Tuesday, 30 April 2013

நாட்டு விதைகள் மற்றும் விதை சேமிப்பு – ஒரு பறவையின் பார்வை


(
அதன் அவசியமும், முக்கியத்துவமும்)

            “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்என்பது நம் முன்னோர் வாக்கு. முளைக்கும் விதை எங்கனம் உள்ளதோ அங்ஙனமே விளைச்சல் கிட்டும். சூழ்நிலை, நீர், மண்வளம், மனித உழைப்பு என அனைத்தும் நன்றாக இருந்து, “விதைஅந்த சூழலுக்கும், மண்ணுக்கும், நீருக்கும் ஏற்ப வளரவில்லை என்றால் அனைத்து வளங்களும் விழலுக்கு இறைத்த நீராகிவிடாதா? வெறும் விளைச்சலை, வியாபாரத்தை முன்னிறுத்திக்கொண்டு வறட்சி, நோய், மோசமான மண்வளம் இவற்றை சமாளிக்காத வித்துக்களை இட்டு பின்பு நீருக்காக ஆழ்துளை கிணறுகளை இடுதல், நோய்களுக்காக விலை உயர்ந்த நச்சுப்பொருட்களை வழியின்றி தெளித்தல், கனிம உரங்களை விலை கொடுத்து வாங்கி இடுதல் என செலவுகளை ஏற்றி செய்யும் விவசாயம் லாபமில்லாததாகிவிடாதா? இது குறித்து சமீபகாலங்களில் விவசாய மக்களிடம் விழிப்புணர்வு வந்தாலும் அதனைப்பற்றி மேலும் பலகோணங்களில் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமுண்டு. இதைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பெருகக்கூடிய செல்வத்துள் ஒன்று வித்துக்கள்
            ரூபாய் நோட்டுக்கும், வங்கியில் சேமிப்பில் இருக்கும் உருவம் தெரியாத, உயிரற்ற பணத்தின் எண்ணுக்கும் கொடுக்கப்படும் மதிப்பு உயிருள்ள, பெருகக்கூடிய, உணவிடக்கூடிய விதைகளுக்கு, சமீபதலைமுறைகளில் விவசாயிகளால் வழங்கப்படவில்லை. அதன் எதிர்வினையையே இன்று பலவிவசாயிகள் அனுபவிக்கிறார்கள். ஜிம்பாப்வே என்ற ஆப்பிரிக்க நாட்டில் பொருள் உற்பத்தி குறைந்து பணவீக்கம் அதிகமாகி, பல லட்சம் சதவீதத்தை கடந்துள்ளது. அதனால், அந்நாட்டில் காகித பணத்திற்கு மதிபற்றுப்போய் அரசாங்கம் கோடிக்கணக்கான மதிப்பை ஒரு தாளில் அச்சடிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு 1,000,000,000,000 (ஒரு லட்சங்கோடி) ஜிம்பாப்வே டாலர் நோட்டை அந்நாட்டு ரிசர்வ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. வணிகங்களில் அந்நாட்டு பணத்தை வாங்க மறுக்கிறார்கள். கூடைகூடையாக வணிகக்கூடங்களில் இந்த தாள்களை புழங்குகிறார்கள். ஒரு டின் தான்யம் வாங்க 0.3 கிராம் தங்கம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உருவாக்கி உள்ளது. காகித பணமதிப்பை விட்டு தங்கத்தின் மதிப்பிற்கு சென்றுவிட்டது அந்நாடு. ஒரு வேலை உணவு உட்கொள்ள   0.1    கிராம் தங்கத்தை கொடுக்க வேண்டும். இதனால் மக்கள் தங்கத்தை தேடி அலைந்து ஓடைகளில் தங்கத்தை சலித்து எடுக்கின்றனர். பல டன் மண்ணை சலித்தால் மட்டுமே இந்த சொற்ப அளவு தங்கம் கிடைக்கும். தங்கம் கொடுத்தாலும் தான்யம் கிடைக்காது என்ற நிலை ஏற்ப்பட்டுவிடும் சூழல் வரலாம். இது மனிதனின் விவசாயத்தின் ஆதார செல்வங்களை இழந்த மறந்த அந்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நிலை.

