மீன்கொத்தி பறவை ஒரே இடத்தில் பறந்து கொண்டே நின்று பொத்தென்று தண்ணீரில் விழுந்து மீன்பிடிக்கும் சாதூர்யத்தை பார்த்திருக்கிறீர்களா? பூவரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா? காக்கா முட்டை என்ன நிறம் தெரியுமா? சலனமில்லாமல் ஓடுகிற நதியில் மேல்துண்டை வைத்து மீன் பிடித்த அனுபவம் உண்டா?
தந்தையின் கைகளில் படுத்துக்கொண்டு நீச்சல் பழகிய அனுபவம் இருக்கிறதா? அடைகாக்கும் கோழியின் சீற்றத்தை கண்டு ஓடியதுண்டா? காக்கை தூக்கிச்சென்ற கோழிக்குஞ்சு குற்றுயிராய் கீழே விழுந்து உயிருக்கு போராடும் போது பதை பதைத்து நின்றதுண்டா? இவையெல்லாம் கிராமத்து மக்கள் தினம் உணர்வுபூர்வமாக அனுபவிக்க கூடியது. ஆனால் நகர வாழ்க்கையில் ஏதோ... சினிமாவில் பார்த்ததாகத்தான் இருக்கும்.
வாழ்க்கையை தொலைச்சிட்டு, நம்மளும் வாழுகிறோம்னு ஏதோ நாள கடத்திட்டு வர்றோம். டாடி, வாத்து பறக்குமானு புள்ள கேள்வி கேட்கிறான். அத வுடுங்க. முந்தாநாளு ஓட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு இருந்த ஒரு வாண்டு அது ஆத்தாகிட்ட கேக்குது "மம்மி ரைஸ் எங்க செய்றாங்க"? நிலம் எங்க போய்க்கிட்டுருக்கு பார்த்திங்களா?
நம்ம கூட்டத்தில் பாதி ரெண்டுங்கெட்டானா அலையுது. சொந்த ஊர காலி பண்ணிட்டு டவுனுக்கு வந்த நம்ம ஜனம் ஊர மறந்து போயி ரொம்ப நாளாச்சி.
கபடமில்லாத வெள்ள மனசுக்காரன் எங்க பாக்க முடியுது? பக்கத்து வீட்ல ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு கிடந்த பெரிசு ஏதாவது செத்தா கூட எதிர்வீட்டுக்காரனுக்கு தெரிய மாட்டுக்கு!
ஆத்தா, அப்பன், அத்த, மதினி, மச்சான், சொக்காரன், சொந்தம்னு கூடி வாழ்ந்த ஜனம், இப்ப மூலைக்கு ஒன்னா சிதறிக்கிடக்கு. அப்பங்கிட்ட அடி வாங்கினா, குழந்த ஆத்தாக்கிட்ட ஓடும், ஆத்தாவும் திட்டினா, வாசல்ல வெத்தில இடிச்சுக்கிட்டு இருக்கிற பாட்டிக்கிட்டா போவும்.
கிழவி குழந்தய தூக்கி "நாசமா போறவன் புள்ளய என்னமா அடிச்சிருக்கான்" என்று தேற்றுவாள். அப்புறம் அவகாலத்து கதைய ஒன்ன எடுத்து விடுவாள். அதுல சீதையும் வருவா, கண்ணகியும் வருவா. கத கேட்டு வளர்ந்த சமூகம் அது. திண்ணையில் கத கேட்டு, காட்டாத்துல குளிச்சி, சோளக்கஞ்சி குடிச்சு, எல்லச்சாமிய கும்பிட்டு தெம்பா அலஞ்சவங்க அவங்க. இப்ப காத்தடச்ச பேப்பர் பைல கொஞ்சுண்டு சிப்ஸ் இருக்கு. அத 20 ரூவா கொடுத்து வாங்கி கொறிச்சிட்டு டிபன் சாப்பிட்டேன் என்கிறான். உடம்புல என்னத்த ஒட்டும். முதலிரவுல பொண்டாட்டி கிட்ட "சுகர் கம்ப்ளைண்டு" என்கிறான். பளபளனு விடியறதுக்கு முந்தியே தொழுவத்தில் இருந்து மாடுகள அவுத்துவிட்டு மேய்ச்சலுக்கு பத்திட்டு போறவன், நீச்சத்தண்ணிய ஒரு செம்பு குடிச்சிட்டு போவான். தூக்குச்சட்டியில அமுக்கி, அமுக்கி சோளாச்சோறு இருக்கும், வெயிலு சாயிர நேரத்தில் அத திண்ணுட்டு, எருமையோட சேர்ந்து, அவனும் ஏரியில குளிப்பான்.
பாலு கறந்தால் அறைப்போனி அப்படியே குடிப்பான். வயக்காட்டுக்கு போறவன் காலைல மம்மட்டிய புடிச்சானா உச்சி வெயிலுக்கு கொஞ்சம் இளப்பாறுவான். அவனுக்கு வாக்கப்பட்டவ கலயத்தில் பழைய சோற புளிஞ்சுவச்சு கொண்டு வருவா.
