Tuesday 19 May 2009

"வளர்ச்சியும், பகிர்வு மேம்பாடும்" 2009 இன் உலக முன்னேற்ற அறிக்கை

வாசகர்களே வணக்கம், பொருளாதார வளர்ச்சி என்னும் கருத்தில் நம்பிக்கை இல்லாதவன் நான். சீரான இயற்க்கை வளங்களுக்கு ஏற்ப பொருளாதாரம் அமைய வேண்டும் என்ற கருத்தினை இங்குள்ள பல்வேறு பதிப்புகளிலும் பிரதிபலித்திருக்கிறேன். தினமணியில் இன்று வெளி வந்த உலக முன்னேற்ற அறிக்கையில் விவாதிக்கப்பட்டிருக்கும் சில கருத்துக்கள் எனது சிந்தனைகளின் சாராம்சமாக இருப்பதால் இதனை இங்கு முன்கொண்டுவருகிறேன். கட்டுரையின் இறுதியில் எனது கருத்துகளையும் பதித்திருக்கிறேன்.



வளர்ச்சியும்
பகிர்வு மேம்பாடும்

.பழநிதுரை
First Published : 19 May 2009 10:35:00 PM IST



உலக வங்கியால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டுக்கான "உலக முன்னேற்ற அறிக்கை' என் வாசிப்பிற்குக் கிடைத்தது. அந்த அறிக்கையின் தலைப்பே வித்தியாசமாக இருந்தது. ""பொருளாதாரப் புவியியல் மறு உருவாக்கம்'' என்பதுதான் அந்த அறிக்கையின் தலைப்பு.

உலகத்தில் உள்ள பல்வேறு புவியியல் சார்ந்த பொருளாதார மேம்பாட்டு ஏற்றத்தாழ்வுகளை அந்த அறிக்கை பட்டியலிட்டு விளக்கிக் காட்டியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இன்றைய சூழலில் உலகம் எவ்வளவு பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு இயங்கி வருகிறது என்பதை அந்த அறிக்கை படம்பிடித்துக் காட்டியுள்ளது. உலகத்தில் ஒரு சில இடங்கள் மட்டுமே பொருளாதார மேம்பாட்டை எல்லையில்லா அளவுக்கு அடைந்துள்ளன என்பதை எடுத்துக் காட்டினாலும், எல்லாப் பகுதி மக்களும் மேம்பாடு அடைய வாய்ப்புகள் இருப்பதையும் அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.

இத்தகைய எல்லையற்ற ஏற்றத்தாழ்வுகளை அரசாங்கங்கள் தங்களின் சிறந்த ஆளுகையின் மூலம்தான் களைய முடியும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அரசாங்கங்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்குப் பாடுபடுகின்றன என்பதுதான் இன்றைய முக்கியக் கேள்வி.

உலகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த எந்த அளவுக்கு அரசாங்கத்தால் தேவையான சூழல்கள் உருவாக்கப்படுகின்றன என்பதுதான் அடுத்த கேள்வி. அதேபோன்று எவ்வளவுதான் சூழல்கள் சாதகமானவையாக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தும் மனோபாவமும் ஆற்றலும் பெற்ற மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

உலகத்தின் வளர்ச்சி என்பது உலகமய பொருளாதாரச் சூழலில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகவே இருக்கும். இது தவிர்க்க இயலாதது என்றாலும்கூட, வளர்ச்சியின் பலன்களை எல்லாச் சமூகத்திற்கும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளும் இதில் இருக்கின்றன என்பதையும் அந்த அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. உலகத்தில் பொருளாதார வளர்ச்சியானது பெருநகரம் சார்ந்ததாகவும் கடலுக்குப் பக்கத்தில் நிகழ்வதாகவும், சங்கிலித் தொடர்போல் நாடுகள் இணைந்து பொருளாதார மேம்பாட்டுக்குச் செயல்படுவதாலும் ஒரு குறிப்பிட்ட பூகோள வரையறைக்குள்ளே நடைபெறுகிறது என்பதையும் அந்த அறிக்கை விரிவாக விளக்கியுள்ளது.

