Friday, 9 March 2012

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி

மார்ச் 5-ம் தேதி மத்திய அரசு பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கிறது. மார்ச் 6-ம் தேதி மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி மற்றும் பருத்தி வியாபாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மார்ச் 7-ம் தேதி மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் நிர்வாகி மோகன் பிரகாஷ் தலைமையில் பருத்தி வியாபாரிகள் பிரதமரைச் சந்திக்கிறார்கள். "அமைச்சர்கள் குழு உடனே மார்ச் 9-ம் தேதி கூடி, இதுகுறித்து முடிவெடுங்கள்' என்று மன்மோகன் சிங் உத்தரவு போடுகிறார்.

 அடடா, என்ன வேகம்! என்ன விவேகம்!! இந்த வேகத்தைப் பார்த்தவுடனே பருத்தி வியாபாரிகளுக்கு முகம் மலர்ந்துவிட்டது. நிச்சயம் தடை நீக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை அமைச்சர்கள் குழுக் கூட்டத்துக்கு முன்பாகவே வியாபாரிகளுக்கு வந்துவிட்டது. வியாபாரியின் மகிழ்ச்சி, விவசாயியின் வேதனை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


 பருத்தி ஏற்றுமதி அவசியம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி சீனாவுக்குத்தான் அதிகமாக நடைபெறுகிறது. வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக நாம்தான் அதிகமாகப் பருத்தி ஏற்றுமதி செய்கிறோம். இதனால் இந்தியாவுக்கு அன்னியச் செலாவணி கிடைக்கிறது என்பதெல்லாம் புரிகிறது. ஆனால், திட்டமிட்ட அளவைக் காட்டிலும் இன்னமும் கூடுதலாக ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதித்துவிட வேண்டும் என்கிற பருத்தி வியாபாரிகளின் பேராசைதான் முறையற்றதாக உள்ளது. 2011-12 நிதியாண்டில் பருத்தி உற்பத்தி சற்றே அதிகம் என்பது உண்மைதான். அதாவது 2010-11-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த பருத்தி உற்பத்தி 333 லட்சம் பொதிகள் (ஒரு பொதி 170 கிலோகிராம்) என்றால், நிகழ் நிதியாண்டில் 345 லட்சம் பொதிகள். இந்தியாவில் உள்ள பருத்தி நூற்பாலைகளுக்கான பருத்தித் தேவை 260 லட்சம் பொதிகள். ஆகவே, மீதமுள்ள சுமார் 8 லட்சம் பொதிகளில், ஏற்றுமதிக்குத் தரமான பருத்தியை மட்டுமே ஏற்றுமதி செய்துகொள்ளலாம் என்றுதான் அனுமதிக்கப்பட்டுள்ளது.


 ஆனால், நிகழ் நிதியாண்டு முடிவுற இன்னும் 22 நாள்கள் இருக்கும் நிலையில், பருத்தி வியாபாரிகள் இதுவரை 95 லட்சம் பொதி பருத்தியை ஏற்றுமதி செய்துவிட்டார்கள். இந்த நிலையில்தான் மத்திய அரசு தடை விதித்தது.


 இந்தத் தடையை மத்திய ஜவுளி அமைச்சகமும் மத்திய வர்த்த அமைச்சகமும் இணைந்துதான் அறிவித்தன. இதற்கான காரணம் என்ன என்பதை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்திருப்பதை உற்று நோக்கினால், இதன் நியாயத்தை எவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அவர் கூறியுள்ள காரணம் இதுதான்:


