Thursday, 14 September 2017

ஆந்திர நதிநீர் இணைப்புத்திட்டம் வெற்றுகூச்சலா... வெற்றிப்பாய்ச்சலா?



  அத்தியாயம் 1 - வறட்சி அனாதைகளா ? வறட்டு விளம்பரங்களா
ஆந்திராவின் வெப்பத்தைக் கடந்து, சென்னையின் மழையில் நனையத் தொடங்கி சில நாட்கள் ஆகியிருந்தன. அப்படியான ஒரு மழை மாலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு முக்கியமான சூழலியல் பத்திரிகையாளரிடமிருந்து போன்கால் வந்தது...
" கலை... ஆந்திரா நதிநீர் இணைப்புக் குறித்தக் கட்டுரையை முடித்துவிட்டீர்களா ? "
" இன்னும் முழுமையாக முடிக்கவில்லை..."
" முதலில் நான் அனுப்பும் இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள். உங்கள் பதிவில் இதையும் இணைத்துக் கொள்ளுங்கள்... "
வழக்கமாக எவ்வளவு பெரிய விஷயமானாலும், குரலில் எற்ற, இறக்கங்கள் இல்லாமல் பேசும் அந்த நண்பரின் குரலில் அன்று அத்தனை உணர்ச்சிகள்.
" இது நான் செய்தது கிடையாது. என்னுடைய இன்னொரு நண்பர் இயக்கியது. கூறப்பட்டிருக்கும் அத்தனையும் உண்மை. அதே சமயம் அத்தனை அதிர்ச்சியானதும் கூட... "
" சரி... பார்க்கிறேன்."
 நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. சில நிமிடங்களிலேயே அந்த ஆவணப்படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். படம் பார்க்க, பார்க்க மழையின் சத்தம் காதில் விழவில்லை.
ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தின் கதிரி எனும் பகுதியின் சமீப கால வறட்சிக் கதைகளைச் சொல்லியது அந்த ஆவணப்படம். வறட்சி என்றால்... தண்ணீர் இல்லை, உணவில்லை என்ற கதையல்ல... அதையும் தாண்டியது. வறட்சியால் எத்தனைக் குழந்தைகள் கடத்தப்படுகின்றன, எத்தனைக் குழந்தைகள் அனாதைகளாக்கப்படுகின்றன, எத்தனை பெண்கள் பாலியல் தொழிலுக்கு நகர்த்தப்படுகிறார்கள் என்ற விவரங்களை உள்ளடக்கியது. ஒரு வறட்சியின் மறுபக்கத்தை அதிர்ச்சியோடு பதிவு செய்திருந்தது. 
தண்ணீரில்லை... விவசாயம் செய்ய முடிவதில்லை. விவசாயம் இல்லாததால் உணவுத் தயாரிப்பும் இல்லை, விலை கொடுத்து வாங்க காசும் இல்லை. காசில்லாததால், படிக்கப் போக முடிவதில்லை. பணம் சம்பாதிக்க பெற்றோர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர பிள்ளைகள் தனியாக வீட்டிலிருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி சில தரகர்கள் உள் புகுந்து டீனேஜ் பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர். கணவனற்ற பெண்கள், வேலைத் தேடி இடம்பெயரும் போது அவர்கள் தவறான கைகளில் விழுந்து பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்படுகின்றனர். 30 களின் தொடக்க வயதிலிருக்கும் லட்சுமியின் கதை அப்படியானது தான்... பிள்ளைகளைக் காப்பாற்ற ஒரு தரகர் வேலை வாங்கித் தருவதாக சொன்னதை நம்பி டெல்லிக்குப் போகிறார்.  அங்கு அவர் பாலியல் விடுதியில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார். 

