிஞ்சவும் இயலாது. வேரின் வளர்ச்சி தடைபட பல காரணங்கள் உண்டு மண்ணின் கடினத்தன்மை, மண்ணின் வேதிதன்மை, மண்ணின் ஊட்டம் மற்றும் பயிரின் வளர்ச்சி பருவம். அதாவது மனிதனுக்கு செரிமானமாகி சத்து உள்ளே சேர உடலின் செரிமான மண்டலம் சரியாக இருக்க வேண்டும், நமது மனநிலையும் சரியாக இருக்க வேண்டும். அதுபோல், மண்ணின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டம் வேரின் வளர்ச்சிக்கு மிக முக்கியம்.


இதில் வேரின் வளர்ச்சியை பெரும்பாலும் பாதிக்கும் காரணிகளாக விவசாயம் செய்வோர் கூறுவது ஊட்டம், நீர் முதலியன. ஆனால், பல வருடங்களாக நிராகரிக்கப்பட்டு வருவது மண்ணின் புவியியர்த்தன்மை. மண்ணின் கடினம், இலகு தன்மை, அதன் ஆழம், நாள்பட ஒரு பயிரோ அல்லது நமது விவசாயத்தின் நடவடிக்கைகளாலோ ஏற்ப்படும் மாற்றம் பற்றி யாரும் அக்கறைகொள்வதில்லை. ஏர ஓட்டுனியா, பயிர விதச்சியா, களை எடுத்தியா, நீர் பாயிச்சினியா, உரத்த கொட்டுனியா, பூச்சி மருந்த சகட்டுக்கும் தெளிச்சியா இவ்வளவுதான். மண்ணை பற்றி, இப்படி செய்வதால் மண்ணின் தன்மை அதன் மாற்றங்கள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.


உண்மை என்னவென்றால், இன்று வேர் வளர (அதாவது பயிர் வளர) நாமே நமது விவசாய பணிகள் மூலமாக இடையூறு விளைவிக்கிறோம். எப்படி?


நீங்க இந்த ரோட்டுல எல். அண்ட் டி. காரன் ரோடு ரோல்லர் வந்ஜ்சு ஜல்லி-தார்கலவையை கொட்டி ரோடு போடுறதா பார்த்திருப்பீங்க. மெதுவா கொஞ்சம் கொஞ்சமா ஜல்லியை அடுக்கி அந்த ரோலர் கனத்தை கொண்டு அமுக்குவான். ரோடு கடைசியல எப்படியாகுதுன்னு பார்த்திருப்பீங்க! அதுல கொண்டு போய் ஒரு மரச்செடிய நட்டாகூட வேர் போகாது கீழ. அந்த மாதிரிதான் போச்சு நம்ம விவசாய பூமி. டிராக்டர், டில்லர், அறுவடை இயந்திரமுன்னு கொண்டுவந்து வருசாவருசம், அந்த ரோடு ரோலர்களை கொண்டு நிலத்தை நல்ல ஈரமா இருக்கு பொது உழவு, அறுவடை இந்கிற பேரில் அமுக்கி விடுறோம். அந்த மண்ணு நாளடைவில் என்னவாகும் . கட்டந்தரையாகத்தான் போகும். பத்தாததிற்கு ரசாயன உரங்கள் வேறு. இப்படி நம்ம மண்ணுல ஒரு மூனடி ஆழத்திற்கு இருக்கிற விளைமன்னின் காற்றோட்டம், நீரோட்டம், உயிரோட்டம் (மண் புழு, நுண்ணுயிரிகள்) போன்றவற்றை தடை செய்து வேர் வளரும் சூழ்நிலையை கெடுத்து விடுகிறோம். அப்புறம், அது விளையலை இதுவிளையலை, விதை சரியில்லை, மழை சரியில்லை, பயிர் சரியில்லை, உரம் சரியிலைன்னு புலம்புறோம்.

