Friday 2 October 2009

அக்டோபர் 2 தத்துவம்

அக்டோபர் 2:

சீக்கிய மதத்தின் குரு கோவிந்தர் குறித்த ஒரு சம்பவம் சொல்வார்கள். தாகத்துக்குத் தண்ணீர் தந்த இளைஞன் ஒருவனின் கைகளைக் கண்ட கோவிந்தர், ''என்னப்பா... உன் கை ஓர் ஆண் மகன் கை போல இல்லையே! இவ்வளவு மென்மையாக இருக்கிறதே... நீ கடுமையாக உழைப்பதில்லையா?'' என்று கேட்டாராம்.

''ம்ஹூம்... என் பெற்றோர் பெரும் செல்வந்தர்கள். மிகச் செல்லமாக வளர்ப்பதால், நான் உழைப்பதே இல்லை'' என்றான் அந்த இளைஞன். சட்டென்று தண்ணீரைக் கீழே கொட்டிவிட்டு, ''உழைக்காதவர் கொடுக்கும் எதையும் நான் உண்பதே இல்லை!'' என்று அங்கிருந்து நகர்ந்தாராம் கோவிந்தர். உழைப்புக்கும் உணவுக்கும் உள்ள தொடர்பை உணர்த்துகிறது இந்த சம்பவம்.

உலகுக்குத் தன் உழைப்பைத் தராதவன், உலகில் இருந்து உணவைப் பெற உரிமை அற்றவன் என்பதில் அபார நம்பிக்கை வைத்திருந்தார் மகாத்மா காந்தி. ஒரு முறை... தான் தங்கியிருந்த வீட்டில் சாப்பிட்டு விட்டுப் புறப்படுமுன், அந்த வீட்டின் கழிவறைக்குச் சென்று தூய்மைப்படுத்தத் தொடங்கினார் காந்திஜி. ''மகாத்மா செய்யும் வேலையா இது?'' என்று பதறினார்கள் அந்த வீட்டார். உடனே, ''மகாத்மாவுக்கு என்று தனிப்பட்ட வேலைகள் உண்டா என்ன? எனக்கு உணவு கொடுத்தவருக்கு, எனது உழைப்பை அளிக்காமல் போக எனக்கு உரிமை இல்லை. அதனால் எனக்குத் தெரிந்த இந்தப் பணியைத் தேர்ந்தெடுத்தேன்'' என்றார் காந்தி. உணவை உழைப்புடன் தொடர்புபடுத்தி சிந்திப்பது, மனசாட்சி உடையவர்களின் நேர்மையான வாழ்க்கை முறை!

'இறைவா! நான் அன்றாடம் தவறாமல் சமய நெறிகளைப் பின்பற்றினாலும், ஒவ்வொரு நாளும் ஒருவேளை மட்டுமே உணவு உண்டாலும், கோபம், காழ்ப்பு, பழிதீர்க்கும் வெறி என் நெஞ்சிலிருந்து நீங்காமற் போனால், இந்த சமய வாழ்க்கை எந்தப் பயனுமற்றுப் போகும். நாள்தோறும் நான் ஆலயம் சென்று ஆண்டவனைத் தொழுதாலும், மலரும் ஊதுபத்தியும் கொண்டு வழிபட்டாலும், சுயநலம், பேராசை, பற்று, ஆணவம் அனைத்தும் நீங்காமற் போனால், இந்த வழிபாடு அனைத்தும் என்னை நானே ஏமாற்றிக் கொள்ளும் தந்திரமாகும். எந்த நேரமும் நான் பிரார்த்தனை செய்தாலும், சான்றோர் அவையில் பங்கேற்றாலும், நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபட்டாலும் அன்பு, கருணை, இரக்கம் எனது இயல்பாக இல்லையெனில், என் ஆன்மிகம் உண்மையானது இல்லை. நான் தனித்திருந்து மௌனத்தில் ஆழ்ந்தாலும், எளிமையும் தவமும் ஏற்று அகிம்சை வழியில் துறவை அறிவித்தாலும் என் தவறான ஆசைகளும், எண்ணங்களும் அழிக்கப்படாவிடில், என் உடல் உணர்விலிருந்து விடுபடாவிடில், எல்லா உயிர்களிலும் இறைவன் இருப்பதை நான் அறிந்து கொள்ளாவிடில் என் வாழ்க்கை முழுவதும் வீணாகும்' என்ற குஜராத்தி கவிஞர் நரசி மேத்தாவின் கவிதையில் நெஞ்சம் கலந்து வாழ்ந்தவர் அண்ணல் காந்தியடிகள்.

நன்றி : சக்தி விகடன், தமிழருவி மணியன் மற்றும் திரு. சுகி சிவம்.

No comments:

Post a Comment