"சார்...கொடுமையா இருக்கும் சார். வலி தாங்க முடியாது. அவங்க சொல்றத செய்யலைன்னா மிளகாய்ப் பொடியைத் தடவி விட்ருவாங்க. ஒவ்வொரு நாளும் உயிர் போய், உயிர் வரும். பிள்ளைகளுக்காகப் பொறுத்திட்டிருந்தேன். ஒரு கட்டத்துல அதுவும் முடியாம ஊருக்கே திரும்பிட்டேன். இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம போராடிக்கிட்டிருக்கேன்..."
அங்கு நிகழும் கதைகளின் சிறுதுளி இது. பெற்றோர்கள் இல்லாததால் தவிக்கும் குழந்தைகள் கடுமையான மனநல பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டால் பல குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமிருக்கும் முதன்மையான மாவட்டங்களில் அனந்த்பூர் ஒன்று. சமீபகாலங்களில் நாளொன்றுக்கு 25 ஹெச்.ஐ.வி நோயாளிகள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். 
கடந்த சில மாதங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறைச்சிக் கூடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. பல கிராமங்களில் பெரியளவில் இடப்பெயர்வு நடந்துள்ளதால் ஆளரவமற்று இருக்கின்றன கிராமங்கள். இந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடிநாதம்  " நீரின்மை ". வெடித்துக் கிடக்கும் அந்த நிலங்களில் சிறிதளவேனும் நீர்ப் பாய்ந்திருந்தால் இத்தனைப் பெரிய அழிவு அங்கு நடந்திருக்காது. இந்த வறட்சியின் வலியோடு நம் கதையைத் தொடங்குவோம்... 
"வரலாற்று பகீரதா கங்கையை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்... நவீன பகீரதா (சந்திரபாபு நாயுடு) கோதாவரியை கிருஷ்ணாவுக்குக் கொண்டு வந்து புது வரலாறு படைத்துள்ளார் ",  " நாடே போற்றும் நதிநீர் இணைப்பு - சாதித்துக் காட்டிய சந்திரபாபு நாயுடு", " ஆந்திராவை வறட்சியிலிருந்து மீட்டெடுத்த புனிதர் "... இப்படியான செய்திகள் சமீபகாலங்களில் சமூகவலைதளங்களிலும், செய்திகளிலும் தொடர்ந்து வந்துக் கொண்டேயிருந்தன. இந்தியாவின் அத்தனை சூழலியலாளர்களும் நதிநீர் இணைப்பை எதிர்க்கும் சூழலில், ஆந்திராவில் இரண்டு முக்கிய நதிகளை இணைத்து, பல நூற்றாண்டுகால வறட்சிக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மைதானா என்ற தேடலில் தொடங்கியது இந்தப் பயணம். 
போலவரம் , பட்டீசீமா, கிருஷ்ணா, கோதாவரி, சந்திரபாபு நாயுடு.... இந்தப் பயணத்தில் நாம் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் இவையாகத் தானிருக்கும். அடிப்படை செய்தி இது தான்... " கிருஷ்ணா மற்றும் கோதாவரியை இணைத்து ஆந்திரத்தின் வறட்சிக்கு தீர்வு கண்டார் சந்திரபாபு நாயுடு " .  
சென்னையிலிருந்து ஆந்திராவை நோக்கியப் பயணம் தொடங்கியது. தமிழகத்தில் இயங்கும் சூழலியலாளர்களிடம் இந்த நதி நீர் இணைப்புக் குறித்த பெரிய தரவுகள் இல்லை. நம்மிடமும் பெரிய தொடர்புகள் இல்லை. களம் கண்டு விஷயங்களை ஆராயும் முனைப்போடு போய்க் கொண்டிருந்த போது, தமிழ் எழுத்துக்கள் மறைந்து தெலுங்கு எழுத்துக்கள் நிறைந்திருக்கும் பலகைகளைப் பார்க்கத் தொடங்கினோம். ஆந்திராவுக்குள் நுழைந்துவிட்டோம்.  இன்று மாலைக்குள் நாம் அடைய வேண்டிய ஊர் விஜயவாடா. இடையே ஒரு தாபாவில் உணவுக்காக நிறுத்தினோம். வெளியே பெரிய தொட்டியில் நீரை எடுத்துக் குளித்துக் கொண்டிருந்தார்கள் சில லாரி டிரைவர்கள்.அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு ரொட்டிகளைப் பிய்த்து, பச்சை மிளகாயோடு சேர்த்து கடித்துக் கொண்டிருந்தனர் சில டிரைவர்கள். அந்தக் கொளுத்தும் வெயிலிலும் எப்படி பச்சை மிளகாயைக் கடித்துக் கொண்டிருந்தார்கள் என்ற ஆச்சர்யம் எழுந்தது. 
எங்களுக்கு ரொட்டிகளை வைத்தது ஒரு ஆந்திரப் பெண் தான். அவரிடம் கிருஷ்ணா - கோதாவரியை இணைத்த பட்டீசீமா திட்டம் குறித்துக் கேட்டேன்...
"எங்க பாபுகாரு தேவுடு மாதிரி. அவரு எது செஞ்சாலும் மக்களோட நல்லதுக்குத் தான். பாருங்க இன்னிக்கு கின்னஸ் ரெக்கார்ட்டெல்லாம் பண்ணியிருக்காரு.  இந்தியாவுலேயே யாரும் செய்யாத நதிநீர் இணைப்ப செஞ்சிருக்காரு."
"நல்லதும்மா... உங்களுக்கு அதனால நல்லது நடந்திருக்குன்னா சந்தோஷம். இப்போ இந்தப் பக்கம் உங்களுக்கு ஒண்ணும் தண்ணீர்ப் பிரச்னை இல்லையே?"
"முழுசா இல்லைன்னு சொல்ல முடியாது. கஷ்டந்தான். மழை இல்ல. பாபுகாருன்னால மட்டும் என்ன செய்ய முடியும். ஆனால், போலவரம் மட்டும் முடிஞ்சுடுச்சுன்னா ... மொத்த ஆந்திரத்துக்கும் தண்ணீர் பிரச்ன தீர்ந்திடும்ன்னு சொல்லியிருக்காரு..." என்று சொன்னபடியே அந்தத் தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த டிரைவர்களிடம் , தங்கியதற்கும், குளித்தற்கும் காசு வசூலிக்க நகர்ந்தார். 
" இயற்கையின் அனைத்துப் படைப்புகளுக்குமான அடிநாதம் நீர் தான் ."
                                                                                               -
லியனார்டோ டாவின்சி. 
 தகிக்கும் வெயிலில் விஜயவாடாவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். இடையே சூழலியலாளர் தியோடர் பாஸ்கரன் அவர்களைத் தொடர்பு கொண்டோம்...
" ஆந்திராவோட நதிநீர் இணைப்புத் திட்டத்தில் என்ன செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஓர் அடிப்படையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். நதிகள் ஒவ்வொன்றும் தாங்களாகவே இணைக்கப்பட்டுத் தானிருக்கின்றன. அதை மீறி நாம் செயற்கையாக இதை இணைப்பது பெரும் கேடு விளைப்பதாகும். நதிகளை இணைப்பது ஒன்றும் இருப்புப்பாதை போடுவது போல் அல்ல. சில நதிகள் கீழ் இருக்கும், சில நதிகள் மேட்டிலிருக்கும். நம் பூமி ஒன்று சமமானது அல்ல .  இதை மீறி இதை இணைப்பது என்பது பெரிய வன்முறை. 
ஒவ்வொரு நதியும் ஒரு வாழிடம். அதை எப்படி இணைக்க முடியும். அந்த உயிர்ச்சூழலே பாதித்துவிடாதா ? .
மேலும், வட இந்தியாவில் நதிகள் உருவாவது இமயமலை பனிகளில். தென்னிந்தியாவிலும் அனைத்து நதிகளும் காட்டிலிருந்து தான் உருவாகிறது. நாம் காட்டை அழித்ததால் தான் இங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துக் கொள்ளாமல் நதிநீரை இணைப்பது சில காலங்களுக்கு வேண்டுமென்றால் பலன் கொடுக்கலாமே தவிர, இதனால் ஏற்படும் பாதிப்புகள் கணக்கிட முடியாத அளவிற்கு இருக்கும். இதற்கெல்லாம் எளிய தீர்வாக உள்ளூர் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு, ஏரி, குளங்களைப் பாதுகாப்பது, மரங்களைப் பாதுகாப்பது போன்ற விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் " என்று காட்டமாகச் சொல்லி முடித்தார். 
ஒரு பக்கம் சூழலியலாளர்கள் நதிநீர் இணைப்பைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், ஆந்திர அரசோ அதைத் தன் ஆகப்பெரும் சாதனையாக முன்னிறுத்தி விளம்பரங்களைக் கொடுக்கிறது. பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டத்தால் ராயலசீமா பகுதி முழுக்கவே பசுமையாக மாறியிருப்பதாக ஆந்திர அரசு சொல்கிறது. ஆனால், வறட்சியின் அனாதைகளையும், அகதிகளையும் அதிகம் கொண்டிருக்கும் ஆனந்த்பூர் மாவட்டம் ரயலசீமாவின் பிரதான பகுதி. நதி நீரை இணைத்தால் சூழலியல் சீர்கேடு ஏற்படும் என்பது உண்மையா ? , கடந்த வருடம் ஜூலை 6 ஆம் தேதி, சந்திரபாபு நாயுடு பட்டீசீமா திட்டத்தைத் தொடங்கிவைத்த போது, கிருஷ்ணாவும், கோதாவரியும் இணைந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன என்பது உண்மை தானா ?, போலவரம் இணைப்புத் திட்டத்தால் 2 லட்சம் ஆதிவாசிகளின் வாழ்வும், வாழிடமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பது உண்மைதானா ? அல்லது இதையெல்லாம் கடந்து, இதுவரை உலகில் எந்த அரசும், எந்த நாடும் செய்திராத சாதனையை முதல்வர் சந்திரபாபு நாயுடு சாதித்துக் காட்டியுள்ளாராஇப்படியான பற்பல கேள்விகளோடு ஆந்திரப்பிரதேசத்தின் புதிய தலைநகரான அமராவதி நகரில் காலடி எடுத்து வைத்தோம். 
" நதிகளின் மீதான அக்கறை என்பது நதி குறித்தானது அல்ல. அது மனித இதயத்தைச் சார்ந்தது ."
                                                                                                                                                                -
ஷோஸோ தனாகா. 
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உதவியாளரைத் தொடர்புக் கொண்டு, அவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அமராவதி நகரில், ஆந்திரப் பிரதேசத்தின் தலைமைச் செயலக வாசலில் காத்திருந்தோம். 
" சார்... இன்னும் கொஞ்ச நேரத்துல ஆபிஸ் வந்திடுவாரு. வந்ததும், அவரிடம் பேசிவிட்டு உங்களுக்குக் கூப்பிடுறேன். கொஞ்சம் காத்திருங்க..." என்று சொன்னார்.
வெயில் குறைந்திருந்த அந்தக் காலை நேரத்தில் முதல்வரை சந்திக்கும் வாய்ப்பிற்காக காத்திருந்தோம். அப்போது, திடீரென அந்தப் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது... 

ஆந்திர நதிநீர் இணைப்புத்திட்டம் வெற்றுக்கூச்சலா... வெற்றிப்பாய்ச்சலா? - அத்தியாயம் 2