உதாரணத்திற்கு, எங்க ஊர்க்கதை ஒன்று. எங்க ஊர் விளைநிலங்கள் மழை, மற்றும் கேனிப்பசனத்தை நம்பியுள்ளவை. நல்ல மணல்ப்பான்கான செம்மண் நிலம், ஆழம் மூனிலிருந்து ஆறு அடிவரைதான் அதற்க்கு கீழ் பாறை. இதில் தண்ணீர் விட விட இறங்கி விடும். நிக்காது. அதனால் நீர்த்தேவை அதிக கொண்ட பயிர்கள் வளருவது கடினம். முக்கியமாக நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்றவற்றை பயிரிடுவது பொதுவாக இயலாது. ஆனால், இன்று இந்த அனைத்து பயிர்களும் முக்கியமான பயிர்களாகி விட்டன. காரணம் அணைக்கட்டு. பவானி அணையின் கீழ்வரும் கீழ்பவானி பாசன திட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் நஞ்சை நிலமாகவும், புஞ்சைநிலமாகவும் மாற்றப்பட்டு விட்டது. அதாவது ஒரு வருடம் நஞ்சை,ஒரு வருடம் புஞ்சை. நஞ்சை வருடத்தில் நீரிணை அதிகம் தேக்கி அந்த செம்மண் நிலத்தை உழுது (அந்த காலத்துல வீடு கட்ட செம்மண்ணை குழைக்கிற மாதிரி) நெல் பயிரிடப்படும். செம்மைண்ணுல வீடு கட்டின காக்ரீட் மாதிரி நிக்கும், அதனால்தான் செம்மண்ணுல செங்கல்லே செய்ய முற்ப்படுவாங்க. இப்படி அந்த மண்ணை நாற்பது வருடமாக சீர்குலைத்து வருகிறோம் என்பதை இந்த கட்டத்தில் மிகவும் மனவேதனையுடன் கூறிக்கொள்கிறேன். முன்னர் அணைக்கட்டுகளின் கள்ளிக்காட்டு இதிகாசம்ன்னு ஒரு கட்டுரை எழுதினேனே அதுமாதிரி இது ஒரு சுள்ளிக்காட்டு இதிகாசம். மண்ணுல தண்ணியே நிக்காத சுள்ளிகாட்டுல தண்ணி நிக்க வச்சு மண்ணை கெடுத்து உற்பத்தி செஞ்சு எண்ணத்தை காணப்போறோம். அணைக்கட்டுகளால் நாமே விளைவிக்கும் இடையூருக்கு இதுவும் ஒரு எடுத்துகாட்டு.

ஆக மொத்தம் வேரின் வளர்ச்சியின்மை, மனித குலத்திற்கு வீழ்ச்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இதனை, விவசாயிகள் உணர்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். பலரும் உணர்த்து இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன் ஆனால் இன்றைய சமுதாய கட்டமைப்பு அதனை அவர்கள் மாற்ற ஒத்துழைப்பதில்லை. ஏர் கொண்டு உழுதால் இதனை தடுக்க முடியும். ஆனால் முடியுமா? நெஞ்சில பலமில்லை! மண்டையில அறிவுமில்லை! செய்ய மனசுமில்லை! என்ன செய்வான் இந்த போலியோ கண்ட விவசாயி! கஷ்டம்!

ஆகவே,

„Don’t forget the roots“.

செடிகள் வாழ்க்கையில் மட்டுமல்ல! மனித வாழ்க்கையில்கூடவும்தான்! நாம் யார்? நாம் வந்த பாதை என்ன? நமக்கு யார் யார்வழிகாட்டினார்கள்? உதவினார்கள்? என்பதை எக்காலத்திலும்மறக்ககூடாது!


1 comment:

  1. Quite informative. You mean to say that using tractor is not good. Then what is the alternative? only plough, any answer for labour problem.

    ReplyDelete