Monday, 27 February 2012

வருவாய், நீ வருவாய்!


கு. குமாரவேலு IFS, former TN Planning Commission Member
First Published : 27 Feb 2012 01:23:58 AM IST


சற்றேறக்குறைய 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, செந்தமிழ்நாட்டில் பொன்னியென்ற கன்னி, கடல் புகுந்த வெண்சங்கும், வெண்நுரையும் பின்னிப்பிணைந்து தழுவித் தவழ்ந்திருந்த பேரழகு பூம்புகார் நகர் கடற்கரையில் ஐந்தும், ஆறுமாக, நிறம் வேறுபட்டு, திறம் ஏறுபட்ட கிரேக்கர்களும், உரோமர்களும் உலாவிக் கொண்டிருந்தனர். காலாற, இளைப்பாற அல்ல. கப்பலேறவுள்ள பண்டங்களைப் பாதுகாக்க பூம்புகாரின் அகம் காக்கவும், அரண் காக்கவும் அவர்களைக் காவலர்களாகக் கொண்டிருந்த அத்தமிழர்களின் செல்வச் செழிப்பு, நம்மை வியப்பில் ஆழ்த்தட்டும்.


ஆங்கிலேயர்கள், மரவுரி தரித்து, செல்டிரிஸ் என்ற பழங்குடியினராக மேற்கே பவனி வந்த அந்தக் காலத்திலேயே, நாகரிகத்திலும், செல்வச் செழிப்பிலும், கொடி கட்டிப் பறந்தவர்கள் இந்தக் கிரேக்க உரோமர்கள் என்ற உண்மை, நம்மைப் பெருமிதப்படுத்தட்டும்.
"திரைகடலோடியும் திரவியம் தேடு' என்ற நிலைப்பாட்டில் நித்தமிருந்த தமிழர்கள், கிழக்கிலும், மேற்கிலும் அலைகடல் கடந்து வருவாய் ஈட்டினர்.


தென்மேற்குப் பருவக்காற்றைப் பயன்படுத்தி, பாய்மரக் கப்பல் மட்டுமேயிருந்த அப்போது, அம்மாதங்களில், கிரேக்க உரோமர்கள் தமிழ்நாட்டுக்கும், தமிழர்கள் கீழைநாடுகளுக்கும் கடல் தவழ்ந்தனர். வடகிழக்குப் பருவக் காற்றில், தத்தம் நாடுகளுக்குத் திரும்பினர்.
மேற்குக் கடற்கரையில், சேரநாட்டின் பட்டினம் என்று இப்போதும், முசிறி என்று அன்றும் அழைக்கப்பட்ட துறைமுக நகரம், இப்போது அகழ்வாராய்ச்சியால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துறைமுகம், மேற்கையருக்கு நுழைவாயிலாக இருந்தது.


அங்கிருந்து, பாலக்காட்டுக் கணவாய் வழியாக, கொங்குநாடு புகுந்து பேரூர் என்ற நொய்யல் கரையிலிருந்த பெரிய ஊரில் தங்கினர். அங்கிருந்து சேரநாட்டுத் தலைநகர் வஞ்சி என்ற கருவூர் வழியாக, சோழப் பேரரசர்கள் உறைவிடமான காவிரிக்கரை உறையூர் புகுந்து, பூம்புகார் என்ற சோழர் துறைமுகமாகிய காவிரிப்பூம்பட்டினம் குவிந்தனர்.


உரோம, கிரேக்க, மகதம் போன்ற நாடுகளில் வெளியிடப்பட்ட காசுகளும், சங்ககால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட காசுகளும் கரூரிலும், பேரூரிலும், கொங்குநாட்டுக் கொடுமணலிலும் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தெற்குப் பெருவழி(தட்சிணப் பதம்), கொங்குப் பெருவழி போன்ற வணிகப் பெருவழிகள் கரூர் வழியாகச் சென்றன.


தாமிரபரணி நதி கடல் கலந்த இடத்திலிருந்த மாபெரும் அன்றைய துறைமுகம் கொற்கை என்ற தற்போதைய ஆதிச்சநல்லூரில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே, பன்னாட்டு மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அகழ்வாய்வில் தெரியவந்துள்ளது.
பெரும்பொருள் வாணிகம் தமிழர்கள் நிகழ்த்தியதால், வருவாய் வந்தது. வெறுவாய் அரங்கங்களில் வருவாய் பிறக்காது. வளமான வருவாயை ஈன்றது, நலமான அன்றைய தமிழ்மண் என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அம் மாமண்ணில் விளைந்த பொருள்கள்தான் சங்கத் தமிழர்களின் ஏற்றுமதிப் பொருள்களாக இருந்தன.