            இனி. நமது கோயில்களில், வீடுகளில், திருமணங்களில் ஆசீர்வதிக்கும் போதும், வாழ்த்தும் போதும் புரோகிதர்கள்/அர்ச்சகபெரியோர்கள்தனம், தான்யம், பஹும் பசு, புத்திர லாபம், சதட்ஸம்வத்சரம் தீர்க்கமாயுகுஎன்றும், வீட்டு மூத்தவர்கள்பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கஎன்றும் வாழ்த்துவர். இதில்,

தனம்மண் வளம்மண்ணின் நீர்வளம் (பெருகக்கூடியவை)
தான்யம்இணைவு தான்யங்களான  நவதானியங்கள் (பெருகக்கூடியவை)
பசுவீடு கால்நடைகள் முக்கியமாக நாட்டுப்பசு (பெருகக்கூடியவை)
புத்திரன்வாரிசு, சந்தானம் (பெருகக்கூடியவை)

            இந்த நான்கு பெருகக்கூடிய செல்வத்துள் தலையாயது மண்வளம், அதன் நீர் வளம். அந்த நீரை அழிக்கூடிய வனவளம் மற்றும் மலைவளம். அடுத்தது தான்யம். தான்யம் இருந்தால் மட்டுமே பசிதீர்க்க முடியும். அத்தகைய தான்யம் விளைய நல்ல விதையே ஆதாரம். எனவே, விதைகளே உண்மையான செல்வம். தங்கமோ, பணமோ அல்ல. மேற்கூறிய தனம் (நமது நிலம்), தான்யத்துடன் (நாட்டு விதைகள்), பசுவும் (நாட்டுமாடு), புத்திரன் (உழைக்க குடும்ப வாரிசு, குலகொழுந்து) இருந்தால் மட்டுமே விவசாயம் செழித்து பசிப்பிணியின்றி நூறு ஆயுசு (தீர்க்காயுசு) வாழமுடியும். எனவே, பெருகக்கூடிய இவ்வளங்களே என்றும் உண்மையாக மதிப்புடையவை. பணத்தையும், தங்கத்தையும் உண்ணமுடியாது என்பதை இன்றிருக்கும் விவசாய பொருளாதார நிபுணர்கள், பொருளாதார அமைச்சர்கள், திட்டகமிசன் அதிகாரிகள் போன்றவர்கள் உணர வேண்டும். இவர்கள் கூறுவதை நம்பாமல் இந்த நான்கு செல்வங்களை விவசாயிகள் தக்கவைக்க முற்படவேண்டும்.

ஆதாரமான ஒரு வளம் – “நாட்டுவிதைகள்:
            “நாட்டுமாடு, “நாட்டுவிதைகள், “தேசி” பயிர்கள் என வழக்கப்படுவதில் இந்தநாட்டுஎனும் ஒரு வார்த்தை அடைமொழியாக சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்மறையாகசீமைமாடு, “சீமைவிதைகள், விதேச பயிர்கள் என கூறுகிறோம். நாடு என்றால் எந்த நாடு இந்தியாவா? இல்லை இலங்கையா? எது நாடு? “நாடுஎன்ற தமிழ் வார்த்தைக்கு நாடுதல் எனப்பொருள் கொள்ளலாம். இன்று எப்படி ஒவ்வொரு மொழிவாரி மாநிலங்களுக்கு ஒரு வழக்காடு(நீதி) மன்றம் இருக்கிறதோ அது போன்று பண்டைய இந்தியாவில் ஒவ்வொரு ஊருக்கும் பஞ்சாயத்து, தேசத்திற்கு மன்னர்கள் என நீதி கேட்டு நாடி செல்ல ஒரு அமைப்பு இருக்கும். அந்தந்த தேச மன்னர்கள் காட்டை அழித்து குடியிருப்பு ஏற்படுத்தி நாட்டில் மக்களை குடிவைத்து அவர்கள் பிரச்னையை நாடி சென்று தீர்த்து குறையின்றி வைத்திருப்பார். அவர் காடழித்து நாடு உருவாக்கி ஆளும் பகுதியை அவரது பெயரால் தேசம் என்றழைப்பர். (உதாரணம் : சோழ தேசம்சோழனது தேசம்). சோழனால் குடி வைக்கப்பட்டு சோழனை நாடி சென்று அவரிடம் முறையிட்டு நீதி கேட்பவர்கள் சோழ நாட்டு மக்கள்சோழியன் என்று அழைக்கபடுவர். இது போல பண்டைய பாரத வர்ஷமான (பருவமழை பெய்யும் பகுதி; கந்தகார் முதல் பிலிப்பைன்ஸ் வரை) ஐம்பத்தாறு நாடுகளை/தேசங்களை அந்த அந்த பகுதிக்கான நீர்ப்பிடிப்பு, நில மட்டம், மண்வளம், மலைவளம் சூழல்கள் (Agro-Geo-hydro-Climatic zones) போன்றவற்றை கொண்டு பிரித்து மன்னர்கள் நீதிநெறிகளை (தேசநெறி- தேசதர்மம் – Ethics and Morality ) ஏற்படுத்தி அதனை வழுவாமல் ஆட்சிபுரிந்து வந்தனர். இத்தகைய இயற்கை சூழல் கொண்டு நாடுகள் பிரிக்கப்பட்டதால் அந்நாட்டில் இருக்கும் மரம், மிருகம், மண், மனிதன் என அனைத்தும் ஒரு குணம் பெற்று இருந்தன. அதனையே மையமாக வைத்து விவசாயமும் நடை பெற்றது. அதனாலேயே அவர்களது உணவுப்பழக்கமும் அந்த தேச வளத்திற்க்கேற்ப இருக்கும். இந்த நாடுகள் அதற்குள் உபநாடுகளாக பதினெட்டு பட்டிகளாக, கிராமங்களாக பிரிக்கப்படிருக்கும்.


