Tuesday, 2 November 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-18

முண்டகம் முதலிய மூடும் புல் குறை

உண்டிலன் உதவிலன் உலுத்தவன் கைப்பொருள்

மிண்டிய புல்லினும் மிகுத்த காலிகள்

திண்திறல் இலாதவன் சென்னிவன் சுமை.

முள் செடி முதலியன மூடியுள்ள புல் குறையானது தானும் உண்ணாது, பிறருக்கும் உதவாத உலொபியின் கைப்பொருள் போல வீணானதாம். நெருங்கி அடர்ந்த புல்களாயினும் அப்புல்லை மேயும் அளவுள்ள கால் நடைகளுக்கு மேல் அதிக கால் நடைகளை மேய விடுவானே ஆனால் அது சுமை சுமக்கும் திறம் இல்லாதவன் தலையில் சுமத்தும் பெருஞ்ச்சுமை போன்று பயனற்றதாம்.

Monday, 1 November 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-17

பொற்குறை பசுக்குறை புருவையின் குறை

நெற்குறை பால் தயிர் நெய் எருக்குறை

சொற்குறை யாவையும் தொடர்ந்து சூழும்கால்

புற்குறை இலாமையில் புகுந்த வன்குறை


பொன், மாடு, ஆடு, நெல், பால், தயிர், நெய், எரு முதலான இவற்றின் குறைகளால் உழவனின் புகழுக்கும் குறைவு உண்டாம். இவை யாவும் எதனால் ஏற்பட்டவை என்று ஆராயுமிடத்து புல் பரப்பு நிலம் இல்லாத காரணத்தால் ஏற்பட்ட வலிய குறையாம்.

Sunday, 31 October 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-16

இரும் பொருள் விளைவு ஒன்றால் எய்தச் சாலுமோ

அரும் பொருள் தருவதற்கு அமைந்து நின்றது

பெரும் குறை அது த்ரும் பேறுகோள் இன்றேல்

பெரும் குறையே அதில் பிறிது என் ஊதியம்

பெரிய பொருளாதாரம் தானிய விளைவு ஒன்றாலேயே அடைய முடியுமோ? அதனை ஒரு உழவன் பெரிய புல் பரப்பாலே தான் அடைய முடியும். அந்தப்புல் குறை தரும் பேற்றை அவன் அடைவில்லையானால் அது பெரிய குறைபாடே. அப்புற்குறையை விட அவனுக்கு ஊதியம் வேறு என்ன உண்டு? ஒன்றுமில்லையாம்.

Saturday, 30 October 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-15


நாம் பலங்கொடு கழித்தலும்

குறைப்புல்லும் நக்கி

மேம்படும் தொழிற்கு உதவலால்

பிறவற்றில் மிகுவித்து

ஓம்பும் நல்விலை அடையலன்

எனில் உழவில் கண்

ஆம் பெரும் செலவால் அடை

அரும் பயன் என்னாம்

நாம் விளை பொருள்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு கழித்தவைகளான தட்டை, உமி, சக்கை, தவிடு ஆகியவற்றை உண்டு, குறைவில் உள்ள புல்லையும் மேய்ந்து ஆவினங்கள் நமது தொழிலுக்குப் பெரிதும் உதவுகின்றன. அப்பொருட்களால் பசுவினக்களைக் காப்பாற்றி நல்ல விலைப் பொருளை அடையாதவன், உழவுத் தொழிலால் உண்டாகும் பெரும் கூலிச் செலவுகள் போக விளை பொருள்களால் என்ன பயன் அடைவன். அவை கட்டுபடியாகா. எனவே பசுவினங்களை காப்பாற்றி விற்பனை செய்யும் பொருளே நல்ல பயன் தரும்.

Friday, 29 October 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-14

குறையும் பாலுமே கோக்களைப்

பெருக்குவ என்ன

இறையும் எண்ணிலன் இரண்டிலும்

பிற பயன் ஏற்றின்

முறையில் வட்டி வேட்டு அரும் பெறல்

முதலினை இழக்கும்

அறிவிலாளனே அவன் உழும்

தொழிற்கு உளன் ஆகான்.

ஆவினங்களை வளம் பெறச் செய்பவன் புல் குறையும் பாலும் தான் என்று சிறிதும் எண்ணாமல் குறைப் புல்லை தீனிவரிக்கு விடுவது, பாலைக் கறந்து விலை செய்வது ஆகிய வேறு செயல்களில் அவற்றைப் பயன்படுத்துவானே ஆனால் அந்த உழவன் வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழந்து நிற்கும் அறிவற்றவனுக்கு ஒப்பாவான். அவன் உழவுத் தொழிலுக்குத் தகுதி பெற்றவன் ஆகான்.