Sunday 5 July 2009

"உழவன் என்று பட்டம்"


இன்றைய டாக்டர் பட்டம் போல, பண்டைத் தமிழகத்தில் "உழவர்' என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது. புலவர் பெருமக்களையும் செங்கோல் வேந்தரையும் வீரர்களையும் ஆசிரியர்களையும் முனிவரையும் "உழவர்' என்று புகழ்மாலை சூட்டி மகிழ்ந்தனர். நான்கு குலத்தாரில் அந்தணர்க்கும் அரசர்க்கும் வணிகர்க்கும் இல்லாத சிறப்பும் புகழும் பெற்றிருந்தார் உழவர். நற்றிணையில் இளங்கீரனார் ஒருசிறிய ஊரைக் குறிப்பிடுமிடத்து,

""கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டாடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்'' (நற்றிணை3:4,5)

என்று வில்லேந்திய வீரர்களை "வில்லேர் உழவர்' என உருவகம் செய்து சிறப்பித்தார். அதாவது, வீரனை உழவர் என்றார் இளங்கீரனார். மருதக்கலியில்(3.1-5), பன்னூல் கற்றுத்துறைபோகிய செந்நாப்புலவரை "உழவர்' என்று சிறப்பிக்கிறார் மருதன் இளநாகனார்.

""பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளும் செல்வர்க்கு
மதிமொழி யிடன்மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீத்த செவிசெறு வாக
முதுமொழி நீரா புலன்நா உழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர!''

இப்பாடலில் வரும் "புலன்நா உழவர்' என்பதற்கு "அறிவினையுடைய நாவாகிய ஏராலே உழுதுண்ணும் புலவர்' என்று பொருள் கூறுவார் நச்சினார்க்கினியர்.
இக்கலித்தொகைப் பாடல் புலவரை, புலன்நா உழவர் என்று சிறப்பித்தது; நற்றிணை, வீரரை "வில்லேர் உழவர்' என்றது. இவ்விரண்டு தொடரையும் உள்ளத்தில் நிறுத்திய வள்ளுவர் தம் குறளில் பயன்படுத்த விரும்புகிறார். புலன்நா உழவர் என்பதற்கு இணையாகக் "சொல்லேருழவர்' என்ற தொடரை உருவாக்கினார்.

""வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை'' -குறள்.872

"வில்லை ஏராக உடைய உழவரோடு பகைகொண்டானாயினும் சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளா தொழிக' என்பது அவர் திருவாய்மொழி. இவ்வாறு புலவரையும் வீரரையும் உழவராக வள்ளுவர் உருவகம் செய்ய சிறப்பை உணர்ந்து மகிழ்ந்த பரிமேலழகர் இக்குறளில் உள்ள அணியை "உருவக விசேடம்' என்றார். அதாவது "சிறப்பு உருவகம்' என்றார்.

புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியராகிய ஐயனாரிதனாரும் மன்னனை உழவனாக உருவகம் செய்து உழவர் குலத்தின் மீது கொண்டுள்ள தம் மதிப்பை வெளிப்படுத்துகிறார். வாகைத்திணை-மறக்களவழி என்னும் துறையிலக்கணம் கூறுமிடத்து,

"முழவுறழ் திணிதோ ளானை
உழவனாக உரைமலிந் தன்று''

என்று பாடுகிறார். "முழவு (மத்தளம்) போன்று திண்ணிய தோளையுடைய மன்னனை ஓர் உழுதொழில் உடைய வேளாளனாக உருவகித்து மிகுந்துச் சொல்லியது' என்பது உரை.