ஜம்புதீவில் (நாவலந்தீவில்) பாரதவர்ஷத்தில் உள்ள அம்பத்தாறு தேசங்கள்
ப்ரம்மாவர்த்தம் (வடமேற்கு, மேற்கு இந்தியா, ஆப்கன்வரை )
ஆர்யாவர்த்தம் (மத்திய, கிழக்கு இந்தியா முதல் வடகிழக்கு ஆசியா வரை)
தக்ஷணபதம் () தண்டகாரண்யம் என்கிற தென்னிந்தியா
1.     காஸ்மீரம் தேசம்
2.     மத்ர தேசம்
3.     காந்தார தேசம்
4.     பர்ப்பர தேசம்
5.     வநாயு தேசம்
6.     சிந்து தேசம்
7.     சௌவீர தேசம்
8.     மாளவ தேசம்
9.     கூர்ஜர தேசம்
10.  அவந்தி தேசம்
11.  தசார்ண தேசம்
12.  விதர்ப்ப தேசம் 
13.  ஆபீர தேசம்
14.  சாலவ தேசம்
15.  த்ரிகர்த்த தேசம்
16.  கேகேய தேசம்
17.  விராட தேசம்
18.  பாஹ்லீக தேசம்
19.  குரு தேசம்
20.  சூரசேன தேசம்
21.  குந்தல தேசம்
22.  மத்சய தேசம்
23.  குந்தி தேசம்
24.  நிஷத தேசம்
25.  சேதி தேசம்
26.  நிஷாத தேசம்
27.  கோசல தேசம்
28.  பாஞ்சால தேசம்
29.  நேபாள தேசம்
30.  ஆராட்ட தேசம்
31.  ஒட்டர தேசம்
32.  பிராக்ஜோதிஷ தேசம்
33.  காமரூப தேசம்
34.  அங்க தேசம்
35.  விதேக தேசம்
36.  வங்க தேசம்
37.  மகத தேசம்
38.  ஹேஹேய தேசம்
39.  காம்போஜ தேசம்
40.  அருண தேசம் 
41.  உத்கல தேசம்
42.  கலிங்க தேசம்
43.  யவன தேசம்
44.  கொங்காண தேசம்
45.  மாராஷ்டிர தேசம்
46.  குளிந்த தேசம்
47.  ஆந்திர தேசம்
48.  கர்நாடக தேசம்
49.  த்ரவிட தேசம் (தொண்டை நாடு)
50.  சேர தேசம்
51.  சோழ தேசம்
52.  பாண்டிய தேசம்
53.  கேரள தேசம்
54.  துளு தேசம்
55.  ஈழ தேசம்
56.  சிம்மள தேசம்
ஆக அம்பத்தாறு தேசங்கள்