உலகத்தில் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, வடகிழக்கு ஆசிய நாடுகள் இன்று வளங்கொழிக்கும் நாடுகளாகத் திகழ்கின்றன. இந்த நாடுகள்தான் உலகத்தின் பெரும்பகுதியான பொருளாதாரத்தைத் தங்கள் வசம் வைத்துள்ளன. நாடுகள் வெகுவேகமாக முன்னேறும்போது அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் சீராக முன்னேறி விடுகிறது. ஆனால் இப்படிப்பட்ட செயல்பாடுகள் எல்லா நாடுகளிலும் நடைபெறுவது இல்லை. எங்கெல்லாம் ஆளுகை திறம்பட இருக்கிறதோ, குடிமக்கள் விழிப்புடன் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்போது மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டு விடுகிறது. வளர்ச்சியின் பலன்களை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரப் பங்கீடு செய்வதில் அரசு தீவிரமாகச் செயல்படுவதையும் அந்த அறிக்கை படம்பிடித்துக் காட்டியுள்ளது.


உலக வங்கியின் அந்த அறிக்கை ஒரு வித்தியாசமான செய்தியை நமக்குத் தருகிறது. அதாவது முன்னேற்றம் என்பது சுமுகமாக நடப்பது இல்லை. அது மிகப்பெரிய போராட்டத்தின் அடிப்படையில் வருவதாகும். பொருளாதார மேம்பாட்டுக்காக மக்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து இடம்விட்டு இடம் பெயர்ந்து கடின உழைப்பைத் தந்து செயல்படுகின்றனர். அதுமட்டுமல்ல, இந்தக் கடின உழைப்பு என்பது எல்லாப் பகுதிகளுக்கும் வருவது அல்ல. ஒரு சில இடங்கள் மட்டும் முன்னேற்றத் திட்டங்களைக் கவ்விப் பிடித்துக் கொள்கின்றன.


பொருளாதார வளர்ச்சி எல்லாப் பகுதிகளுக்கும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் சமமாகப் பகுக்கப்பட்டதாக இருப்பதில்லை. இந்த வளர்ச்சியைச் சமமாகப் பங்கிட்டு எல்லாத் தரப்பு மக்களுக்கும் எல்லாப் பகுதிகளுக்கும் சென்றடைய எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி பெறுவதும் கிடையாது. சில நேரங்களில் அரசின் இந்தப் பகிர்மானச் செயல்பாடுகள் வளர்ச்சியையே தகர்த்து விடுவதும் உண்டு.

உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பார்க்கும்பொழுது ஒருசில இடங்கள் எல்லையில்லாத அளவுக்குச் செல்வம் செழிக்கும் நிலைக்குச் செயல்பாடுகள் நிகழ்கின்றன. அமெரிக்காவில் பிறந்த ஒருவன், ஜாம்பியா நாட்டிலிருந்து பிறந்த ஒருவனை விட நூறு மடங்கு சம்பளம் அதிகமாகப் பெறுவான். அதேபோல் ஓர் அமெரிக்கன் ஜாம்பியா நாட்டில் உள்ளவனை விட முப்பது ஆண்டுகாலம் கூட பூமியில் உயிர் வாழ்வான். நியூயார்க்கில் பிறந்த ஒருவன் வாழ்க்கையில் சராசரியாக 4.5 மில்லியன் அமெரிக்க டாலரை வருமானமாகப் பெற்று சிறப்புடன் வாழ்வான். ஆனால் ஜாம்பியாவில் வாழும் ஒருவன் தன் வாழ்நாளில் பத்தாயிரம் டாலர் பெற்று வாழ்க்கையை உயிர் வாழ்வதற்காகவே நடத்துவான்.