 "பருத்தி வியாபாரிகள் வழக்கமான அளவைவிட அதிகமாக ஏற்றுமதி செய்தால், உள்நாட்டுத் தேவையில் தட்டுப்பாடு ஏற்படும். அதன் பிறகு, அதிக விலை கொடுத்து பருத்தியை இறக்குமதி செய்யும் நிலைமைக்கு தொழில்துறையைத் தள்ள வேண்டுமா? மேலும், இவர்களுக்கு வரும் பருத்தி ஏற்றுமதி ஒப்பந்தக் கடிதங்கள் யாவும், ஏற்கெனவே பருத்தியை வாங்கிவிட்ட நபர்களிடமிருந்து வந்துள்ளவை. இது சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. அதாவது, இந்த மிகச் சில பேரான பருத்தி வியாபாரிகள், மேலதிகமாக பருத்தியை ஏற்றுமதி செய்து, அதை வெளிநாட்டில் உள்ள தங்கள் கிடங்குகளில் வைத்திருந்து பிறகு இந்தியாவுக்கே அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள் என்பதைத்தான் அது சூசகமாக உணர்த்துகிறது. ஆகவேதான் தடை விதிக்கும் முடிவை மேற்கொண்டோம்'


 இதுவரை 95 லட்சம் பொதி பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டது என்பதை இந்திய பருத்தி கூட்டமைப்பும் ஒப்புக்கொள்கின்றது. ஆனாலும் இன்னும் 33.5 லட்சம் பொதிகளை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தக்கடிதம் உள்ளது. ஆகவே, அனுமதித்தே ஆக வேண்டும் என்றும் சொல்கின்றது.


 வேளாண் அமைச்சகத்தைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்று குறை சொல்லும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரும், மாநில அரசிடம் கலந்துபேசாமல் முடிவு எடுப்பதா என்று கேட்கும் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியும், ஏற்கெனவே 95 லட்சம் பேல்கள் பருத்தி - வழக்கத்தைவிட கூடுதலாகவே - ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டன என்பதைப் பேசாமல், தடையை நீக்க வேண்டும் என்று மட்டுமே பேசுகிறார்கள்.


 சரி. பருத்தி ஏற்றுமதியை அவர்கள் விருப்பப்படியே அனுமதிப்போம். உள்நாட்டுத் தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டு, அதனால் பருத்திவிலை உயர்ந்து, விவசாயிகள் பயன் அடைவார்களா என்றால், அதுவும் நிச்சயமில்லை. பருத்திக்கொள்முதல் பெரும்பாலும் முடிந்துவிட்டது. அதுவும் அடிமாட்டு விலையில்! இதனால் தமிழக பருத்தி விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


 இந்தியா முழுவதும் கடந்த நிதியாண்டில் பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டது. தமிழகத்திலும்கூட 40% பரப்பு அதிகரித்தது. விளைச்சலும் அதிகரித்தது. ஆனால், வியாபாரிகள் விலையைக் குறைத்தார்கள். 2010-11-ல் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,000 முதல் ரூ.9,000 வரை விலை கிடைத்தது என்றால், 2011-12-ல் விளைச்சல் அதிகமாகிவிட்டது என்கிற ஒரே பாவத்துக்காக, விலை ரூ.3,000 முதல் ரூ.5,200 வரை (தரத்துக்கு ஏற்ப) குறைந்துபோனது. அல்லது வியாபாரிகளால் குறைக்கப்பட்டது.


 நெல், கோதுமை, கரும்புக்கு அரசாங்கமே விலை நிர்ணயிப்பதைப் போல, பருத்திக்கும் ஆண்டுதோறும் அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கின்றனர் பருத்தி விவசாயிகள். பருத்தி ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரும் அரசியல் தலைவர்கள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகிறார்களா என்றால் இல்லை.


 ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்கிற நிலைமைதான் நமது விவசாயிகளின் நிலை. ஏற்றுமதிக்கு அனுமதித்தால் வியாபாரிகளுக்கு லாபம். இறக்குமதிக்கு வாய்ப்புக் கிடைத்தால் அரசியல்வாதிகளுக்கு லாபம். விவசாயி பாவம், "காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்...' என்று பாட்டுப்பாடி ஓய்வதைத் தவிர வேறு என்னதான் வழி?


Source: Dinamani http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=563977&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=  

No comments:

Post a Comment