            ஆக, இந்த நாடுகளை கொண்டே நாட்டு மாடு, நாட்டு விதை என்று கூறும் வழக்கம் உள்ளது. தஞ்சாவூரில் இருப்பது சோழநாட்டு மாடு, சோழநாட்டு நெல், குஜராத்தில் இருப்பது கூர்ஜர நாட்டு கிர் மாடு, அஸ்ஸாமில் இருப்பது காமரூப நாட்டு நெல், ஒரிசாவில் இருப்பது ஒற்ற தேச நெல் இப்படி இன்றைய இந்திய பிராந்தியங்கள் ஒவ்வொன்றுக்கும் இந்த தேச/நாடு கணக்குகளை சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றையே இன்றைய மக்கள் சுருக்கமாக நாட்டு விதை, தேசி மாடு என்று குறித்து செல்கின்றனர். மன்னராட்சியை கேலி செய்பவர்கள் இந்த அறிவுபூர்வமான இயற்கை  தேச/நாடு உருவாக்கம் அதில் நிலைத்துவாழ வேண்டிய சீர்முறைகள் வழிமுறைகளை என்றாவது எண்ணிப்பார்த்ததுண்டா? வெள்ளைகாரர்கள் விட்டுப்போன ஏகாதிபத்திய பிரிவினைகள், சுதந்திர இந்தியாவின் மொழி பிரிவினை போன்றவற்றையே மையமாகக்கொண்டு இன்றைய ஆட்சி வழிநடத்தப்படுகிறது. இதனாலேயே இயற்கை வளங்களான, நமது நதிகள், நெல் ரகங்கள், காடுகள், மண் வளம் ஆகியவை சூறையாடப்படுகின்றன என்பதை மறக்க வேண்டாம். கர்நாடகாவில் மழையை பயன்படுத்தி அவர்கள் கேழ்வரகு உண்ணும் வரை காவிரிக்கும் குழப்பம் வரவில்லை. அங்கே அணை கட்டி நெல், கரும்பு போன்ற நஞ்சைப்பயிர்களை புஞ்சையில் பயிரிட ஆரம்பித்த பிறகே தஞ்சைக்கு வந்தது சோதனை. அவரவர் அவரவர் தானியங்களை பயிரிட்டு அவரவர் தேசமுறையை கடைபிட்த்திருந்தால் இந்த சோதனைகள் வந்திருக்காது.


            மொழியின் அடிப்படையில் இந்தியாவை துண்டாடினாலும், இயற்கை கலாச்சார மையம் கொண்ட நமது வாழ்க்கை முறையால் நமது பாரம்பரிய நாட்டு விதைகள், நாட்டு மாடுகள் என அனைத்தும் காக்கப்பட்டு வருகின்றன. இன்றும் தமிழகத்தின் பதிமூன்றுக்கு மேற்ப்பட்ட நாட்டு மாடுகள் சேர () கொங்க, சோழ () சோர, பாண்டிய, தொண்டை () பல்லவ, தெற்கு மகத () நடுநாடு ஆகிய பிரிவுகளில் தனித்தனி இனங்களாக வாழ்ந்து வருகின்றன. இந்த பண்டைய தமிழகத்தின் நாடுகளே இன்றும் பொதுப்பணித்துறையின் மண்டலங்களாக விளங்குகிறது. ஏனென்றால், பொதுப்பணித்துறை மண்டலங்கள் ஆறு, மலைகளை கொண்டு நிர்வாகத்திற்காக பிரிக்கப்படுபவை. அதனாலேயே, அக்கால மன்னர்களின் தேசங்களோடு இந்த மண்டலங்கள் ஒத்துபோகின்றன. தமிழ்நாடு விவசாய பல்கலையின் விவசாய-சூழலியல் மண்டலங்களும் (Agro-climatic zones) இங்ஙனமே இந்த தேசங்களின் எல்லைகளுக்கு ஒத்துப்போகும். எனவே, “நாட்டுஎன்ற விதைகளின், மாடுகளின் அடைமொழிக்குள் இத்தனை இயற்கை சார்ந்த விஷயங்கள், இயற்கை அடிப்படையிலான மன்னர்களின் நிர்வாகங்கள் ஒளிந்திருக்கின்றன. எனவே, பாரத பாரம்பரியம் என்பது மிகவும் அறிவிப்பூர்வமானது, சீரான வாழ்க்கையை பலகாலத்திற்கு வழக்கும் நிர்வாகம், கட்டுப்பாடு படைத்தது என்பதை மறக்கக்கூடாது. “முன்னோர் வாக்கும், முதுநெல்லிக்கனியும் முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்,“ என்னும் சொலவடையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.


