Tuesday 9 August 2011

சின்ன சின்ன பேராசையை வளர்க்கும் இன்றைய பொருளாதாரம்



மேலே உள்ள ஆராய்ச்சி கட்டுரை நான் எனது ஆராய்ச்சியில் வெளிகொணர்த்தது. அதன் போக்கில் அமைந்த ஒரு தமிழ் கட்டுரையை இன்று ஒரு தளத்தில் பார்த்தேன். மிக அருமையான கோர்வையான கட்டுரை.  அதனையும் இங்கே பதிகிறேன். 


எண்பதுகளின் இறுதி.   அப்போதெல்லாம் பொருளாதார தாராளமயமாக்கல் என்ற கொள்கை கடைபிடிக்கப் படவில்லை.  சந்தைப் பொருளாதாரம் என்ற மந்திரமெல்லாம் இல்லை.

அப்போது வீட்டில் டிவி கிடையாது.     பக்கத்து வீட்டில் தான் சென்று பார்க்க வேண்டும்.   அதற்கு காசு வாங்குவார்கள்.   ஒரே சேனல் தூர்தர்ஷன் மட்டும் தான். வெள்ளிக் கிழமை ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி என்றால் 10 காசு.  ஞாயிற்றுக் கிழமை படம் என்றால் 25 காசு.   அந்த ஞாயிற்றுக் கிழமை படம் இரவு செய்திகளுக்குப் பிறகு தொடர்ந்தால், க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்க்க முடியாது.   இந்திப் பாடல்கள் ஒளிபரப்பப் படும் சித்ரஹார் என்ற நிகழ்ச்சியை புதன் கிழமை காசு வாங்காமல் பார்க்க அனுமதிப்பார்கள்.

டிவிக்கள் என்றால் மூன்றே மூன்று ப்ராண்டுகள் மட்டும் தான்.  சாலிடேர், டயனோரா மற்றும் ஈசி டிவி.   அதுவும் கருப்பு வெள்ளை தான்.   வண்ணத் தொலைக்காட்சிகளை பார்ப்பது அரிதிலும் அரிது.  செல்போனெல்லாம் கிடையாது.  லேண்ட் லைன் வாங்குவதற்கே பதிவு செய்து விட்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டும்.  அதுவும், உங்கள் எக்சேஞ்சில் இடமில்லை என்றால், எக்சேஞ் எப்போது விரிவுபடுத்தப் படுகிறதோ, அது வரை காத்திருக்க வேண்டியதுதான்.

இரு சக்கர வாகனங்கள் என்று எடுத்துக் கொண்டால், டிவிஎஸ் 50க்கு அடுத்த படியாக ஸ்கூட்டர் மட்டும் தான்.  பஜாஜ் ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களை, உயர் நடுத்தர வகுப்பினர் என்று கருதுவார்கள். அவர்களுக்கு அடுத்த படியாக பைக் வைத்திருப்பவர்கள்.  எஸ்டி, என்     ஃபீல்ட் தவிரவும், எண்பதுகளின் இறுதியில் அறிமுகப் படுத்தப் பட்டது, சுசூகி பைக்.  பெரும் பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாங்க முடியும்.

கார்களை எடுத்துக் கொண்டால், அம்பாசிடர் பியட் தவிர்த்து, பணக்கார கார் என்று மாருதி அழைக்கப் படும்.  மாருதி 800 வைத்திருப்பது ஸ்டேட்டஸ் சிம்பல்.

வெளிநாட்டுப் பொருட்கள் அவ்வளவு சாமான்யத்தில் கிடைக்காது.   வெளிநாட்டுப் பொருட்கள் வேண்டுமென்றால் பர்மா பஜார் தான்.   அங்கே சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட பொருட்கள் கிடைக்கும்.  அந்தப் பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும்.

கொக்கோ கோலா கிடையாது. கோல்ட் ஸ்பாட்டும், தம்ஸ் அப்பும், பன்னீர் சோடாவும் உண்டு.   மெக்டோனால்டும், கேஎஃப்சியும் கிடையாது.   மல்டி ப்ளெக்சுகளும், மால்களும் கிடையாது.

இந்த நிலையில் தான், 1991ல் நரசிம்மராவ் அரசு பொறுப்பேற்கிறது.  புதிய அரசு வந்ததும், சந்தைப் பொருளாதாரம், தாராளமயமாக்கல் கொள்கை என்பதை வெளிப்படையாக அறிவித்தது.  இந்தக் கொள்கைகைள் நடைமுறைக்கு வருவதை, இடது சாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. டங்கல், காட் போன்ற ஒப்பந்தங்கள் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை சீரழிக்கும் என்று தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தின.