 அத்தியாயம் - 2 -     " பெத்த " நாயுடு போலவரம்... "சின்ன" நாயுடு பட்டீசீமா!!!
திடீரென பரபரப்பு தொற்றிக் கொண்டது. அங்கு தள்ளு வண்டியில் சர்பத் விற்றுக் கொண்டிருந்தவர் வேகவேகமாக தன் தள்ளு வண்டியைத் தள்ளிக்கொண்டு ஓரம் ஓடினார். ஒரே நிமிடத்தில் மொத்த இடமும் அமைதியானது. போலீஸ்காரர்கள் கேட்டைத் திறந்துவிட்டு ஓரம் நின்றனர். முதலில் சில கார்கள். அதைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட சாம்பல் நிற டாடா சஃபாரிக்கள் படுவேகமாகக் குறுக்கும், நெடுக்குமாக நுழைந்தபடியே வந்தன. ஒரு நொடி இந்தப் பக்கம் இருக்கும் வண்டி, அடுத்த நொடி மற்றொரு மூலைக்குச் சென்றுவிடுகிறது. இப்படியாக அத்தனை கார்களுமே சர்ப்ப வியூகத்தில் சீறிப் பாய்ந்தபடியே நுழைந்தன. அவ்வளவு தான். மீண்டும் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பின.  நாம் நின்றுகொண்டிருப்பது ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி நகர். தலைமைச் செயலகத்திற்குள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நுழைந்த காட்சிதான் அது. சரியாக ஒரு மணி நேரம் கழித்து, முதல்வரின் உதவியாளர் நமக்கு போன் செய்தார். 
"சாருக்கு இந்த வாரம் முழுக்க அப்பாயின்மென்ட்ஸ் நிறைஞ்சு இருக்கு. நீங்க வந்தது குறித்து மகிழ்ச்சிய தெரிவிச்சாரு... நீர்வளத் துறை அமைச்சர சந்திக்க உங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுது. ரெண்டு நாள் மட்டும் காத்திருங்க..." என்று சொன்னார். 
" நன்றி சார்..." சொல்லிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே நின்று கொண்டிருந்தோம். சர்பத்தின் ஆரஞ்சு நிறம் "தாகம் இல்லாட்டியும் பரவாயில்லை என்னைக் கொஞ்சம் சுவைத்துப் பார் " என்று சொல்வது போல் இருந்தது. தலைமைச் செயலகத்தின் வாசலிலேயே ஒரு சர்பத் வண்டி நின்று கொண்டிருந்தது சற்று ஆச்சர்யமாகத் தானிருந்தது. அப்போது அங்கு சஃபாரி சூட்டில், கையில் க்ரீம் நிற "லேப்ரடார் " மோப்ப நாயைப் பிடித்தபடியே கடுகடுப்புடன் வந்து அமர்ந்தார் ஒருவர். 
" பதினைஞ்சு பேர் இருக்க வேண்டிய இடத்துல என்னை ஒருத்தன மட்டும் போட்டு சாவடிக்குறானுங்க. காலையில 6 மணிக்கு வர்றது, நைட்டு 12 மணிக்குப் போர்றது. நான் என்ன மனுஷனா இல்ல வேறெதாவதா ? " என்று அந்த சர்பத் கடைக்காரரிடம் பொருமித் தள்ளிக் கொண்டிருந்தார் முதல்வரின் பாதுகாப்புப் பிரிவின் " டாக் ஸ்குவாடில்" ( Dog Squad ) இருக்கும் அவர்.  கடுகடு முகத்துடன் நம்மைப் பார்த்து "யார் ? " என்று கேட்டார். நாம் பதில் சொன்னதும்
"இதோ இப்ப நாம நின்னுட்டிருக்கும் இடமே 'ஃப்ளட் ப்ளைன் ' (Flood Plain) தான். அதாவது வெள்ளம் வந்து தேங்கும் பகுதி. இதன் மேல் தலைமைச் செயலகத்தை அமைக்கக் கூடாதுன்னு கூட இந்தப் பகுதியில நிறைய போராட்டங்கள் நடந்தது. ஆனா, யாராலும் ஒண்ணும் பண்ண முடியல..." என்று அவராக சொல்லிவிட்டு, தன் நாயை இழுத்துக் கொண்டு கிளம்பினார்.
அடுத்ததாக தெலுங்கு தேசம் கட்சியில் பல தடவை எம்.எல்.ஏவாகவும், எம்.பி ஆகவும், மாநில அமைச்சராகவும் இருந்த வத்தே ஷோபனத்ரிஷ்வர் ராவ் அவர்களைச் சந்திக்க, போனில் தொடர்பு கொண்டோம். உடனே வரலாம்என்று அனுமதி கிடைத்தது. அமராவதியிலிருந்து அவர் இருக்கும் உய்யிரு எனும் கிராமத்தைச் சென்றடைய 75கிமீ தூரம் பயணிக்க வேண்டும். சாலையும் சரியில்லாததால் குறைந்தது 2 மணி நேரமாவது ஆகும். அந்தப் பயண நேரத்திற்குள் போலவரம் மற்றும் பட்டீசீமா குறித்த சிறு அறிமுகங்களைத் தெரிந்து கொள்ளலாம். 
" ஒரு பக்கம் சீறிப்பாய்ந்து ஓடும் கோதாவரி  கடலில் கலக்கிறது. மறு பக்கம் ஒழுகி, ஒடிந்து ஓடும் கிருஷ்ணாவில் நீர் வரத்து மிகக் குறைவு. சரி... இதற்கு என்ன  தீர்வு ? "
ஆந்திராவுக்கு உயிராதாரமாக இருப்பது இரண்டு நதிகள். கிருஷ்ணா மற்றும் கோதாவரி. இதில் கிருஷ்ணா, மகாராஷ்டிராவின், சதாரா மாவட்டத்திலிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து உருவாகி 1400கிமீ தூரம் பயணித்து, ஆந்திராவிற்குள் நுழைந்து இறுதியாக வங்கக்கடலில் கலக்கிறது. இதில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்கள் சிறிதும் பெரிதுமாக 9 நீர்த் திட்டங்களை ( அணைகள், நீர்த் தேக்கங்கள் போன்றவை ) கட்டமைத்திருக்கின்றன. இதனால், ஆந்திராவின் கிருஷ்ணா டெல்டா பகுதிக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைவு. விவசாயத்தை நம்பியிருக்கும் இந்தப் பகுதிகள், ஒவ்வொரு வருடமும் வறட்சியில் வெடித்துச் சிதறுகின்றன. கிருஷ்ணா கொஞ்சம் சாந்தமானவள். 
மகாராஷ்டிராவின், நாசிக் மாவட்டத்திலிருக்கும் திரிம்பகேஷ்வர் பகுதியில், 1067மீட்டர் உயரத்தில் ஊற்றெடுக்கும் கோதாவரி 1465கிமீ பயணித்து, ஆந்திராவில் இறுதியாக வந்து தன் ஓட்டத்தை முடித்துக்கொள்கிறாள். கிருஷ்ணா போல் அல்ல கோதாவரி. இதன் மீது அத்தனை பெரிய நீர்த்திட்டங்கள் ஏதுமில்லை என்பதால் ஆர்ப்பரித்து காட்டுத்தனமாக சீறிப்பாய்ந்து ஓடும் குணம் கொண்டவள் கோதாவரி. வருடத்திற்கு கிட்டத்தட்ட மூன்றாயிரம் டிஎம்சி அளவிற்கான கோதாவரி நீர் கடலில் கலக்கிறது.
ஒரு பக்கம் சீறிப்பாய்ந்து ஓடும் கோதாவரி  கடலில் கலக்கிறது. மறு பக்கம் ஒழுகி, ஒடிந்து ஓடும் கிருஷ்ணாவில் நீர் வரத்து மிகக் குறைவு. இதற்கு என்ன தீர்வுபழைய ராபின்ஹூட் கதைதான். இருக்குமிடத்திலிருந்து எடுத்து, இல்லாத இடத்திற்கு கொடுப்பது. அந்தக் கால வெள்ளையர் ஆட்சியின் போதே போலவரம் நீர் இணைப்புத் திட்டத்திற்கு திட்டம் தீட்டப்பட்டது. பல மலைகளைக் குடைந்து, மிகப் பெரிய நீர்த் தேக்க அணையைக் கட்டி அதில் சேமிக்கப்படும் கோதாவரி நீரை புவியீர்ப்பு விசையின் அடிப்படையில், இரு கால்வாய்களின் வழி கொண்டு சென்று கிருஷ்ணாவில் சேர்ப்பதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை. ஆனால், இதை சாத்தியப்படுத்துவது அத்தனை எளிதான காரியம் அல்ல.
போலவரம் நீர் இணைப்புத் திட்டத்தின் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. போலவரம் திட்டம் முழுமையாக முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில் அதற்கு மாற்றாக பட்டீசீமா திட்டத்தைத் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு. பட்டீசீமா எனும் கிராமத்தில் 24 பம்ப்புகள் கொண்ட ஒரு நீரேற்று நிலையத்தை ஒரு வருட காலத்திற்குள் கட்டினார். இது லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது. கோதாவரி ஆற்றிலிருந்து இந்த பம்ப்புகள் நீரை உறிஞ்சி எடுத்து அதை 12 குழாய்களின் வழியாக கால்வாயில் சேர்க்கும். அந்தக் கால்வாய்கள் நீரை கிருஷ்ணாவில் கொண்டு சேர்க்கும். 
Proud to see Pattiseema Lift Irrigation Project make it to the Limca Book of records. pic.twitter.com/a39qXgCMM4
— N Chandrababu Naidu (@ncbn) March 25, 2017
போலவரம் "பெத்த" நாயுடு என்றால் பட்டீசீமா "சின்ன" நாயுடு.  போலவரம் முழுமையாகத் தயாரானதும் பட்டீசீமாவின் தேவை இருக்காது. இந்த பட்டீசீமா நீரேற்று நிலையத்தை கட்டி முடித்ததை வைத்துதான் சந்திரபாபுவின் சரித்திர சாதனைகள் என்ற பெயரில் விளம்பரங்களும் மீம்களும் சமூகவலைதளங்களிலும் செய்திகளிலும் கொடிகட்டிப் பறந்தன. இதெல்லாம் அரசின் வேலைகளா அல்லது அரசின் ரசிகர்கள் செய்ததா என்ற யூகத்தை உங்களிடமே விட்டுவிடுகிறோம். அதே சமயத்தில், அரசியல் விளம்பரங்களில் மோடிக்கே நாயுடுதான் முன்னோடி என்பதையும் இங்கு பதிய விரும்புகிறேன். 
"Our CM is the Best CM in the World " என்ற பச்சை நிற பேனரைக் கடந்து உய்யிரு எனும் அந்த அழகிய கிராமத்திற்குள் நுழைந்தோம். தோட்டங்களால் நிறைந்திருந்த அந்த வீட்டில் பழைய சாய்வு நாற்காலியில் வந்து உட்கார்ந்தார் வத்தே ஷோபத்ரிஷ்வர் ராவ். அவரின் வலது கை நிற்காமல் ஆடிக் கொண்டேயிருந்தன. நல்ல உயரம். சுருங்கிய முகம். 
"சார்... கட்சியின் சார்பா இல்லாம இந்த நதிநீர் இணைப்புத் திட்டத்தோட உண்மை நிலையைப் பற்றி நீங்க பேசணும்..." என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