வித்தின் வீரியம் :
            இங்கனம் மண், சூழல், நீர் சார்ந்து இயற்கையிலேயே உருவான அந்தந்த நாட்டு விதை தான்யங்களை  மக்கள் பிரித்தெடுத்து பலதலைமுறைகளாக பக்குவப்படுத்தி ( Domestication)  அதனில் கூடுதல் விளைச்சல் எடுக்கும் திறனை விதை தேர்வு, சேமிப்பு மூலமாகவே பெருக்கினர். பல ஆயிரம் வருடங்களாக இவ்விதைகள், அந்த குறிப்பிட்ட நிலங்களில் (நாட்டில்/தேசத்தில்) பயிரிடப்பட்டு அந்த தேசத்தின் வறட்சி, வெள்ளம், வெய்யில், நோய்கள்) போன்றவற்றை தாங்கி வளரும் வண்ணம், பக்குவப்படுத்தப்பட்டவை. இவ்வித்துக்கள் அம்மண்ணுக்கும் அந்நாட்டு பகுதிகளுக்குள்ளும் வீரியமாக வளரும். பிறநாட்டிலோ (விதேசம்), பகுதியிலோ இட்டால் அதன் வீரியம் குறைந்து போகும். உதாரணத்திற்கு நாகப்பட்டினத்தில் விளையும் உவர் மண் நிலரகங்களை திருச்சியில் இட்டாலோ, ஈரோடு போன்ற மலைசார்ந்த மேட்டுபகுதியில் உள்ள புழுதிக்கார் போன்ற ரகங்களை திருச்சியில் இட்டாலோ வளராது. “Be a Roman in Rome”, அதாவதுரோமில் ரோமானியரைப்போல் வாழ்என்ற பழமொழிக்கேற்ப அந்தந்த மண்ணுக்குரிய மாட்டையும், தானிய ரகங்களையும் பயிரிட்டு அந்த தானியங்களை உண்டாலே மக்களுக்கு அவர்கள் வாழும் சூழலில் வாழக்கூடிய அளவுக்கு உடல் பலப்படும். ஆரோக்கியம் பெருகும். நாட்டு விதைகளின் வீரியமே, அதனை உண்ணும் மனிதனின் வீரியத்தையும் பெருக்கும். இன்று அயல் பிரதேச உணவுகளை உண்டு நாம் நமது வீரியத்தை இழந்து நிற்கிறோம்.