வாய்க்கால்ல ஓடுற தண்ணில கால நனைச்சுக்கிட்டே பழயது சாப்பிட்டு திரும்பவும் வயல்ல இறங்குவான். சும்மா வைரம் பாஞ்ச கட்டையாட்டம் உடம்ப வச்சிருப்பான். நோய் நொடி அண்டிரும்? அப்பெல்லாம் வீட்டு வேலைக்கு வர்ற ஆள திண்ணயில உக்கார வச்சு இலை போட்டு, சோறு போடுவாங்க அவன் அத எல்லாத்தையும் மிச்சம் வைக்காம திண்ணாத்தான் அவன் வலைக்கு லாய்க்கு. கொறிச்சிட்டு வச்சான்னா, விரட்டி விட்டிருவாங்க!
அப்ப உடல் வருத்தி வேர்வ சிந்துனான். இப்ப நாம "வாக்கிங்" போறோம். யார்கிட்ட போய் இதைச் சொல்ல. காலைல நீராகாரம் குடிச்சிட்டு அப்ப போனான். இப்ப நீராகாரம் வேண்டாம்! அட அந்த செம்பக்கூட காணமுங்க.
பொருளாதாரமே பிரதானமாகிப் போன உலகில் பிழைப்பு தேடி ஊர் விட்டு ஊருக்கு புலம் பெயரும் மக்கள் பல சுகங்களை தியாகம் செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
பூர்விக வீட்டையும், நடைபழகிய கிராமத்து தெருக்களையும், அந்த நிம்மதியான் வாழ்வையும் நகரத்து சத்தத்திற்கு இடையே அசைபோட்டு பார்க்க கூட நேரமில்லை நம்மில் பலருக்கு.
பிழைப்பு தேடி புலம் பெயர்த்தவர்களுக்கும், சொந்த ஊரை மறந்து தீப்பெட்டி சைஸ் குடியிருப்புகளில் பக்கெட் தண்ணியில் குளித்து வருபவர்களுக்கும், புகை மண்டல நகரத்தில் "ஏசி" வைத்து வாழ்பவருக்கும், இன்னும் பலருக்கும் இந்த கட்டுறை ஒரு "ஆட்டோகிராப்பாக" தெரியும்.
இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் வேளையில், நகரில் வசித்து ஓய்வு பெற்ற பலரும், நிம்மதி தேடும் செல்வந்தர்களும், தங்களது சொந்த கிராமங்களுக்கு ரயில் ஏறுவார்கள் என்பது உண்மை.
நன்றி: விகடன் http://youthful.vikatan.com/youth/paavistory12052009.asp
அற்புதமான
ReplyDeleteதேவையான
பதிவு...
நகரம் என்று சொல்லி
நரகத்தில் வாழும் நமக்கு
சாட்டையடி...
என்னுடைய வலையில்
ஒரு தென்னையின் தற்கொலை
படியுங்கள்
ஒரு தென்னையின் தற்கொலை
ReplyDeleteவிதைக்கப்பட்டோ அல்லது
வேண்டாமென எறியப்பட்டோ...
தன்னையே விதையாக்கி
பூமித்தாயின் புழுக்கத்தை தாங்கி..
சுவாசிக்க காற்று தேடி
பூமி பிளந்து புதிதாய் முளைவிட்டு
சூரியனின் சூட்டிலே கண் விழித்து
பனித்துளியிலே பசியாறி
எவர் காலிலும் மிதி படாமல்
எவை வாய்க்கும் உணவாகாமல்
வரப்போரம் வாழ்க்கைப் பட்டு
வேலிக்குள் சிறைப்பட்டு
நீர் தேடி வேர்பாய்ச்சி
நிலத்திற்குள் நரம்புகள் இறுக்கி
காற்று ஆடிய நடனத்திற்கு
காதலோடு இசைந்தாடி...
வளர்ந்து வாலிபமாகி
வண்டுக்கடி தாங்கி
உதிர்ந்த பாளையை உரமாக்கி
எஞ்சிய பாளைக்கு உயிர் கொடுத்து
பிஞ்சாக பிரசவித்து
திருடிக்குடித்த நீரைக்கொண்டு
திரட்சியான இளநீர் ஆக்கி
சந்தைக்கனுப்பி காத்திருந்த தென்னையிடம்
மேல்நாட்டு குளிர்பானத்தின்
மினுமினுக்கும் மேனியழகில்
தங்கள் தாகம் தீர்க்கும்
தறிகெட்ட தலைமுறையால்...
நாகரீக நரகத்து வீதியோரம்
விலைபோகாத வேசிபோல்
வெம்பிக் கிடந்த இளநீரின் கதையை
காற்று வந்து காதோரம் சொன்னபோது...
மனம் ஒடிந்து மட்டைகளை இழந்து
குலை நடுங்க குரும்பைகளை உதிர்த்து
அடி வயிற்று வேர் அனைத்தையும் அறுத்து
ஆடிக் காற்றின் துணையோடு அமரராகிப் போனது...
Thank you for referring this nice poem KATHIR.