ஆனாலும் அத்தனை போராட்டங்களையும் மீறி, சந்தைப் பொருளாதாரம் அறிமுகப் படுத்தப் பட்டது. இந்த சந்தைப் பொருளாதாரம் அறிமுகப் படுத்தப் பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.  இணையதள வசதியும், தகவல் தொழில்நுட்பப் புரட்சியும், எண்பதுகளில் இல்லாத வகையில் அபிரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. அன்று வெளிநாடுகளில் வாழும் உறவினர்களை தொடர்பு கொள்ள இருந்த சிரமங்கள் இன்று இல்லை.  நொடியில் தொடர்பு கொள்ளும் அளவுக்கு தகவல் தொடர்புச் சாதனங்கள் வளர்ந்துள்ளன.  ஆனால், அருகாமையில் இருக்கும் நபரோடு நமக்கு இருக்கும் தொடர்பு தான் அறுந்து போயிருக்கிறது.

முதலாளித்துவம் சார்ந்த சந்தைப் பொருளாதாரம், நாட்டில் தேனையும் பாலையும் ஓட விடும் என்று அப்போது அறிவிக்கப் பட்டது.  இன்று என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டி உள்ளது.

அர்ஜுன் சென்குப்தா கமிட்டியின் அறிக்கையின் படி, இந்தியாவில் 77 சதவிகிதத்தினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக வாழுகின்றனர். என்.சி.சக்சேனா கமிட்டியின் அறிக்கையின் படி, இந்தியாவில் 50 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழே வாழுகின்றனர்.

இந்தியாவின் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,  35.5 % வங்கி சேவையை பயன்படுத்தியுள்ளார்கள்.   35.1 % வானொலி வைத்துள்ளனர் 31.6 % தொலைக் காட்சி வைத்துள்ளார்கள், 9.1 % தொலைபேசி வைத்துள்ளனர் 43.7 % சைக்கிள் வைத்துள்ளனர் 11.7 % ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் வைத்துள்ளனர் 2.5 % கார் வைத்துள்ளனர், 34.5 % இவற்றில் எதுவுமே இல்லாமல் இருக்கின்றனர்.

விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட நமது பொருளாதாரத்தை வணிக மயமாக மாறவேண்டும் என்பதற்காக, வழக்கமான உணவுப் பொருட்களை பயிரிட்டு வந்த விவசாயிகளை, பணப்பயிர்களை பயிரிட அரசு ஊக்குவித்தது.  வழக்கமான பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு, அந்த விளைபொருட்கள் விற்காவிட்டாலும், அந்த உணவு தானியங்களை வைத்து பட்டினியை தவிர்க்க முடிந்தது.  ஆனால், பருத்தி போன்ற பணப்பயிர்களை பயிரிட்டு, உரிய விலை கிடைக்காத விவசாயிகள், கடும் வறுமையில் சிக்கி, தற்கொலையை நோக்கி தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

அரசே ஒப்புக் கொண்ட புள்ளி விபரங்களின் படி, 1997 முதல் 2007 வரையிலான காலத்தில் மட்டும் 2 லட்சம் விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரத்தின் படி, இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஆப்பிரிக்க கண்டத்தை விட அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ள பணக்காரர்களை எடுத்துக் கொண்டால், 2007ம் ஆண்டு உள்ள கணக்கின் படி, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்து மூன்றாயிரம்.  இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்று விதவிதமான கார்கள் இருக்கின்றன.  தொழில் நுட்பத்தின் உச்சத்தில் இருக்கக் கூடிய ஐபோன்களும், ப்ளாக் பெர்ரிகளும் இருக்கின்றன.  அமெரிக்காவில் இன்று அறிமுகப் படுத்தப் படும், கார்கள் அடுத்த வாரமே இந்தியாவில் கிடைக்கின்றன.   விதவிதமான பைக்குகள் இருக்கின்றன, எல்சிடி டிவிக்கள் இருக்கின்றன.

எங்கு பார்த்தாலும் மல்டி ப்ளெக்சுகள் புற்றீசல் போல தோன்றி வருகின்றன.  உங்களுக்கு கடன் கொடுத்து, தெருவில் நிறுத்த, கடன் அட்டைகளையும், பர்சனல் லோன்களையும் வழங்க வங்கி ஏஜென்டுகள், உங்களை போனில் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

இணையத்தில் சினிமா டிக்கெட் முதல், ரயில்வே டிக்கட் வரை அனைத்தையும் வாங்கும் வசதிகள் பெருகி விட்டன.   மடிக் கணிணி போய், டேப்ளெட் பிசி என்ற கையடக்க கருவிகள் வந்து விட்டன. சுவற்றில் மாட்டக் கூடிய எல்ஈடி டிவிக்கள் வந்து விட்டன.   தெருவுக்கு தெரு பீட்சாக்கள்  கிடைக்கின்றன, மெக்டொனால்டு கடைகள் உள்ளன, கேஎப்சிக்கள் உள்ளன.

இவையெல்லாம் நமக்குக் கொடுத்தது என்ன ?   ஒன்றே ஒன்றுதான் பேராசை.   பேராசையை ஏராளமாக வளர்த்து விட்டுள்ளது இந்த சந்தைப் பொருளாதாரம்.

