"காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்."
"தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?"
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்".
-மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்
No comments:
Post a Comment