Monday 26 January 2009

கள்ளிக்காட்டு இதிகாசங்களும், அறுபது வருட இந்திய குடியாட்சியும் (DAM-AGE is a DAMAGE)


எல்லாத்துக்கும் வணக்கமுங்க!

ரொம்ப நாளா, இந்த கட்டுரையை எழுதோனும்ன்னு இருந்தேன். இன்னைக்குதான் சமயம் கைகூடியது. என்னடா வைரமுத்துவோட கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், இந்திய குடியாட்சியையும் முடிச்சு போட்டிருகானேன்னு பாக்குறீங்களா? சம்பந்தம் உள்ளது. கள்ளிக்காட்டு இதிகாசம்கிறது பல கோடி மக்களுக்கு வைரமுத்து எழுதிய அஞ்சலி. புத்தகத்தை படித்தவர்களுக்கு அது புரியும்.

நான் கல்லூரியில் படிக்கும் சமயம். இரண்டாமாண்டு என்று நினைக்கிறேன். கோயமுத்தூர் விஜயா பதிப்பகத்திற்கு வைரமுத்து வருகை தந்தார். கள்ளிக்காட்டு இதிகாசம் புத்தகத்தை வெளியிடுவதற்கு. முன்னூறு ரூபாய் கொடுத்து வாங்கினேன். கையழுத்திடும் போது என்ன செய்கிறேன் என்று கேட்டார். விவசாயப்பல்கலையில் இளங்கலை என்றேன். இந்தப்புத்தகம் உன் பாடத்திற்கு மிகவும் உபயோகமாக இருக்குமென்றார். வாங்கிப்படிக்க ஆரம்பித்தேன். வாழக்கையில் முதல் முதலாக வாங்கிப்படித்த நாவல். ஒரே வாரத்தில் படித்து முடித்தேன். கதை இதுதான், ஒரு கிராமத்தில் பஞ்சகாலத்தில் ஒரு தாத்தாவும், பேரனும் சேர்ந்து தங்கள் நிலத்தில் ஒரு கிணறு தோண்டுகிறார்கள். அதை தோண்ட ஆரம்பிப்பதற்கு முன்பு வரும் கதை, கிராமத்தில் அதுவும் வானம் பார்த்த பூமியில் வாழும் குடியானவர்களின் வறுமையான வாழ்க்கை, இந்தியாவிற்கே உரித்தான பிற சமூக போராட்டம் போன்றவற்றை தத்தரூபமாக எடுத்துக்காட்டும். இறுதியில் முப்பது அடியில் தண்ணீர் பேர்த்து எழும். இருவரும் சந்தோசத்தில் மகிழ்வார்கள். அப்போது பேரிடி போல் வரும் ஒரு செய்தி. அணை கட்டுவதற்கு போட்ட திட்டத்தில் அவர்களது நிலம் அடங்கிவிட்டது. அனைவரும் நிலத்தை விற்றுவிட்டு அவர்களது வீடுவாசலை காலிசெய்து விட்டு சில வாரங்களில் வெளியேறவேண்டும் என்று உத்தரவு வருகிறது. கஷ்டப்பட்டு தோண்டிய கிணறு, சோறு போட்ட நிலம், வாழ வைத்த வீடு என அனைத்தையும் விட்டு போக மனமில்லாது அந்த பெரியவர் மனமொடிந்து இருப்பார். இறுதிநாள், அணை மதகு போட்டதும் நீர் குபுகுபுவென்று மேலேறி அவர்களது கிராமத்தை மூழ்கடிக்கும். கிழவனும் பேரனும் தங்கள் நிலமும், கிணறும் மூழ்குவதை பார்த்து கண்ணீர் விட்டபடி வீட்டிலுள்ள பொருட்களை காலி செய்து கிளம்புவார்கள். ஆனால், விரைந்து வந்த நீர் அவர்கள் முழுவதுமாக காலி செய்யும் முன் மூழ்கடித்து விடும். இறுதியில் கிழவனின் உயிர் ஊர் எல்லையை தாண்டும் முன் சோகத்தில் பிரிந்து விடும். இப்படிப்பட்ட கதை நடந்ததாக கவிஞர் கூறியுள்ளது தென்பாண்டி நாட்டு வைகை அணை நிர்மாணிக்கும் போது அங்கு நிகழ்த்த ஊர் மற்றும் குடிபேர்ப்புகளின் நினைவாக தன் தாய்மண்ணின் சோகத்தை காவியமாக வடித்துள்ளார்.

இது மாதிரி கதைகள் என்னமோ வைகை அணையில் மட்டும் நடக்கவில்லை. சுதந்திரம் பெற்ற இந்தியாவில் வெள்ளைக்காரன் நீர்ப்பாசனப்பரப்புகளை அதிகப்படுத்தி வரி வசூலை அதிகப்படுத்த வேண்டி திட்டம் தீட்டி வைத்திருந்த அணைக்கட்டு மற்றும் பாசனத்திட்டங்களை நேரு மாமா மிகவும் சிரத்தையுடன் செயல்பட்டு பணியை தொடர்ந்து செம்மையுற நடத்தினார். மேலும் பல திட்டங்களை உருவாக்கினார். அணைகளை புதிய இந்தியாவின் கோவில்கள் என்று வருணித்தார். இப்படி கட்டப்பட்ட அணைகள் இந்தியா முழுவதும் சுமார் 3500 ஆகும். இதில் இடம்பெயர்ந்த ஆதிவாசிகள், மற்றும் பழகுடியினறது எண்ணிக்கை இன்று 5.6 கோடி ஆகும். இந்தியாவின் வறுமை உயர இதுவும் ஒரு காரணம். ஆனால், இப்படிப்பட்ட திட்டங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பது பண்டித நேரு போன்றோரின் யோசனை. நாட்டின் இயற்க்கை வளங்களை கிட்டத்தட்ட அரசுடமையாக்கும் வகையில் குடியாட்சியை நிறுவி வளர்ந்தது "சுதந்திர இந்தியா". மக்கள் அரசு சொல்வது போல் கேட்டுக்கொண்டனர். பசுமைப்புரட்சி என்று திருட்டுத்தனமாக விலை நிலங்களில் யூரியாவை கொட்டி பயிர் நன்கு வளர்கிறது என்று கூறி விவசாயிகளை தங்கள் பக்கம் கொண்டு சென்றனர். விளைவிக்கும் பயிர் உண்ணும் உணவு என அனைத்தையும் அரசின் திட்டங்களாலும் அணைக்கட்டுகாலும் மாற்றியமைத்தனர். பத்து வருடங்களில் கோதுமை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு கொண்டு வந்தனர். பின்னர் அதற்க்கு பசுமைபுரட்சி என்று பெயர் வைத்து, அது இன்று எப்படிப்பட்ட விச்வரூபமான பிரச்சனைகளை கிளப்பியுள்ளது அனைவரும் அறிந்தததே.


நதிகளை தடுத்து நிறுத்தி அணைகட்டி விவசாயம் செய்வது தவறா என்று பலரும் கேக்கலாம். சில மக்களின் வாழ்வாதாரங்கள்தானே கெடுகிறது, அவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை கொடுத்துவிடலாம் என்று நினைக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட பெயர்வுக்கு பின் ஒரு இடத்தில் புதிதாக வாழத்தொடங்குவது என்பது எளிதல்ல. அணைகட்டுவது என்பது புதிதல்ல நம்முடைய மன்னர்கள் கூட குளம், ஏரி கட்டினார்களே என வாதாடலாம். ஆனால், மன்னர் காலத்தில் கட்டப்பட்ட குளங்கள், ஏரிகள் இயற்க்கை சூழலையோ, மக்களின் வாழ்வாதாரங்களியோ குலைப்பதாக இருந்ததில்லை. உதாரணமாக தாமிரபரணி, நொய்யல், பாலாறு போன்றவற்றில் ஏரி குளங்கள் கட்டப்பட்டன. அவை தடுப்பணைகலாகவும், கிளை வாய்க்கால்கலாகவுமே இருந்ததுண்டு. நீரின் ஓட்டத்தை என்றும் பெரிய அளவில் மறித்ததாக இருந்ததில்லை.

பிரிடிஷ்-நேரு வகையறாக்கள் கொண்டுவந்த பிரமாண்ட அணைகள் பல காடுகள், கிராமங்கள், மக்களின் பழக்கவழக்கம், மொழி கலாசாரம், விதைகள், வாழ்க்கைமுறை என இவையனைத்தையும் விலையாக வாங்கிவிட்டது.


மக்களின் குடிமைகளை இரெண்டே தலைமுறைகளில் பெயர்த்தெடுத்து விட்டது. கிராமங்கள் இன்று காலியாகி விட்டன. இன்று கூட காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பது இந்த நாட்டின் இளைய தலைமுறைக்கு சாபக்கேடாகும். உலகமயமான பின்பு, ஏற்க்கனவே கிராம நிர்வாகத்தை, குடிமையை ஒழித்து கட்டியிருந்த அரசு உலக கார்ப்பரேட் கம்பனிகளுக்காக மீதமிருந்ததையும் பொருளாதார வளர்ச்சிஎன்ற பெயரில் நகரங்களுக்கு உறிஞ்ச ஆரம்பித்து விட்டன. கடந்த இருபது வருடங்களில் பல நகரங்களுக்கு அதனை சுற்றி பெருகியுள்ள தொழில்களுக்கு இந்திய நதிகள் சப்லையாக ஆரம்பித்துவிட்டது. மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் நர்மதை நதியில் நடந்த சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயர அதிகரிப்பு அதனை தொடர்ந்து வெளியேற்றப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் அவர்களின் வாழ்விழப்பு இன்றும் எடுத்துக்காட்டு. ஆனால் அணைகட்டி நீரானது குஜராத் மாநிலத்திற்கு குடிநீர் மற்றும் தொழிசாலைகளுக்கு பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

அத்தோடு குடியரசு நாட்டில் அப்பாவி படிப்பறிவில்லாத குடிமக்கள்தான் உரிமைகள் மறுக்கபடுகிறார்கள் என்றால், நர்மதை நதித்திட்டத்தை எதிர்த்து கேட்ட அருந்ததி ராய் எனும் எழுத்தாளரை சுப்ரீம் கோர்ட் நாட்டின் உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகளை இழிவுபடுத்தியதாக கூறி சிறையிலடைத்தது. இதுதான் இந்தியாவின் குடியரசு. இந்த குடியரசு யாருக்காக செயல் படுகிறது, இந்த நீதிமன்றங்கள் யாருக்காக இருக்கின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

என்னை கேட்டால், தேசிய தினத்தன்று கொடிகளை அரைகம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் அனுசரிக்க வேண்டும். இன்னும் சுதந்திரமோ, குடியுரிமையோ இந்த நாட்டிளிருப்பதாக யாரும் நினைத்தால் அவர்களைப்போன்ற மூடர்கள் யாரும் கிடையாது.


கீழுள்ள நர்மதை நதியின் கள்ளிக்காட்டு இதிகாசம் இந்திய குடியாட்சியின் தத்துவத்தை நன்கு விளக்கும்.

DAM/AGE: A Film with Arundhati Roy

http://video.google.com/videoplay?docid=5268815252249892078




No comments:

Post a Comment