இந்தியாவில் மற்றும் வெளி நாடுகளில் புழக்கத்தில் உள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான கருப்புப் பணம் மட்டும் 70 லட்சம் கோடி என ஒரு மதிப்பீடு கூறுகிறது.   ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடங்கி, காமன்வெல்த் விளையாட்டுக்கள், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் என்று ஒரு பக்கம் ஊழல்களின் பட்டியல் மலைக்க வைக்கிறது.

மற்றொரு பக்கத்தில். தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்பத்தினரின் சொத்துப பட்டியல் மலைக்க வைக்கிறது.  திமுகவினர் ஈடுபட்டுள்ள நில அபகரிப்பு குற்றச் சாட்டுகளின் பட்டியல் மிக மிக நீளமாக இருக்கிறது. நாட்டில் நிலத்தின் மீதான மோகம் எந்த அளவுக்கு தலை விரித்தாடுகிறது என்பதையே இது காட்டுகிறது.

‘ஆசையே துன்பத்திற்கு காரணம்’ என்று சொன்ன புத்தரும், உலகத்திற்கே தத்துவத்தை கற்றுத் தந்த பல்வேறு அறிஞர்களும் பிறந்த இந்த பூமியில், அந்த பூமியின் மீதான ஆசை வெறியாக மாறி, சுயநலத்தைத் தவிர வேறு எந்த நலனும் முன்னிற்க முடியாது என்கிற அளவுக்கு மாறியிருக்கிறது.

உளவியல் ரீதியாக இந்த சந்தைப் பொருளாதாரம், இந்திய சமூகத்தின் மீது தொடுத்திருக்கும் தாக்குதலானது, மற்ற எல்லாவற்றையும் விட மிக மிக மோசமான ஒரு சூழலுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.  அடுத்தவரை நேசிக்கக் கூட நேரமில்லாமல் சொத்து சேர்க்க கற்றுக் கொடுத்திருக்கிறது.  சக மனிதரிடம் ஒரு வார்த்தை பேசுவதால் என்ன நடக்கப் போகிறது, அதனால் நமக்கு என்ன லாபம் என்று சிந்திக்க இந்த சந்தைப் பொருளாதாரம் கற்றுக்  கொடுத்திருக்கிறது. உறவுகளின் மீது இருந்த அன்பு, பொருட்களின் மீது மாறிய ஒரு வேதனையான தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சந்தைப் பொருளாதாரத்தின் வீச்சு எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்றால், தொண்ணூறுகளில் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைக்காக பெரும் போராட்டங்களை முன்னெடுத்த இடது சாரிக் கட்சிகளே, ஒரு பெரு முதலாளிக்காக ஏழை விவசாயிகள் மீது துப்பாக்கிச்  சூடு நடத்தும் அளவுக்கு மாறிப் போகும் அளவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

இந்தியாவில் முக்கிய அரசியல் முடிவுகளையும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களையும், அரசின் தொழிற்கொள்கைகளையும் நிர்ணயம் செய்யும் அளவுக்கு இன்று பெருமுதலாளிகள், இந்திய அரசியலின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.  அந்த முதலாளிகளின் ஏவலுக்கு ஏற்ப கொள்கைகளை வடிப்பவர்களாக அரசியல்வாதிகள் மாறிப் போயிருக்கிறார்கள்.

உறவுகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டு, நுகர்பொருட்களால் வீடுகளை நிரப்பியிருக்கிறோம்.    உணர்வுகளை கொன்று விட்டு, பேராசைக்கு உரமிட்டுக் கொண்டிருக்கிறோம்.   இன்றைய நமது தலைமுறையே இப்படி பேராசையோடு இருக்குமானால், நாளைய சந்ததி எப்படி இருக்கும் என்ற அச்சமே மேலாங்குகிறது.

இந்த இருபது ஆண்டுகாலத்தில் நமது உளவியலிலும், வாழ்கை முறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்த சந்தை பொருளாதாரத்தால் நாம் பெற்றதை விட இழந்ததே அதிகம் என்றே எண்ணத் தோன்றுகிறது….

இருப்பவருக்கும் இல்லாதவருக்கும், இடையயே பெருகியுள்ள இடைவெளியின் வெளிப்பாடே லண்டன் கலவரங்கள்.  நாமும் அது போன்ற ஒரு எரிமலையின் மீதுதான் அமர்ந்திருக்கிறோம்.

போலியான நகரத்து வாழ்க்கையை வாழ எத்தனை சின்னசின்ன ஆசைகள். 

இளைஞர்கள் நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை, நாம் வாழும் வாழ்க்கையை நமது உலகம்போகும் போக்கை சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். 

செத்து சுண்ணாம்பு ஆகறதுக்குள்ள எத்தனை ஆர்ப்பாட்டம்.



No comments:

Post a Comment