ஒரு நாட்டின் பொருளாதாரம், அடித்தளம், இடைத்தளம், மேல்தளம் என்ற மூன்று அடுக்குகளைக் கொண்டதாகும். அதில் அடித்தளமாக விளங்குவது நிலமும், நிலம் சார்ந்த விளைபொருள்களும்.
நிலத்தின் உள், விளை, வளர்பொருள்களை நுகர்பொருள்களாக உருமாற்றி வழங்கிடும் தொழிற்சாலைகளும், ஆலைகளும் நாட்டின் பொருளாதாரத்தின் இடைத்தளம் அல்லது நடுத்தளமாகக் கருதப்படுகிறது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், நாகரிக சுகம் வழங்கும் நவீன கேளிக்கை மையங்கள், சிறு, குறு கடைகள், பெரிய வர்த்தக வியாபார மையங்கள், தங்கும், உண்ணும் விடுதிகள் போன்ற தேவை, சேவை மையங்கள் மேல்தளமாகக் குறிப்பிடப்படுகின்றன.


ஒரு நாட்டின் பொருளாதாரம் சிறப்பானதாக மட்டுமன்றி, உறுதியானதாகவும், எவ்வித பாதக நிலையிலும் நிலைகுலையாமல் சாதகமாக இருக்க வேண்டுமென்றால், இன்றியமையாத அடித்தளம், நிலையான உறுதித்தன்மையோடு, வலிமையான ஆதாரமாகத் திகழ வேண்டும்.


பலமான அடித்தளம், நிலையான தேவை, சேவைகளை வழங்கிடும் மேல்தளங்களை, மக்களது வளம், நலம் காத்திடும் சீரிய பணியைச் செவ்வனே நிறைவேற்ற ஏதுவாகும்.
இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாய வளர்ச்சி விகிதம் (அடித்தளம்) நிர்ணயிக்கப்பட்ட 4% வளர்ச்சி கூட அடையாமல், 2% மட்டும் எட்டிப்பிடித்துத் தொங்கிக் கொண்டுள்ளதும், தமிழகத்தில் 2010-11-ல் அதனினும் குறைவாக, குட்டிக் கரணமிட்டுக்கொண்டு இருப்பதையும், அள்ளித் தரப்படும் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள், தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன.


தமிழகத்தில் இரண்டாவது தளம் (தொழிற்சாலை) 6.8% ஆகவும், மேல்தளம் (வியாபாரம்) 14.5% ஆகவும் உள்ளது, நமக்கு, ஒரு கூம்புமுனை கீழ்த்தளத்தில் திருப்பி வைத்திருக்கும் காட்சியை மனக்கண்முன் நிறுத்தட்டும்.


இக்கூம்பு வடிவத்தை ஒரு குப்பி (டம்ளர்) பரிமாணமாக மாற்ற ஏற்ற, மாற்றுத் திட்டங்களும் செயலாக்கங்களும் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.


குறையைக் குறைத்து, நிறையை நிறையவே செய்ய, பிரச்னைகளைத் தெளிவாகத் தெரிந்து, புரிந்து, அறிய வேண்டும். 2010-11-ல் தமிழகத்தில் விவசாயம் மற்றும் நிலம் சார்ந்த பொருள்கள் உற்பத்தி 30,753 கோடி ரூபாய் மதிப்பையும், தொழிற்சாலைகள் 1,03,721 கோடி ரூபாய் மதிப்பும், வர்த்தகம், வாணிபம் 2,53,169 கோடி ரூபாய் மதிப்பையும் ஈட்டியுள்ளன.


தமிழ்நாட்டின், 2007-08 முதல் 2010-11 வரையான 4 ஆண்டுகளின் சராசரி வளர்ச்சி விகிதமாக, விவசாயம் ஒரு சதவிகிதத்துக்குக் குறைவாகவும், தொழிற்சாலைகள் 4.43% ஆகவும், வணிக சேவைகள் 11.02% ஆகவும் உள்ளதைப் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அடித்தளம் ஆடுவதற்குக் காரணம், பொய்த்துவரும், மாறிவரும் பருவமழை, அதனால் வளமிழந்த, நலமிழந்த மண், இடுபொருள் விலையேற்றம், விளைபொருள் விலைச்சரிவு, உடன் தரமிழக்கும் விளைபொருள்கள், இடைத்தரகர் இடையூறு போன்ற இடையூறுகள்.
ஏமாற்றத்தை ஏமாற்றிட, ஏற்புடைய, எளிதில் நடைமுறைப்படுத்தவல்ல, கிராமப்புற வளர்ச்சியை ஏற்றிடும் மாற்றுத் திட்டங்களைத் தீட்டிட வேண்டும். இதற்கான தொழில்நுட்பங்கள், ஏற்புடைய விவசாயிகள் உள்ள தமிழகத்தில் நிச்சயமாக நிறைவேற்றிட முடியும்.
தமிழகத்தில், விவசாய பூமியின் வருமானத்தில், 40% உண்ணும், உடுக்கும் தாவரங்கள் மூலமும், 24% தோட்டக்கலை விளைபொருள்கள் மூலமும், 36% கால்நடைச் செல்வங்கள் மூலமும், 2009-10-ம் ஆண்டில் வருவாயில் கிடைத்திருப்பதை நினைவில்கொள்ள வேண்டும்.