"நான் கட்சியைவிட்டு நீங்கி 5 ஆண்டுகளுக்கும் மேலாகிறது தம்பி... முழுக்க முழுக்க மக்கள் பணிகளில் மட்டும்தான் ஈடுபட்டுள்ளேன். இதோ என் உடலும் தளர்ந்துவிட்டது. இருக்குற கொஞ்ச நாளைக்காவது உண்மையா மக்களுக்கு உழைச்சுட்டுப் போயிடணும். கட்சியில இருந்தா அப்படி எல்லாம் இருக்க முடியாது பாருங்க..." என்று சொன்னவர் திட்டத்தின் அடிப்படைகளை விளக்கிவிட்டு,அதன் சிக்கல்களைப் பேசினார்.
"பட்டீசீமா மொத்த ஆந்திரத்தின் வறட்சியைத் தீர்த்துவிட்டது என சொல்வது மிகையான பிரசாரம். ஆந்திரத்திற்கு பட்டீசீமா திட்டம் அவசியமற்றது. எங்களுக்குத் தேவை போலவரம்தான். தன் சுயநலத்திற்காகவும், சுயவிளம்பரத்திற்காகவும் தான் சந்திரபாபு நாயுடு பட்டீசீமா திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். மக்களின் வரிப் பணத்தை வீண் விரயமாக்கியிருக்கிறார். முதலில் பட்டீசீமா திட்டத்திற்கான செலவு  1300 கோடி ரூபாய் என்று அறிவித்திருந்தார். பொதுவாக ஒரு அரசு , ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் விடும்போது 5 சதவிகிதம் வரைதான் அந்த நிறுவனம் லாபத் தொகையை எடுக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடு வெளிப்படையாக இந்தத்திட்டத்தை சீக்கிரம் முடிப்பவர்களுக்குக் கூடுதலாக 17.25 சதவிகிதம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால், 5 சதவிகித அளவில் லாபம் பார்க்க வேண்டிய கான்ட்ராக்டர்கள், 22 சதவிகிதம் வரை லாபம் பார்த்தார்கள். திட்டச் செலவும் 1600 கோடியைத் தாண்டிச் சென்றது. இதற்கு பதிலாக, இந்தப் பணத்தையும் போலவரம் திட்டத்திலேயே முதலீடு செய்து, அதைத் துரிதப்படுத்தியிருக்கலாம். 
பட்டீசீமா கிருஷ்ணா டெல்டா விவசாயிகளுக்குப் பெரியளவில் கைகொடுக்கவில்லை. அரசாங்கம் சொல்லும் டெல்டா பகுதிகளில் வழக்கமாகவே விவசாயத்திற்கு நீர் இருக்கத்தான் செய்கிறது. நீர்வரத்தின் காலதாமதம்தான் அங்கு பிரச்னையாக இருக்கிறது. கிருஷ்ணா நீர் அந்தப் பகுதிகளில் மே மாத இறுதியிலேயே வந்தால்தான், அவர்கள் பயிரிட்டு நவம்பர் மாதத்திற்கு முன்னரே அறுவடை செய்ய முடியும். ஆனால், தற்போதைய நிலையில் ஜூலை மாத காலத்தில் கிருஷ்ணா வருகிறது. இந்த சமயத்தில் பயிரிட்டால், நவம்பரில் வரும் புயல் மொத்த பயிர்களையும் சேதப்படுத்திவிடும். இந்தப் பிரச்னையை பட்டீசீமா ஓரளவிற்குக் குறைத்திருக்கிறது. ஆனால், இன்றும் கிருஷ்ணா டெல்டாவின் கடைப் பகுதிகளில் விவசாயத்திற்கான நீரில்லாமல், பலரும் விவசாயத்தைக் கைவிட்டு வேறு தொழில்களுக்கு நகரும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கின்றன. " 
"ஆனால், இரண்டு நதிகளையும் ஒன்றிணைத்த போது, ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததாக ஒரு செய்தி கேள்விப்பட்டோமே? "
" ம்ம்ம்... மறைப்பதிற்கில்லை. அது உண்மைதான். ஆனால், அது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. கொஞ்ச நாள்களில் உயிரினங்கள் அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு பழகிவிடும்..." என்று சொல்லி நமக்கு விடை கொடுத்தார். 
அடுத்த இலக்கு எங்கு என்பது தெரியாமல் பயணித்துக் கொண்டிருந்த அந்த இரவு வேளையிலொரு கேள்வி மட்டும் எங்களைத் துளைத்துக் கொண்டேயிருந்தது. அது: ”நீர் இணைப்புத் திட்டத்தின் அரசியல் பிரச்னைகளைப் பேசும் யாருமே அதனால் ஏற்படும் சூழலியல் பிரச்னைகளைப் பேசவில்லை. ஒருவேளை இந்தத் திட்டங்களினால் இயற்கைக்கு எந்த இடையூறுமே நடக்காதோ?” 
இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க இந்தியாவின் "தண்ணீர் மனிதன் " என்று போற்றப்படும் ராஜேந்தர் சிங்கைத் தொடர்பு கொண்டோம்.
"ஆமாமா நதிகளை இணையுங்க, மலைகள உடையுங்க, இருக்குற மொத்த தண்ணியவும் பம்ப் போட்டு இழுத்திடுங்க, மண்ண திருடுங்க... ஆனா, இயற்கை எதுவும் ஆகாம அப்படியே நல்லா இருக்கும்" என்று சொன்னவர் நாளை நான் ஆந்திராவின் விஜயவாடாவிற்குத்தான் வருகிறேன். உங்களை அங்கு சந்திக்கிறேன்என்று சொல்லி போன் வைத்தார். 
ராஜேந்தர் சிங்கை சந்திக்க வேண்டும். அதற்கு முன்னர் போலவரம், பட்டீசீமா பகுதிகளைப் பார்வையிட அனுமதி வாங்கிப் பார்க்க வேண்டும். அதற்கு முன்னர் சாப்பிட வேண்டும் என்று அந்த ரோட்டுக் கடையில் நிறுத்தினோம். 
"பாட்டில் நீலு காவாலா ? " என்று அந்த அக்கா கேட்டார். 
"இல்லை... வேண்டாம் சாதா தண்ணியே தாங்க..." என்று  சொன்னதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் அந்த பாட்டிலைக் கொண்டு வந்து டேபிளில் வைத்தார்.
ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 3

அத்தியாயம் - 03 - அழியும் பாப்பிகொண்டலா, அழும் கோதாவரி ! 
முந்தைய நாள் இருந்த குளிர் அடுத்த நாள் போலவரம் கிளம்பும் போது இல்லை. வெயில் சற்று உக்கிரமாகவே இருந்தது. அப்போது ரேடியோவில் , " கோதாவரி " படத்திலிருந்து ஒரு பாடல் ஒலிபரப்பானது.... 
" கோதாரம்ம கும்கம்பொட்டு திட்டி மிரப எருப்பு