விதைதேர்வு:
            விதையின் வீரியம் நாட்டு ரகங்களில் அதிகாமாயிருக்கிற காரணத்தை கண்டோம். ஆனால், இந்த வீரியம் மண்ணில் தலைமுறைக்கும் நாம் பயிரிடுவதால் குறையாமல் இருக்க வேண்டுமெனில் அதற்கு விதைதேர்வு முக்கியம். விதிகளின் வீரியத்தை அதிகப்படுத்தவும், தக்க வைக்கவும் வேண்டுமெனில் அந்த விதையை அம்மண்ணிலிருந்து வேறு மண்ணுக்கு (வேறு பிரதேசங்களுக்கு) மாற்றக்கூடாது. அந்த மண்ணிலேயே ஒரு பகுதியில் நல்ல வளமிட்டு, பயிரிட்டு நன்கு ஆரோக்கியமாக கிளைத்து வளரும் வண்ணம் செய்து, அவற்றுள் நன்கு தூர்கட்டியுள்ள (நெல்லில்) நோயற்ற, அதிக மணிகளை கொண்ட கதிர்களை அறுவடை செய்து சேமித்துக்கொள்ள வேண்டும். இப்படியே, விதைகளை தேர்வு செய்து பல தலைமுறைக்கும் செய்யும்போது, நல்ல விளைச்சல் கிடைக்ககூடிய ரகமாக அந்நெல் மாறும். தலைமுறைக்கும் விதைதேர்வே முக்கியம். இதனாலேயே, பல நெல் ரகங்கள் இந்நாட்டில் உருவாகியுள்ளன. நாட்டு மாடுகளில் பால் உற்பத்தியை பெருக்க வேண்டுமெனில், நன்கு பால் கறக்கும் தாய்ப்பசுவிலிருந்து பிறக்கும் காளையை பின்பு இதே போல், பால் நன்கு கறக்கும் பசுவுடன் சேர்க்க வேண்டும். இப்படியே பால்திறனை முன்னிறுத்தி இனவிருத்தி செய்தால் சில தலைமுறைகளில் பால் அதிகம் கறக்கும் பசுக்களை உருவாக்கலாம். வண்டி இழுக்கும் காளைகளுக்காக தமிழகத்தில் இனவிருத்தி செய்யப்பட்டதால், பசுக்கள் பால் திறன் குறைந்து காணப்படுகிறது. மாடாக இருந்தாலும், பயிராக இருந்தாலும் அந்த பிரதேசத்தை விட்டு வெளியே இனப்பெருக்கம் செய்தால் அதன் வீரியம் காலப்போக்கில் குறைந்து அழிந்தும் போகும். சூழல் மிகவும் முக்கியமானது. இதனாலேயே, பிரதேச வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் இந்நாட்டில் செயல்பட்டு அந்தந்த பிரதேச பயிர் ரகங்களில் ஆய்வு மேற்கொள்ளுகின்றன. எனவே, விதைதேர்வு என்பது எதற்காக செய்கிறோம் என்பதை பொருத்து அமைய வேண்டும். விதைதேர்வு நல்ல ஆரோக்கியமான வித்துக்கு வழிவகுக்கும்.

விதை சேமிப்பு:
            விதை சேமிப்பே விவசாயத்தின் மூலதனம். வீட்டிற்க்கான தானியமாக இருந்தாலும், காய்கறி வித்துக்களாக இருந்தாலும் அவற்றை தேர்ந்தெடுத்து சேமிப்பது நமது வாழ்வில் வழக்கமான ஒன்று. கலங்கள், கோட்டைகள், சான வரட்டி, கோயில் கலசங்கள் என பல வழிமுறைகளில் விதைகளை சில பல வருடங்கள் வரை சேமித்து வைக்கும் வழக்கம் நம்மிடமுள்ளது. “நாட்டுரகங்களிலிருந்து, “சீமைமற்றும்கலப்புரகங்களுக்கு நாம் மாறிய போது பல நாட்டு ரகங்களை இழந்தோம். பணத்திற்கு விதைகளை வாங்கி சூழ்நிலைக்கு ஒவ்வாத வித்தினை கொண்டு அதனை காப்பாற்ற மேலும் கடன்பட்டோம். இதனிடையில் பெருகும் நாட்டுபசுவினை விடுத்து பெருகாத, காசை கரியாக்கும் டிராக்டரை கொண்டு மேலும் கூடுதல் முதலை முடக்கினோம். டிராக்டர் சாணி போடவில்லை. எருவும் உண்டாகவில்லை. மண்ணின் (தனம்) வளத்தை சிறுகசிறுகப்பாழடித்து நிற்கிறோம். புதிய ரகங்களை கைகொண்டாலும், இத்தனை நாள் நம்மை வாழ வைத்த நாட்டு விதைகளை பாதுகாக்க, சேமிக்க மறந்ததே இன்றைய நிர்கதிக்கு காரணமாகிவிட்டது. நமது விதைகளே ஒவ்வொரு விவசாயிக்கும் சொத்து.