ஏர் எழுபது நூலில் "உழுங்குலத்தில் பிறந்தாரே உலகு உய்யப் பிறந்தார்' என்றும், "செய்யப்பாங்கு படக்கிடந்த செழுஞ்சாலி நன்னாற்றைக் கைப்பாங்கு புகுந்து நடக் கற்றாரே கற்றார்' என்றும் உழவரைப் புகழ்ந்தும் மனநிறைவு அடையாமல் கம்பன் ராமாவதாரத்தில், சரவங்கமுனிவனை நீத்தரிய நெடுங்கருணைக்கு நிலையமான ராமன் சந்தித்து உரையாடும் காட்சியை,

"வரிசிலை உழவனும் மறை உழவனை "நீ
புரிதொழில் என்!அது புகலுதி' எனலும்'' ஆரணிய.சரவண:38

என்கிறார் கம்பர். ராமனுக்கு எத்தனையோ அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள் தந்தும் தணியாத தாகங்கொண்ட கம்பன் ஈண்டு "வரிசிலை உழவன்' என்று கூறி மகிழ்கிறான். வேதங்கள் பயின்றவன் சரவங்கமுனிவன்; அவனை வேறு வார்த்தைகள் கூறிப் புகழ்வதைவிட "மறை உழவன்' என்றால்தான் முனிவனுக்கும் மதிப்பு; தன் தகுதிக்கும் மதிப்பு என்று கருதியே முனிவனை உழவன் என்றான்.

புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் "உழவன் வென்றி' என்ற துறையில் ""தத்துநீர் ஆர்க்கும் கடல்வேலித் தாயர்போல் வித்தித்தரு வான் விளைவு'' என்று தாயாருடன் உழவனை ஒப்பிட்டார். இளங்கோவடிகள் ""பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்'' என்று உழவரை நாடுகாண்காதையில் "காவிரியின் புதல்வரா'கக் கண்டார் அன்று. மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடைபோர்த்து மணக்க மணக்க நடந்த காவிரித் தாய் இன்று கழிவு நீரில் நனைகிறாள்; காவிரிப் புதல்வர் கண்ணீரில் நனைகின்றனர்.

2 comments:

  1. ராகுலின் தொழில் விவசாயம் : லோக்சபா செயலகம் தகவல்

    புதுடில்லி : கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்து அரசியல்வாதியாக உள்ள அமேதி தொகுதி எம்.பி., ராகுலை, "விவசாயி' என, லோக்சபா செயலகம் பதிவு செய்துள்ளது. லோக்சபா செயலகம், தற்போதுள்ள எம்.பி.,க்கள் வாழ்க்கை தொழில் குறித்த குறிப்பை பதிவு செய்து வைத்துள்ளது. அவற்றின் விவரம் வருமாறு: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அவரது மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், நகர்ப்புற விவகாரத்துறை அமைச் சர் ஜெய்ப்பால் ரெட்டி ஆகியோர் விவசாயிகள். கேம்பி ரிட்ஜ் பல்கலைக் கழகத் தில் படித்த அமேதி தொகுதி எம்.பி., ராகுலும், "விவசாயி' பட்டியலில் இடம் பெற்றுள்ளார். பார்லிமென் டில் 300க்கும் அதிகமான எம். பி.,க் கள் கோடீஸ் வரர்கள். இவர்களில் மிலிந்த் தியோரா, நவீன் ஜிண்டால், பிரபுல் பாட்டீல் உள்ளிட்ட 47 பேர், "தொழிலதிபர்கள்' என, லோக்சபா செயலகம் குறிப்பிட்டுள்ளது. கோரக்பூர் தொகுதி எம்.பி., ஆதித்யநாத் ஆன்மிகவாதி, கீர்த்தி ஆசாத் விளையாட்டு வீரர், மேனகா, பிரணாப் முகர்ஜி இருவரும் எழுத்தாளர்கள், முரளி மனோகர் ஜோஷி, கிரிஜா வியாஸ் ஆகியோர் பேராசிரியர்கள். ஜெயபிரதா நடிகை, ஆந்திராவின் அனந்தபூர் தொகுதி எம்.பி., வெங்கட்டராமி ரெட்டி பொருளாதார வல்லுனர், சபாநாயகர் மீராகுமார், "அரசு ஊழியர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. Appreciate your entire effort.

    Your clz mate!

    ReplyDelete