தமிழகம் நீர் ஆதாரம் குறைவாக உள்ள நிலப்பரப்பு என்பதும், வரும் ஆண்டுகளில் மேலும் நீர்த்தேவை அதிகரித்து, இருப்புக் குறைந்திடும் என்பதையும் நினைவில் நிறுத்தி மேலே குறிப்பிடப்பட்ட, புள்ளிவிவரங்களை மறுமுறை பார்க்கலாம்.


குறைந்த நீர்த்தேவையே உள்ள கால்நடை, நீர்த்தேவை அதிகமாக உள்ள விவசாய விளைபொருள்களுக்கு நிகராக, வருமானம் ஈட்டியுள்ளபோதிலும், நடந்து வரும் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில், விவசாயத்துக்கு ஒதுக்கியதில் 13% நிதி மட்டுமே கால்நடைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும், வருங்கால வருவாய் மேம்பாட்டுக்கு நினைவுகொள்ள வேண்டும்.


அதுபோன்றே, நீர் குறைவாகவே தேவைப்படும் பருப்பு வகைகள், மொத்த விவசாய மதிப்பான 11 ஆயிரம் கோடியில், 340 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டியுள்ளது. இது 1.2% ஆகும்.
தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்வகைகள் 17 சதவிகிதமும், கரும்பு 7.6 சதவிகிதமும் வருமானம் ஈட்டியுள்ளன. எனவே புரதச்சத்து தாவரங்களைக் குறைவாக வளர்த்து வரும் தமிழகத்தில், ஒவ்வொரு சொட்டு நீரையும், சரிவரப் பயன்படுத்தி, அதிக அளவில் புரதப் பயிர்களை உற்பத்தி செய்தால் வருமானம் அதிகரிக்கும். சுமார் 20 லட்சம் டன் அளவு பருப்பு வகைகளை உணவாகப் பயன்படுத்தும் தமிழகத்தில், 2 லட்சம் டன்னுக்குக் குறைவாகவே இப்போது ஆண்டொன்றுக்கு உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் நினைவில்கொள்ள வேண்டும்.


பருவமழைத் தாக்கங்களைத் தாங்கி, அதிக வருவாய் வழங்கிடும் வீரிய மர வகைகளை, வரப்போரம் நடுவதன் மூலமே, வருமானத்தை உயர்த்தி, வரப்போகும் துயர் தவிர்க்கலாம்.
உணவுப் பொருள் விளை வருமானத்தைப் பாதிக்காமல், கூடுதலாக ஏக்கருக்கு, ஆண்டொன்றுக்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை அதிக வருவாய் ஈட்ட முடியும்.


தமிழ்நாட்டில் உள்ள மொத்த விளைநிலப் பரப்பான 145 லட்சம் ஏக்கரில், சுமார் 40 லட்சம் ஏக்கர் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
வளம் கொண்டும் குறையாக விடப்பட்டுள்ள இந்நிலங்களிலும், விளைநில வரப்புகளிலும், உணவு உற்பத்தியைப் பாதிக்காத வகையில், ஆண்டுக்கு 10 கோடி மரங்கள் வீதம், அடுத்து 5 ஆண்டுகளில் 50 கோடி மரங்கள் நட்டால், ஆண்டொன்றுக்குத் தொடர்ந்து, குறைந்தது 10,000 கோடி ரூபாய் கூடுதலாக தமிழகப் பொருளாதார அடித்தளத்துக்குக் கிடைத்திடும்.


தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாக இப்போது 80% ரசாயனம் மற்றும் உலோகங்கள் பயன்படுகின்றன.
காசு கிடைத்தாலும் இவற்றின் கழிவுகளால் மாசு அதிகரித்துக்கொண்டே உள்ளன. 40% தொழிற்சாலைகள், நிலம் சார்ந்த விளைபொருள்களை மட்டுமே மூலப்பொருளாகப் பயன்படுத்துமாறு தொழில் கொள்கை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் அதுபோன்ற தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, அங்கு உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருள்களை மட்டுமே பயன்படுத்தினால் அந்த 50 கோடி மரங்களின் மூலம் கிடைத்திடும் ரூ.10,000 கோடி கூடுதலாக மேலும் ரூ.20,000 கோடி வருவாய் ஈட்டி, கிராமப்புறப் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திடும் உன்னதப் புனிதச் செயலைச் செய்திட இயலும்.


தமிழகத்தில் ஒரு மனிதனின் சராசரி ஆண்டு வருமானமாக 2010-ம் ஆண்டில் இருந்த ரூ.46,123-ஐ, கணிசமாக உயர்த்திட இது வழிவகை செய்யும்.
பொருளாதார ரீதியில் லாபம் தருவதாகவும், சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த வல்லதாகவும், உலகம் வெப்பமாவதைக் குறைத்திட ஏற்றதாகவும், மண் வளமேற்றி, உயிர் உர, உயர்தர பயிர் விவசாய உத்திகள் மூலம் நிச்சயமாக நிறைவேற்றிடலாம். இவ்வாறெல்லாம், தமிழகத்துக்கு வருவாய், நீ வருவாய்.

நன்றி :தினமணி http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=558421&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D,%20%E0%AE%A8%E0%AF%80%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D!

1 comment:

 1. சங்க காலத்தில் இருந்த வணிகமென்பது வேறு. இன்றுள்ள வணிகமென்பது.

  சங்ககாலத்தில் மிக அபூர்வமான பொருட்கள் (சந்தனம், ரத்தினங்கள், கலை அம்சம் நிறைந்த பொருட்கள்) வணிகம் செய்யப்பட்டன.

  இன்றோ அத்யாவசிய பொருட்களான பருப்பு, அரிசி, கோதுமை, பால், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் வணிகம் செய்யப்படுகின்றன.

  அன்று உணவுப்பொருட்கள் உற்பத்தியில் தமிழனும் தமிழகத்தில் சேர சோழ பாண்டிய தேசங்களும் தன்னிறைவு பெற்றிருந்ததன. தனித்தன்மை இருந்தது. மாடுகள் கூட இரண்டு தேசங்களுக்கு மத்தியில் வணிகம் செய்யகூடாது என்று மிகவும் கட்டுப்பாடான சுற்றுசூழழியல் நெறிமுறைகள் இருந்ததன. பால், அன்னம், முதலியவை விற்ப்பனைக்கு இருந்ததில்லை. அவை தானமாக கொடுக்கப்பட்டது . மக்கள் கடினமாக உழைத்தார்கள் , அரசர்கள் ஏரி, குளங்கள் கட்டி, வனங்களை காத்து மும்மாரி பெய்யும் வகையில் செங்கோல் செலுத்தினர்.

  அதனால், அன்றைய உலகமயம் என்பது வேறு இன்றையது வேறு. இன்று மக்களை உழைப்பை வேறு சில எரிபொருட்கள் பிடிங்கி கொண்டுவிட்டன . உழைப்பின்றி உலகம் உய்யாது. இன்று ஏரி, குளங்கள் தூர்ந்து போய்விட்டது. உழைப்பு மரியாதை இழந்து விட்டது. பெட்ரோலும், டீசலும், மின்சாரமும் நாடாளுகின்றது. அதனால் ஏற்ப்பட்டுள்ள உலகமயமானது ஒருவித வித சுரண்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது.

  ஆகையால் கட்டுரை ஆசிரியர், சங்க கால தமிழகத்தின் வணிகத்தையும் இன்றைய வணிகத்தையும் ஒப்பிட்டு இன்றுள்ள வணிகத்திற்கு பொருளாதாரத்திற்கும் நியாப்படுத்துவது தவறான போக்காகும்.

  நமது பொருளாதார சிந்தனை பிற நாட்டு வளங்களையும், நமது மண்ணின் வளத்தையும் கொள்ளை அடிப்பதில் இருக்க கூடாது.

  வருவாய் முக்கியம் ஆனால், அந்த வருவாய்க்காக நமது வளங்களை திரும்பி பெற முடியாத அளவுக்கு அதனை பாழ் செய்வது ஏற்க்கலாகாது. மனித உழைப்பின் மூலம் பெரும் வருவாயும், மதிப்பும் அதிகம். அதுவே நமது தனித்தன்மையை பாதுகாக்கும்.

  ReplyDelete