நைஜீரியாவில் ஒன்பதாண்டு கல்வி பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் ஒருவன், நைஜீரியாவில் இருப்பவனைவிட எட்டுமடங்கு அதிகமாகச் சம்பாதிப்பான். எனவே உலகத்தில் நாம் எங்கே வாழ்கிறோம் என்பதில்தான் நம் வருமானம் அடங்கியுள்ளது. எனவே உலகத்தில் வருமானத்தை நிர்ணயம் செய்வது என்பது நமக்கு என்ன தகுதி, திறமை, யாரைத் தெரியும் என்பதைவிட எங்கு நாம் வேலை செய்கிறோம் என்பதில்தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகத்தில் ஒருசில இடங்கள் அப்படிப்பட்ட பொருளாதார முக்கியத்துவம் பெற்ற இடங்களாக மாறிவிடுகின்றன. வருமான வித்தியாசம், வாழ்க்கை மேம்பாட்டில் உள்ள வேறுபாடுகள் அனைத்தும் பொருளாதார முன்னேற்றத்தில் விளைபவை என்பதை உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் வேகமாகப் பொருளாதாரம் வளர்ந்துவரும் நாடுகளுக்குப் பக்கத்தில் இருந்தாலோ அல்லது வேகமாகப் பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் மிகப்பெரிய நகரத்துக்குப் பக்கத்தில் இருந்தாலோ பொருளாதார வளர்ச்சி என்பது அருகில் உள்ள பகுதிகளையும், நாடுகளையும், பிராந்தியங்களையும் மேம்பாடு அடையச் செய்யும் என்பதனையும் இந்த அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.

தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது சமமாக இல்லை. பிராந்தியங்கள், பகுதிகள், நகரங்கள் என்று எவையெல்லாம் சந்தைக்கு அருகில் இருக்கின்றனவோ, பொருள் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு அருகில் உள்ளனவோ அவையெல்லாம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பொருளாதார நிலையில் அடைய முடிகிறது. மற்ற பகுதிகள் மற்றும் பிராந்தியங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகள் இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிராகரித்தபொழுதும் அவர்களால் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை மாற்றியமைக்க முடியவில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வு காணவும் முடியவில்லை. ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அரசின் ஆழ்ந்த பரிசீலனையும் தெளிந்த நடைமுறைத் திட்டங்களும் புரிதலுடன் செயல்படும் மக்களின் ஒத்துழைப்பும்தான் இந்நிலைமையைச் சீர்செய்ய உதவும். எனவேதான் அரசியல் கட்டமைப்பிற்குள் வருகின்றவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும் கடப்பாடு உடையவர்களாகவும் இருந்தால் மட்டுமே இந்தச் சாதனையைச் சாதிக்க முடியும் என்று கூறுகின்றனர். இல்லை என்றால் அவ்வப்போது மக்களை ஏமாற்றப் பகட்டுத் திட்டங்களைத்தான் செயல்படுத்த முடியும். இவற்றால் ஏற்றத்தாழ்வுகளைக் களைய முடியாது. 2000-வது ஆண்டில் நான்கில் மூன்று பங்கு பொருள் உற்பத்தி வடஅமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் வடகிழக்கு ஆசியாவிலும் நிகழ்ந்துள்ளது.

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவும், இந்தியாவும் உலகத்தில் மூன்றில் இரண்டு மடங்கு செல்வத்தை வைத்திருந்தன. அன்று இந்த இரு நாடுகளும் உலக மக்கள்தொகையில் பாதியைத் தங்கள்வசம் வைத்திருந்தன. ஆனால் இன்று அதிக எண்ணிக்கையில் மக்கள் வறுமையிலும் படிப்பறிவு இல்லாமலும் குறைந்த வாழ்நாளுடன் வாழும் சூழலிலும் ஒரு குறிப்பிட்ட பூகோள எல்லைப்பகுதியில் வாழ்கின்றனர்.

பொருளாதார வளர்ச்சி மேம்பாடு பொருள் உற்பத்தி இவையெல்லாம் நகரம் சார்ந்ததாக மாறிவிட்ட காரணத்தால் நகரமயமாதல் என்பது தவிர்க்க இயலாததாகவும் மாறிவிட்டது. எல்லையில்லா அளவுக்கு மக்கள் நகரங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். நகர மேம்பாடு என்பது எல்லா நாடுகளிலும் ஒரு சவாலாக இருந்து வருகிறது.

உலகத்தில் ஒரு பக்கம் எல்லையில்லா வளர்ச்சி, மறுபக்கத்தில் வறுமை, கல்வியறிவின்மை, சுகாதாரக் கேடுடன் வாழும் மக்கள். இந்தச் சூழல் இன்றைய வளர்ச்சிக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. இரண்டு நூற்றாண்டுகளில் பொருளாதாரச் செயல்பாடுகள் புவியியல் சார்ந்து வேற்றுமைகளை வருமானத்திலும், பொருள் உற்பத்தியிலும் கொண்டு வந்துவிட்டன. ஒரு தலைமுறை பொருளாதார மேம்பாட்டு ஆராய்ச்சியில் ஓர் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டது. அதாவது வளர்ந்த பொருளாதாரம் சுமுகமாக எல்லா இடங்களுக்கும் பரவிவிடும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது.

உலகத்திலேயே பெரிய நகரமான டோக்கியோ 35 மில்லியன் மக்களை அதாவது ஜப்பானின் நான்கில் ஒரு பங்கு மக்களை வெறும் நான்கு சதவிகித பூமியில் வைத்துக்கொண்டுள்ளது. அதேபோல் உலகத்திலேயே வளர்ந்த பொருளாதார நாடான அமெரிக்காவின் 35 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் இடம்பெயர்ந்து வருகின்றனர். உலகிலேயே வளமான பகுதியாக விளங்கும் மேற்கு ஐரோப்பா எல்லா வளர்ந்த நாடுகளின் கூட்டுத் துணையுடன் பொருளாதாரத் தொடர்பினை ஏற்படுத்தி மேலும் பொருளாதார வளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இன்று இந்தியாவில் ஒரு சில மாநிலங்கள் வளர்ச்சியை நோக்கி மிக வேகமான நடைபோட்டு வருகின்றன. குறிப்பாகத் தமிழகம் போன்ற மாநிலங்கள் முன்னணியில் இருந்தாலும் அடைந்த வளர்ச்சிகளை பகிர்மானம் செய்வதில் நமக்கு இருக்கும் சிக்கல்கள் ஏராளம். சென்னை வளர்கிறது. பெங்களூர் வளர்கிறது. மும்பை வளர்கிறது. மக்கள் குவிகின்றனர். தமிழகம் மிக வேகமாக நகரமயமாகி வருகிறது. கிராமம் வெறிச்சோடிப் போய்க்கொண்டிருக்கிறது. நமக்கான இன்றைய சிக்கல் வளர்ச்சியைக் கொண்டு வருவதில் அல்ல. அவற்றின் பலனைப் பிரித்துக் கொடுப்பதில்தான் இருக்கிறது. இதில்தான் நாம் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும்.

பெருகிவரும் மக்கள்தொகை அடர்த்தியைக் குறைப்பதும் நகர்ப்புறங்களுக்கு மக்கள் குடிபெயர்வதைத் தடுப்பதும் அடைந்த பொருளாதாரத்தை சீரான அளவில் பங்கிட்டு வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும் தான் இன்றைய அரசாங்கத்தின் முக்கியக் கடமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் உலக வங்கி அலசி ஆராய்ந்து தனது அறிக்கையின் முடிவாக வெளிப்படுத்தியுள்ளது. இதுதான் உலக யதார்த்தமும்கூட.


எனது எண்ணம் : கிராமங்கள் வெறிச்சோடி போவதை தடுக்க வேண்டுமெனில் உழைப்பவர்களை உழைக்க விட வேண்டும். நகரத்து சுகபோகிகளின் சுகத்திற்கு கிராமத்தை முக்கியமாக விவசாயத்தை தானியங்கி யாக்கி, கிராம மக்களின் வாழ்வையும் சுகபோகமாக்கி, அவர்களை சோம்பேறி ஆக்கும் இந்த செயற்கையான "கச்ச எண்ணெய் பொருளாதாரம்" வீழ்ந்து, "மனித உழைப்பு சார், இயற்கையோடு ஒன்றிய சமசீர் கிராமிய பொருளாதாரம்" மலர வேண்டும். இதற்கு மிகப்பெரிய தொலைநோக்கு திட்டங்களை, மக்களை அடிப்படையாக கொண்டு இயற்க்கை வள மீட்ப்பில் காட்டி, ஆடம்பர சுகபோக பொருளாதாரத்தை விட்டொழித்து எளிமையான வாழ்க்கைமுறையை அமைக்க முற்ப்படுவோமாயின் தீர்வு கிட்டும். இல்லையேல் இவ்வளவு மக்கள் தொகை இருந்தும் நாடு பாழாயி போய் விடும்.

No comments:

Post a Comment