விதையை ஒட்டியே நமது வாழ்வு:
      நவதான்யம் எனும் உணவு தான்யம், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள் கலந்த விதை கலாச்சாரம் பண்டைய இந்தியவான பாரத வர்ஷத்தின் தனித்துவமாகும். கோயில் திருவிழாக்களில், ஆடிப்பெருக்கில் நவதானியங்களை முளைப்பாளிகை இட்டு அதனை பதினெட்டு நாள் கழித்து ஆறுகளில் விடும் வைபவம் காணச்சிறந்தது. கோயில் கும்பாபிசேகத்தில் நவதானியங்களை கலசங்களில் வைத்து பல ஆண்டுகள் அதனை பாதுகாத்தனர். இன்று பல கோயில் கலசங்கள் மூலம் பாரம்பரிய வித்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஸ்ரீரங்கத்திலும், பூரி ஜெகன்னாதர் கோயிலிலும் தினமும் நெய்வேத்தியம் ஒருவிதமான அரிசியை கொண்டு நடத்தப்பட்டு வந்தது. தற்போது பூரியில் இது வழக்கத்தில் உள்ளது. வீட்டு விசேசங்களில் தான்யங்கள் பிரதான சடங்குகளில் இடம் பிடிக்கும். நமது சத்துணவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான ரகநெல்லும், பிற தானியங்களும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றின. சைவ உணவில் நவதானியங்களே சிறந்ததாக கருதப்பட்டு நமது உணவில் கரைகண்டன.  பசு முதலிய கால்நடைகளுக்கு தீவனமாகி விவசாயத்தின் முதுகெலும்பை மேலும் பலமாக்கியது. இங்கனம் நமது கலாச்சாரத்தை உருவாக்கிய வித்துக்களை புறக்கணித்து பேப்பர் ரூபாய் நோட்டின் பின்னால் சென்று நாம் நல்ல உணவை தொலைத்து, நல்ல கலாச்சாரத்தை இழக்கும் நிலையில் பர்கர், பீட்சாவில் போய் நிற்கிறோம்.பேப்பர் ரூபாய், தங்கம், வெள்ளி முதலியவை பெருகும் செல்வங்களான வளமான நிலம், நீர், அதனை உண்டாகும் காடு, மலை, தான்யம், பசு, புத்திரர்கள் எனும் உண்மையான செல்வங்கள் முன்னாள் காணாமல் போகும். அதிலும், தான்யங்களான “நாட்டு” விதைகளே தமிழனும், பாரதவாசிகளும்  வாழும்/வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஆதாரம். இவைகளை காப்பது இந்த தலைமுறையின் இன்றியமையாத கடமையாகும். 

செய்ய வேண்டியதென்ன?
      தசாவதார கதைகளுள், மச்சாவதாரத்தில் உலகம் நீரால் அழியும் போது  ரிஷிகள், விதைகளை அழியவிடாது சேமித்து, பட்சிகள், கால்நடைகள் என அனைத்தையும் படகில் ஏற்றி, பெருமாளின் அவதாரமான மச்சத்தின் உதவிகொண்டு காப்பாற்றப்படுவர். அந்த நிலைக்கே நாம் தள்ளப்பட்டுள்ளோம். நமது பாரம்பரிய தானியங்களை நடைமுறை உணவுப்பழக்கத்திற்கு கொண்டுவந்தாலே, நமது இயற்கை வளங்கள் காப்பாற்றப்படும். இறக்குமதியாகும் ஆலிவ் ஆயில், பாமாயில், சண் பிளவர் ஆயில், கனோல ஆயில் போன்றவற்றை உண்ணாது உள்ளூர் நல்ல எண்ணெய்யை (எள்+நெய்) வாங்கினாலே புஞ்சை விவசாயத்தின் மதிப்பு அதிகரிக்கும். புஞ்சை நிலங்களில் நிலத்தடி நீர் வளம் காக்கப்படும். உள்ளூர் அரிசி ரகங்களை வாங்கி, அந்நிய கலப்பின நெல் ரகங்களை புறக்கணித்தாலே நஞ்சை விவசாயத்தில் இருக்கும் கஷ்டம் குறைந்து நஞ்சை செழிக்கும், நாமும் நல்ல ஆரோக்கியம் பெறலாம். புஞ்சை தானியங்களை அரசு நியா விலைக்கடைகளில், புஞ்சை பகுதிகளில் கொடுக்க ஆரம்பித்தாலே புஞ்சை நிலஉணவு தானியங்களின் மதிப்பு உயரும். எனவே, நமது விதைகளை காக்க நாம் பாரம்பரிய உணவுப்பழக்கத்தை நமது வீடுகளில், திருவிழாக்களில், வீட்டு விசேசங்களில் நடைமுறைப்படுத்தினாலே நமது விதைகள் காக்கப்படும். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம். 


1 comment: