Monday 27 April 2009

LK Series 2 வேலிக்காத்தான் (எ) டெல்லி முள் என்னும் வாழ்வாதாரக்கொல்லி






நான் பல்கலையில் படிக்கும் சமயம். கோயமுத்தூர் வடவள்ளி பகுதியில் ஒரு வீட்டில் ரெண்டு ஆண்டு தங்கியிருந்தேன். அந்த வீட்டை சுற்றிலும் நிறைய ப்ளாட்டுகள் வீடு கட்டுவதற்காக போடப்பட்டு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளே சில புற்கள் இருந்தது. சில ஆடுகள் உள்ளே நுழைந்து புற்களை மேயும். இரண்டு மாதங்கள் கழித்து பார்த்தல் ஏகத்திற்கும் சிறு சிறு முற்ச்செடிகள் முளைத்திருந்தன. நான்கு மாதங்கள் கழித்து பார்த்தால் முழுவதுமாக அந்த முற்ச்செடி மூடிவிட்டது. அந்த நிலத்தின் உரிமையாளர் வந்து பார்த்துவிட்டு ஒரு புல்டோசரை கொண்டு வந்து அவற்றை அகற்றினார். பிறகு ஒரு வருடம் கழித்து மீண்டும் அதே முற்ச்செடிகள் நிலத்தை குடைபோல் மூடியது. ஆடு கூட இனிமேய புள் முளைக்காத அளவுக்கு ஒரு அடர்நிழல் மற்றும் முள். வருடா வருடம் சங்காராந்திக்கு சிரை எடுப்பது போல் இப்படி ஒரு வேலை செய்ய வேண்டும் இந்த முள்ளை அகற்ற.


அது போல், எங்களுடைய மானாவாரி நிலமொன்று. மூன்ற ஏக்கர் பரப்பில் இருந்தது. பல வருடங்களுக்கு முன் ஓடை நீர் வற்றியதால் தொடர் சாகுபடி அங்கே இல்லை. வருடம் ஒரு முறை மானாவாரி சோளம் மட்டும் விளையும். பிற காலங்களில் ஆடு மாட்டு மேய்ப்போர் நிலத்தில் மேய்ப்பர். சில வருடம் தவிர்க்க முடியாத காரணத்தால் பக்கத்து வயல்காரர், நிலத்தை உழவில்லை. மூன்று வருடம் கழித்து பார்த்தால் ஒரு அடர்ந்த காடு உருவாகி இருந்தது. உள்ள அந்த மரத்தை தவிர புல் பூண்டு இல்லை. ஹிரோஷிமா, நாகசாகி போல் காட்சியளித்தது. இனி இந்த முற்க்காட்டை சுத்தம் செய்வது என்பது மிக கடினமான ஒன்று. அப்படி சுத்தம் செய்தாலும் தொடர்ந்து அதில் விவசாயம் செய்யா விட்டால் காலி. முற்க்காட்டை இனி புல்டோசர் விட்டு அழிக்க வேண்டும் அல்லது விறகு வெட்டுவோரிடம், கரி சுடுவோரிடம் கொடுத்து காட்டை சுத்தம் செய்து தர சொல்ல வேண்டும். இப்போது வினை என்னவென்றால் எங்கள் காட்டில் மேயும் ஆடு, மாடுகள் எங்கிருக்கும் முற்ச்செடியின் காய்களை தின்று இங்கே சானமிடுவதால் எங்களின் நிலம் முழுவதும் முற்ச்செடிகள் முளைக்க துவங்கிவிட்டன. ஆறு மாதத்திற்கு ஒரு முறை நிலத்தில் உள்ள சிறு முற்ச்செடிகளை களையாவிட்டால் நிலத்தை மறக்க வேண்டியதுதான். ம்ம்ம்ம்.

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ள இந்த செடியின் பெயர் வேலிக்காத்தான் () டெல்லி முள். இது இந்தியாவிற்கு இந்திய மண்ணிற்கு பூர்வீகமானது அல்ல. வேளான் ப்லகலையால் காமராஜர் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த செடி இன்று தென்னிந்தியாவை பாலைவனமாக்கிவிடும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. நமது வாழ்வுக்கு உலை வைக்குமிந்த செடியினை பற்றியும் அதன் தன்மை குறித்தும் இங்கு பார்ப்போம்.

பரவிய வரலாறு:

இந்த வேலிமுள் செடியானது தென் அமெரிக்காவின் மேற்க்குகடலோரம் பாலைநிலங்களில் வளரும் மரமாகும். ஏகாதிபத்திய காலத்தில் போர்த்துகீசியர்களால் உலகமெங்கும் கொண்டு செல்லப்பட்டது. 1828 ஆம் பரவ ஆரம்பித்து இந்த மரம் 1915 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வழியாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டு பின்னர் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரப்பப்பட்டது. இன்று உலகம் முழுவதுமுள்ள மிதமான வெப்ப, மற்றும் வெப்பமான வறண்ட பிரதேசங்களில் இதனை காண முடியும். இந்த மரம் மிகவும் வறண்ட சூழலையும் தாக்கு பிடித்து வளரக்கூடியது. கடுமையான வெயில் காலத்தில் இலைகளை சுருட்டி நீர்போக்கினை தடுத்து உயிர் வைத்திருக்கும். சிறிது மழை கிடைத்தால் போதும் சட்டென வளரும். நீர் தேங்கி இருக்கும் நிலத்தில் வைத்தாலும் அதனையும் சமாளித்து உயிர்வாழும். மிதமான நீர் மட்டும் வெப்ப நிலையுள்ள சூழல் கிடைத்தால் அவ்வுளவுதான், புற்றீசல் போல புழுத்து விடும்.

அத்தோடு நில்லாமல், இந்த மரம் தனது ஒரு கிலோ மரத்தினை உற்பத்தி செய்ய 1400 லிட்டர் தண்ணீரை உறிஞ்சிகிறது. தனக்கு சுற்றிலும் அடியிலும் எந்த ஒரு மரமோ, செடியோ முளைக்காத வண்ணம் இதனது நச்சுத்தன்மை விரவிக்கிடக்கிறது. காற்றின் ஈரமும் குறைந்து விடுகிறது. இது வளரும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கபடுவதாக தகவல்கள் உள்ளன. சூடான் நாடு இதனை அழிக்க போராடி வருகிறது.

பயன்பாடு என்ற நோக்கில் பார்த்தால், நல்ல விறகு. கரி சுடும் அளவுக்கு மிக அருமையான விறகு. வணிக நோக்கில் இதனை தொழிலாக செய்ய முடியும். இதனது பழங்கள் நல்ல கால்நடை தீவனம். எப்படிப்பட்ட நிலத்திலும் குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் வளருவதால் இதன் பயன்பாடு விறகிற்கு அதிகமாக இருக்கிறது.

எனினும் இதனது தீய விளைவுகளான மண்ணின் வளம் குறைக்கும் தன்மை, பிற பயிர்களை வளர விடாமல் செய்யும் தன்மை, நீர் அபரிதமாக உறிஞ்சும் தன்மை, நிலத்தை பாலைவனமாக்கும் தன்மை, போன்றவை மிக அபாயமானவை. இதனை ஊக்குவிக்கும் விஞ்ஞானிகள் நீண்டகால நோக்கில் சுற்றுசூழலுக்கு எப்படிப்பட்ட கேடு விளையும் என்று சிந்தித்தால் மிக நலமாக இருக்கும். நமது வாழ்வாதாரம் சிதையைய இந்த செடி மட்டுமே போதும். நீரும், நிலமும் பாழ்பட்டுபோய் விடும்.


அந்நியர்கள்
மட்டும் ஒரு நாட்டிற்கு கேடு அல்ல. இது போன்ற அந்நிய அதுவும் பாலை நிலத்து மரங்களும் கேடே! நல்ல நிலத்தில் விட்டால் அது அதனையும் பாலை நிலமாக்கிவிடும். விழித்துக்கொள்ளுங்கள் மக்கா! வேலிமுள் மரங்கள் இல்லாத கிராமங்களை உண்டாக்குவோம். இல்லையேல் ஒரு காலையில் உங்களுக்கு வேண்டும்கிற மரங்களை இந்த மரம் ஸ்வாகா செய்து விடும்.


No comments:

Post a Comment