   லங்கானாதுடினக்கா ஆகனன்டு பன்ட்லு கொருக்கு
    சூஸே சூப்பு ஏம் செப்பினிதி சீத காந்தகி
     சந்தேஹாலா மப்பே பட்டே சூஸி கண்டிகி
      லோகம் காணி லோகம்லோனா ஏகாந்தாலா வலப்பு
        அல பாப்பிகொண்டலா நலுப்பு கடகலேகா நவ்வு தனக்கு ராகா... "

இந்த வரிகளின் அர்த்தத்தை கட்டுரையின் முடிவில் காணலாம். அது தான் சரியாகவும் இருக்கும். கோதாவரி ஒரு ஆவணப்படம் அல்ல. 2006ல் அந்தப் படத்தை நான் பார்த்தது இன்றும் நினைவிலிருக்கிறது. அது ஒரு அழகான காதல் படம். கோதாவரி ஆற்றில் பத்ராச்சலம் போகும் ஒரு படகுப் பயணமும், அந்தப் பயணத்தில் வரும் பல கதாபாத்திரங்களின் கதைகளும் தான் படத்தின் கதை. இதனூடே, கோதாவரி ஆற்றின் அழகை அவ்வளவு நேர்த்தியோடு பதிவு செய்திருக்கும் அந்தப் படம். படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கோதாவரியில் ஒரு பயணம் போக வேண்டுமென்ற பேராசையை உருவாக்கும். சரி... இப்போது நம் கதைக்கு வருவோம். இந்த வரிகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் " பாப்பிகொண்டலா " நம் கதையின் முக்கியக் கதாபாத்திரம். 
இந்தப் பயணத்திற்கான தரவுகளைத் திரட்டிக் கொன்டிருக்கும் போது ஒரு நாளிதழில் இந்தச் செய்தி கிடைத்தது. "போலவரம் திட்டம் தொடங்கப்பட்டதால் விரைவில் பாப்பிகொண்டலா மலைப்பகுதி முழுவதும் அழியப்போகிறது. அதற்கு முன்னர் கடைசியாக அந்த அழகைப் பார்த்திட ஆந்திர மக்கள் கோதாவரியில் படகுப் பயணம் மேற்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு 1500லிருந்து 2000 பேர் வரை படகுக்கான முன்பதிவைச் செய்துள்ளனர். பாப்பிகொண்டலா ஆந்திரத்தின் கோதாவரியின் மேல் நெஞ்சம் நிமிர்த்தி, நேர் கொண்ட பார்வைப் பார்க்கும் அழகிய மலைத் தொடர். ஆந்திர மக்கள் வழிபடும் இயற்கை தெய்வம். போலவரம் திட்டத்தால், இந்த மலைத் தொடர் முற்றிலும் அழிய இருக்கிறது. இந்த மலைகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதிவாசிகள், இந்த மலையை ஒட்டி வாழ்ந்துவரும் தலித் மக்கள் என இந்தத் திட்டத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர வேண்டியிருக்கிறது. இந்தத் திட்டத்தால் இவர்களுக்கு ஏதொரு பயனும் இருக்கப் போவதில்லை. ஆனால், இந்தத் திட்டத்திற்கான காவு இந்த குரலற்ற ஒடுக்கப்பட்ட இயற்கைப் பிள்ளைகள்.
இவர்களின் கதைகளும், குரல்களும் அரசாங்கங்களுக்கு ஒருபோதும் பிடிப்பதில்லை. அந்தக் கதைகளைப் பின்னர் பார்ப்போம். முதலில் போலவரம் திட்டத்தின் கதை என்னவென்பதை ஆராய்வோம். டைம்மெஷின் கற்பனைகள் பிடித்தவர்கள் டைம்மெஷினில் பயணிக்கலாம். அது பிடிக்காதவர்கள் இதை ஒரு கதையாக , அதுவும் பிடிக்காதவர்கள் இதை ஒரு செய்தியாகப் படிக்கலாம். எதுவாக இருந்தாலும், நாம் சுதந்திர காலத்திற்கு முன்னர் இருந்து தொடங்க வேண்டும். 
அன்றைய ஆந்திரா, இன்றைய ஆந்திரா இல்லை. 1941யில் மெட்ராஸ் மாகாணத்தைச் சேர்ந்த திவான் பகதூர் எல். வேங்கடகிருஷ்ண ஐயர் தான் இந்தத் திட்டத்திற்கான விதை வித்திட்டவர். இவர்தான் கோதாவரி நதியில் ஒரு நீர்த் தேக்கத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் , அதற்கு ஏதுவான இடம் போலவரம் எனும் திட்ட அறிக்கை ஒன்றை அன்றைய பிரிட்டீஷ் அரசிடம் சமர்ப்பித்தார். இதற்கு "ராமபாத சாகர்" திட்டம் எனப் பெயரிட்டார். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகும் கோதாவரி, போலவரம் பகுதியில் தான் மலைப்பாதையை விட்டு சமதளத்திற்கு வருகிறது. இதன் காரணமாகத் தான் போலவரம் பகுதியை அவர் தேர்ந்தெடுத்தார். 
அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.எல். சாவேஜ் (S. L. Savage) தலைமையில், அன்றைய உலகின் மிகச் சிறந்த பொறியாளர்களான கார்ல் தெர்சாகி (Karl Terzagi) , ஹார்ப்பர் (Harper) , முர்டாக் மெக்டொனால்ட் ( Murdoch Macdonald )  ஆகியோரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தது அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம். ஆந்திராவில், கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைப்பதற்கான சாத்தியங்களை ஆராய்வது தான் இவர்கள் பணி. பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ,
" இருவேறு பாதைகளில் ஓடிக் கொண்டிருக்கும் நதிகளின் மடையை மாற்றுவது, மலைகளை உடைத்து அணையைக் கட்டுவது,  மூழ்கவிருக்கும் கிராமங்களை காலிசெய்வது போன்ற சில கடினமான வேலைகளைக் கடந்து, இந்த இரு நதிகளையும் இணைப்பது சாத்தியம் தான் " என்று அறிக்கைக் கொடுத்தனர்.
ஆந்திர அரசின் திட்டக் குறிப்புகளில் எந்த இடத்திலுமே வேங்கடகிருஷ்ண ஐயரின் பெயர் இடம்பெயரவில்லை. சாவேஜ் தான் இந்தத் திட்டத்தின் முன்னோடி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 


அந்த அறிக்கை, 1980ல் அறிவிப்பாக உருவெடுத்தது. அன்றைய ஆந்திர முதல்வர் தங்குத்ரி ஆஞ்சேயா இந்தத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். ஆனால், எந்த முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை. அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் போலவரம் குறித்துப் பேசப்படும். ஆந்திராவில் வறட்சி, வெள்ளம் என எது வந்தாலும் "போலவரம் மட்டும் வந்துவிட்டால் இந்தப் பிரச்னைகள் நம்மை நெருங்கவே நெருங்காது" என ஒட்டுமொத்த ஆந்திர மக்களும் தொடர்ந்து நம்ப வைக்கப்பட்டனர். இன்றும் அதே நம்பிக்கையில் தான் இருக்கிறார்கள். 
1980ல் தங்குத்ரி ஆஞ்சேயாவின் முயற்சிக்குப் பின்னர்,  24 வருடங்கள் கழித்து 2004ல் ராஜசேகர் ரெட்டி இந்தத் திட்டத்தை தூசு தட்டினார். "ராம பாத சாகர் " திட்டமாக இருந்த இது, இவரின் ஆட்சிக்காலத்தில் "இந்திரசாகர் திட்டம்" என்ற பெயர் மாற்றம் கண்டது. தொழில்நுட்ப ரீதியிலும், அரசியல் ரீதியிலும், பல துறைகளின் அனுமதி வாங்கும் வகையிலும் இந்தத் திட்டம் மிகவும் சிக்கலானது. ஆதலால், ரெட்டி ஒரு புதுத் திட்டத்தைத் தீட்டினார். போலவரம் நீர்த் தேக்க அணைக்கு முன்னர் அந்தத் தண்ணீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களை வெட்ட ஆரம்பித்தார். வலது முக்கிய கால்வாய் ( Right Main Canal ), இடது முக்கிய கால்வாய் ( Left Main Canal ) என இரண்டுக் கால்வாய்களை வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. 
வலது முக்கிய கால்வாய்  ( Right Main Canal ) :
போலவரத்திலிருந்து 174கிமீ தூரம் ஓடும் இந்தக் கால்வாய் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்திலிருக்கும் 3.2 லட்சம் ஏக்கருக்கு பாசன நீரை வழங்கும். மேலும், கோதாவரியிலிருந்து 80 டிஎம்சி நீரை கிருஷ்ணாவிற்கு திருப்பிவிடும். இதன்மூலம் 8 லட்சம் ஏக்கர் இந்த நீரைப் பயன்படுத்தலாம். (ஆந்திர அரசின் அதிகாரப் பூர்வத் தகவல்) .
இடது முக்கிய கால்வாய் ( Left Main Canal ) :
181.5 கிமீ தூரம் ஓடும் இந்தக் கால்வாய் கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் 4 லட்சம் ஏக்கருக்குப் பாசன நீர் வழங்கும். மேலும், விசாகப்பட்டின நகரம் மற்றும் விசாகப்பட்டின ஸ்டீல் ப்ளாண்ட் ( Vishakapattinam Steel Plant ) ஆகியவற்றிற்கும் 23.44 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும்.  (ஆந்திர அரசின் அதிகாரப் பூர்வத் தகவல்) .
போலவரம்  பகுதியிலிருக்கும் பாப்பிகொண்டலா மலைத் தொடர்களை வெட்டி, அதன் மடியில்  ஒரு மிகப்பெரிய நீர் தேக்க அணையைக் கட்டுவது. 150 அடி உயரம் இருக்கும் அதில், பாய்ந்து வரும் கோதாவரி நீரை சேமித்து வைத்து, பின்னர் இடம் மற்றும் வலமாக வெட்டப்பட்டிருக்கும் கால்வாய்களில் புவி ஈர்ப்புச் சக்தியின் அடிப்படையில்  பாய்ச்சி, அதை ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவோடு இணைத்து ஆந்திராவின் மூலை முடுக்குகளுக்கும் நீரைக் கொண்டு சேர்ப்பது தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை என்று சொல்கிறது ஆந்திர அரசு. 
1941யில் வேங்கடகிருஷ்ண ஐயர் இந்தத் திட்டத்திற்குத் தோராயமாக ஆறரைக் கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்லியிருந்தார். 2004யில் திட்டத்திற்கான மொத்த செலவாக 14 ஆயிரம் கோடீ ரூபாய் ஆகும் என்றது ராஜசேகர ரெட்டி தலைமையிலான அரசு. 2014யில் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றவுடன் 40 ஆயிரம் கோடி இந்தத் திட்டத்தின் செலவு என்று அறிவித்தார்.  கடந்த மாதம் இறுதியாக மொத்த திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடிகள் செல்வாகும் என்று சொல்லியிருக்கிறார்.
இந்தக் கால்வாய் வெட்டும் பணிகளில் 80 சதவீத பணிகள் ராஜசேகர ரெட்டியின் காலத்திலேயே முடிக்கப்பட்டுவிட்டது. எதிர்பாராத விதமாக ராஜசேகர ரெட்டியின் மரணம், அதைத் தொடர்ந்து ஆந்திர அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆந்திரா - தெலுங்கானா பிளவு என பல பிரச்னைகளின் காரணமாக இந்தத் திட்டம் கிடப்பிலேயே கிடந்தது. ஆந்திரா - தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது, மத்திய அரசாங்கம் போலவரம் நீர் இணைப்புத் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்து, அதற்கான முழு செலவுகளையும் தானே ஏற்பதாக கூறியது. 2014ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றதும் மிக துரிதமாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார். அதுவும், தற்போது தேசிய நதிநீர் இணைப்பிற்கு 6 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள சூழலில் இந்தத் திட்டம் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது. 
போலவரம் திட்டத்தின் பயன்கள் : ( ஆந்திர அரசின் குறிப்புப்படி ) 
1. 15.2 லட்சம் ஏக்கருக்கு பாசன நீர் வசதி.

2. 960 மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி.
3. 540 கிராமங்களுக்கு குடிநீர் வசதி.
4. செயற்கை முறை மீன் வளர்ப்பு மற்றும் மீன் ஏற்றுமதிக்கான வசதிகள்.
5. ஒடிஷா மாநிலத்திற்கு 5 டிஎம்சி, சட்டீஸ்கருக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும். 

அரசின் சாதனை அறிவிப்புகளை சில நிமிடங்கள் தொடர்ந்துப் படித்தால், இது போன்ற ஒரு ஆகச்சிறந்த திட்டம் இதுவரை உலகில் எங்குமே மேற்கொண்டதில்லை என்ற எண்ணமே மேலெழுகிறது. அரசின் அறிவிப்புகளைக் கடந்து கொஞ்சம் உற்று நோக்கினால் , களத்தில் நின்று பார்த்தால் எதிர்காலம் குறித்த பெரும் பயம் சூழ்கிறது.
நமக்கு, ஒரு வழியாக போலவரம் திட்டத்தைப் பார்வையிட அனுமதிக் கிடைத்தது. பாய்ந்தோடும் கோதாவரியின் மேல் கட்டப்பட்டிருக்கும் பாலங்களைக் கடந்து ரிப்பீட் மோடில் "கோதாவரி" படத்தின் பாடலைக் கேட்டபடியே வேகமாகப் போய்க்கொண்டிருந்தோம்.
" மிளகாயின் சிகப்பு கோதாவரிக்கு பொட்டு இட்டதாக அலங்கரிக்கிறது,

   ராவணன் பொறுமையை இழந்து கடுங் கோபத்தில் பல்லைக் கடுத்துக் கொண்டிருக்கிறான்,
   அவன் பார்வை சீதைக்கு என்ன சொன்னது ? அவன் கண்களில் சந்தேக மேகங்கள் சூழ்ந்திருந்தன,
   இந்த தனிமையான இடத்தில் , ஓர் தனிமையான, இனிமையான  உணர்வு,
   இதோ... இந்த கோதாவரியின் அலைகள் எள்ளி நகையாடுவது போல் இருக்கின்றன - 
    பசுமைப் போர்த்திய இந்த பாப்பிகொண்டலா மலையின் பச்சையை நீக்கமுடியாத காரணத்தால் ! " 

இன்னும், இன்னும் இந்தப் பாடலில்  கோதாவரியின் அழகை வர்ணிக்கும் எத்தனையோ வரிகள் இருந்தன.
" இந்தத் தூய்மையான நதி , அந்த அடர்த்தியான மலையின் பக்கம் வளைந்து, நெளிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தன்னைக் காத்து நிற்கும் நண்பனுக்கு நன்றி சொல்லியபடியே அந்த நதி அந்த மலைகளின் கால்களை வருடிப் பாய்கிறது. ஓர் ஆத்மார்த்தமான , அழிவில்லா நட்பிற்கான சாட்சியாய் அதன் உறவு இருந்தது..."
ஆனால், பாப்பிகொண்டலாவுக்கும் கோதாவரிக்குமான உறவை இத்தனை நாசம் செய்ய முடியுமாஇப்படியும் நாசம் செய்ய முடியுமா,  என்கிற அதிர்ச்சி போலவரம் திட்ட இடத்தைப் பார்க்கும் போது ஏற்பட்டது. இது வளர்ச்சியாஇது தான் வளர்ச்சியாஇதுவும் வளர்ச்சியாஇதுவா வளர்ச்சி? - போன்ற கேள்விகள் எழுந்தன. அதுவரை கோதாவரி ஆனந்தத்தில் ஆர்ப்பரித்து ஓடுவதாக தோன்றியது. ஆனால், தன் நண்பனின் இழப்பைத் தாங்கமுடியாதுஅடக்க முடியா கண்ணீரில் அழுது கொண்டு தான் ஓடுகிறது என்பது புரிய ஆரம்பித்தது.

ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 4

இயற்கையின் பிள்ளைகள்...இன்று அனாதைகள் !
போலவரம் போய்க் கொண்டிருக்கிறோம். இன்றைய போலவரத்தைப் பார்ப்பதற்கு முன்னர், அன்றைய போலவரம் பகுதியைப் பார்க்கலாம்.
"பாப்பிகொண்டலா" மலைத்தொடரில் இருக்கும் மன்னிக்கவும்... இருந்த ஒரு மலை கிராமம் "குர்துரு". இந்த மலையின் ஆதிவாசி இனத்தின் பெயர் "கொண்டாரெட்டி". மூங்கில் இவர்களின் தெய்வம். மூங்கில்தான் இவர்களின் வாழ்க்கை. மூங்கிலில் பல்வேறு பொருள்களைச் செய்வது இவர்கள் வாழ்க்கை. மலையின் அடியில் பாய்ந்தோடும் கோதாவரியில் மீன் பிடிப்பதும் இவர்களுக்கான வாழ்வாதாரம். அடர்ந்த அந்தக் காடுகளில் எந்தவித அச்சமுமின்றி நடப்பவர்கள். பாய்ந்தோடும் அந்தக் கோதாவரி ஆற்றில் பயமில்லாமல் நீச்சலடிப்பார்கள். அன்றும் அப்படித்தான். 2005-ம் ஆண்டின் ஏதோ ஓர் நாள். பாட்டிகள் மூங்கில் கூடைகளைப் பின்னிக் கொண்டிருந்தார்கள். 
அப்போது, திடீரென அங்கு வரும் அரசு அதிகாரிகள் கைகளில் ஏதேதோ உபகரணங்களைக் கொண்டு அந்தப் பகுதிகளை அளக்கிறார்கள். அந்தக் கிராமமே அவர்களை உற்று நோக்குகிறது. அவர்கள் சொல்கிறார்கள். முதலில் புரியவில்லை அந்த மலைகளின் பிள்ளைகளுக்கு. புரிந்த நொடி கதறத் தொடங்குகிறார்கள். காலங்காலமாக காட்டையும், மூங்கிலையும், ஆற்றையும், மீனையும் மட்டுமே தெரிந்திருந்தவர்களுக்கு ஒரே இரவில், இனி இது எதுவும் உங்களின் வாழ்க்கை இல்லை. உங்களுக்கான வாழ்க்கையே இனி உங்களுக்கு இல்லை என்ற விஷயம் எத்தனைப் பெரிய வலியைக் கொடுத்திருக்கும்?
இப்படியாக, அந்த மலைகளிலிருந்த அனைத்து ஆதிவாசி கிராமங்களுக்கும் இதே தகவல் சொல்லப்படுகிறது.  ஒவ்வொருவரும் நொடிகிறார்கள். போராடத் துணிகிறார்கள். போராட்டம் என்றால் ஆயுதமேந்திப் போராடுவது அல்ல... தங்களுக்கான சட்ட உரிமைகளைத் தேடுகிறார்கள். தங்களுக்கான "வன உரிமைச் சட்டம்" சொல்லும் விதிகளுக்கு உட்பட்டு போராடத் தொடங்குகிறார்கள். " குர்துரு " கிராமம், அரசின் ஆவணப்படி ஷெட்யூல் 5 பகுதியாக (Schedule 5 Area) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது தனித்துவமான பாதுகாப்பைக் கொண்டது. இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற திட்டங்களை நிறுத்தும் அதிகாரம் கிராமசபைக்கு இருக்கிறது. அதைக்கொண்டு தங்கள் பகுதியில் இந்தத் திட்டம் வரக் கூடாது என்ற "உரிமைக் கோரிக்கைகளை" (Claims) அரசுக்கு அனுப்புகிறார்கள். முதல் நிலையிலேயே 4 ஆயிரம் உரிமைக் கோரிக்கைகள் அனுப்பப்படுகின்றன. ஆனால், இறுதிவரை அவர்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. 
திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே மக்கள் தொடர்ந்து இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். ஆனால், அரசின் காதுகளுக்கு அது எட்டவேயில்லை. அது எப்போதும் எட்டுவதில்லைதான். ஆனால், அனைத்துச் சட்ட திட்டங்களும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தும் கூட, ஆதிவாசிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. 2007-ல் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அனில்குமார் எனும் சமூக ஆர்வலர், ஆதிவாசிகள் மத்தியிலிருந்து அரசை எதிர்த்ததால், "தேசத்துரோக" வழக்கில் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது அரசு. "தேவாரகுண்டி" என்னும் ஊரைக் காலிசெய்யச் சொல்லி அரசு சொன்னது. ஆனால், மக்களோ காலி செய்ய மறுத்து மக்கள் போராடத் தொடங்கினார்கள். இரண்டே நாள்கள்தான், போலீஸ் படை கொண்டு அத்தனைப் பேரும் காலி செய்யவைக்கப்பட்டனர். 
வன உரிமைச் சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டது. கிராம மக்களுக்கு இருந்த கிராம சபை அதிகாரமும் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களிடமிருந்து ஏமாற்றிப் பிடுங்கப்பட்டது. பெசா (PESA - Panchayat Extension to the Scheduled Areas of 1996) என்று ஒரு சட்டம் இருக்கிறது. இதன்படி, ஷெட்யூல் 5 பகுதிகளில் கிராம சபை ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் அமல்படுத்த முடியாது. கிராம சபைகளின் அதிகாரம் அந்தளவுக்கு உறுதியானது. ஆனால், கோகோ கோலா கம்பெனியை எதிர்த்துப் போராடி கிராம சபையின் வலிமையை உணர்த்திய "பிளாச்சிமடம்" அல்ல இந்தக் கிராமங்கள். சட்ட நுணுக்கங்கள் அறியாதவர்கள். சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து ஓடும் பெருச்சாளித் தன்மை இல்லாதவர்கள். தோற்றுப் போனார்கள். தோற்றே போனார்கள்...
"பிளாச்சிமடம் - கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலிருக்கும் ஒரு கிராமம். 2002ல் அங்கு தொடங்கப்பட்ட கோகோ கோலா கம்பெனிக்கு எதிராகப் போராடி, தங்களுடைய கிராம சபை தீர்மானத்தை உச்சநீதிமன்றம் வரைக் கொண்டு சென்று அந்த நிறுவனத்தை அங்கு செயல்பட விடாமல் தடுத்தனர். இந்தியளவில் கிராம சபையின் வலிமையை எடுத்துரைக்கும் எடுத்துக்காட்டாக இன்று வரை இருக்கும் ஒரு பெயர் பிளாச்சிமடம் மற்றும் மயிலம்மா.  இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர். 2007ல் இறந்து போனார். "
பாப்பிகொண்டலா மலைத்தொடரின் கடைசி கிராமம் "தெலாடிபலு". போலவரம் திட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாள் வரை இப்படியொரு திட்டம் அங்கு வரப் போகிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. ஆனால், அவர்களின் கிராம சபை ஒப்புதலையும் அரசு பெற்றதாகக் கணக்கிருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் தங்களுக்கு ஏதுவான ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து, கிராம மக்களுக்கே தெரியாமல் மிகத் தெளிவாக வேலையை முடித்திருக்கிறது அரசு. 
இந்தத் திட்டத்தில் ஆந்திராவில் 276 கிராமங்கள் காலி செய்ய வேண்டும் என்பதோடு, சட்டீஸ்கரில் 23, ஒடிஷாவில் 10 கிராமங்களும் காலி செய்யப்பட வேண்டும். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. ஒடிஷாவின் மலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  வேதாந்தா நிறுவனத்தின் பாக்ஸைட் மைனிங்கிற்கும், போஸ்கோ ஸ்டீல் நிறுவனத்துக்கும் இதே போன்ற சிக்கல்தான் வந்தது. அப்போது அதை எதிர்த்து இயற்றப்பட்ட கிராம சபைக்களின் தீர்மானத்தைக் கொண்டு, அந்தத் திட்டங்களுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம். ஆனால், அதைவிட அதிகமான கிராமங்கள் அழியும் சூழல் இருந்த போலவரம் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்பது மிகப் பெரிய முரண். அதுமட்டுமல்லாமல், எல்லாவற்றையும் கடந்து , ஜூலை மாதம், 2010-ம் ஆண்டு இந்தியச் சுற்றுச்சூழல் துறை இத்திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது மிகப் பெரிய வலி. ஆனால், முதுகெலும்புகள் அற்ற அரசுகளிடமிருந்து நாம் இதைத்தானே எதிர்பார்க்க முடியும்?!
இந்தத் திட்டத்தால் தங்கள் வாழ்வையும், பூர்வீகத்தையும், வரலாற்றையும், வாழ்விடத்தையும் இழந்தது கொண்டா ரெட்டிகள் மட்டுமல்ல. இவர்களோடு சேர்த்து "கோயா" எனும் ஆதிவாசி இனமும்தான். ஆதிவாசிகள் அல்லாது, இத்திட்டத்தால் தூக்கியெறியப்பட்டவர்கள் பெரும்பாலும் தலித்கள். 
இன்னும் முடியவில்லை நில்லுங்கள்... இதெல்லாம் ஒரு பக்கம்.  அரசாங்கத்தின் பழைய கணக்குப்படி சட்டீஸ்கர் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் இந்தத் திட்டத்தால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு நீரில் மூழ்கும். ஒடிஷாவில் 10, சட்டீஸ்கரில் 23, ஆந்திராவில்  276 ஆதிவாசி கிராமங்கள் மொத்தமாக காலிசெய்யப்பட வேண்டும். 44,5745 குடும்பங்கள், 2 லட்சத்துக்கும் அதிகமான ஆதிவாசி மக்கள் தங்கள் இடங்களிலிருந்து இடம்பெயர வேண்டும். ஆனால், இதெல்லாம் பழைய கணக்குப்படிதான். இன்றைய தேதிக்கு இந்தப் பகுதிகளில் இருந்து தூக்கி எறியப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சம் வரை இருக்கும் என்கிறது ஒரு பழங்குடி அமைப்பு. 
தேசிய பழங்குடி கொள்கைப்படி, "50 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடிகளை வெளியேற்றும் எந்தத் திட்டங்களும் ஆதிவாசிகளின் இடங்களில் மேற்கொள்ளப்படக் கூடாதுஎன்று இருக்கிறது. ஆனால், இதில் அரசின் அத்தாட்சிப்படியே 1 லட்சத்துக்கும் அதிகமான ஆதிவாசிகள் புலம்பெயர வேண்டியிருக்கிறது. (அரசு மறைத்த கணக்கின்படி பார்த்தால் இரண்டு லட்சம் வரும்). இவர்களுக்கான மாற்று இடங்களுக்கும், மறுவாழ்விற்கும் (R&R - Rehabilitation and Resettlement) 15 ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்படும் என்று அரசாங்கம் சொல்கிறது. அதிலும் நிறைய சட்ட விதிமீறல்களும், சட்ட சிக்கல்களும் இருக்கின்றன. பழங்குடிகளுக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கப்படும். பழங்குடி அல்லாத தலித்களுக்கு அதுவும் கிடைக்காது. மூங்கிலையும், மீனையும் நம்பி பிழைத்துக் கொண்டிருந்த ஆதிவாசிகள் சம்பந்தமே இல்லாத ஏதோ ஒரு நகரின் ஒதுக்குப்புறத்தில், ஒதுக்கப்பட்டவர்களாய், ஒடுக்கப்பட்டவர்களாய் கீழ்நிலையை அடைந்து என்ன செய்திட முடியும். அவர்கள் அங்கு வாழ்தலை மறந்து, இழந்து, பிழைத்தலுக்கான ஏதோ ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும். எவ்வளவு பெரிய வலி ?. யாருக்காக, எதற்காக அவர்கள் தங்கள் வாழ்வை இழக்க வேண்டும்?
மக்களைப் பற்றி அரசுகள் என்றும் கவலைப்படப் போவதில்லை. சூழல் என்னவாவது? இத்தனை மலைகளை உடைப்பது, மரங்களை அழிப்பது என்ன மாதிரியான பிரச்னைகளை ஏற்படுத்தும்? அப்போது தண்ணீரில்லாமல் சாகும் விவசாயிகளைக் காப்பது யார்குடி தண்ணீரில்லாமல் தவிக்கும் நகர மக்களின் நிலை என்னவாகும் என்று பொங்க வேண்டாம். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். விவசாயத்துக்கும், குடிநீருக்கும் போதுமான அளவு நீர் நமக்கு வருடந்தோறும் கிடைக்கத்தான் செய்கிறது. சரியான முறையில் நீர் மேலாண்மையைச் செய்யாததுதான் பற்றாக்குறைக்குக் காரணம். நீர் மேலாண்மையே இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வைக் கொடுத்துவிடும். ஆனால், அழிக்கப்படும் இந்த மலைகளை மீண்டும் உருவாக்கிட முடியுமா ?
இன்றைய போலவரத்துக்குள் நுழைய ஆரம்பித்திருந்தோம். செக்யூரிட்டியிடம் பேசிக் கொண்டிருந்தபோதே பின்னாடி பெரும் சத்தம் கேட்டது... கண்முன்னே பச்சை பசேலென இருந்த அந்தப் பெரும் மலை சில நொடிகளில் பெரும் புகையால் சூழப்பட்டது. சில நிமிடங்களில் புகை நகர்ந்தது. மலை மொத்தமும் பச்சையை இழந்து வெறும் பாறைகளாகக் கிடந்தன. பச்சை மரங்கள் வெடியின் உஷ்ணத்தில் கருகிக் கொண்டிருந்தன. அவை கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளன. அந்த மூங்கில் மரங்களினூடே ஓடி ஆடியிருக்க வேண்டிய கொண்டா ரெட்டியின் வேர் பிடித்து வந்தவனோ, கோயாவின் வேரில் முளைத்தவனோ இன்று எங்கோ ஒரு நகரத்தின் ஹோட்டலில் எச்சில் தட்டைக் கழுவிக் கொண்டிருப்பான். அந்த இயற்கையின் பிள்ளையை நம் கண்கள் அருவருப்போடு பார்த்து நகர்ந்துகொண்டிருக்கும். சூழ்ந்திருக்கும் சாக்கடைக் கழிவுகளின் நடுவே உட்கார்ந்து எச்சில் தட்டுகளைக் கழுவிக்கொண்டிருக்கும் அவன் கண்களில், தான் சிறு வயதில் பார்த்த இந்த மூங்கில் காடுகள் வந்தாடும். அது அவனை வருடும். அந்தப் பச்சை வாசனையை அவன் நுகர்வான். அதை மீறி அந்தச் சாக்கடையின் துர்நாற்றம் அவனைத் தீண்டும். வெடிப்பு கொண்ட அந்தக் கைகளால் எச்சில் தட்டை அவன் கழுவும்போது... சிந்தித்துப் பாருங்கள்... அது மரணத்தை விடவும் கொடியது.

ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 5

விளம்பரத்தில் பச்சை... ஆனால் நிஜத்தில் ??!!     
போலவரம் தந்த வலியோடு நாமும், சாம்பல் நிற படிமத்தோடு நம் காரும் பட்டீசீமாவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். கடுமையான வெயில். போலவரத்துக்கு முன்னரே இருக்கும் ஊர்தான் பட்டீசீமா. அதைத் தாண்டித்தான் போலவரம் போனோம் என்பதால், வழி தவறாமல், அதிகம் விசாரிக்காமல் பட்டீசீமா திட்டம் அமையப்பட்டிருக்கும் இடத்தை வந்தடைந்துவிட்டோம். போலவரத்தில் பாதியாவது இருக்கும் என்ற நினைப்பில் வந்துப் பார்த்தால், மொத்தத் திட்டமும் இந்த ஒரு ஷெட் தான் என்று ஒரு நீல நிற ஷீட் போட்ட ஷெட்டைக் காட்டினார்கள். 
உள்ளே சென்று நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, வந்த விஷயத்தைச் சொல்ல,
"ஒரு அஞ்சு நிமிஷம் உட்காருங்க... இன்ஜினீயர வரச் சொல்றேன்" என நம்மிடம் சொல்லிச் சென்றார் அந்தப் பெண்.  
இரண்டே நிமிடத்தில் சிரித்த முகத்தோடு வந்தார் சிரஞ்சீவி. வயது 25. மொத்த பட்டீசிமாவிலும் சிரஞ்சீவி போன்ற இளம் இன்ஜினீயர்கள்தான் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 
சிரஞ்சீவியோடு பட்டீசீமா நீரேற்று நிலையத்தைச் சுற்றிப் பார்க்கும் முன்னர் பட்டீசீமா திட்டம் குறித்து கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் .

போலவரம் திட்டம் முடிவு பெறக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு வருடங்கள் ஆகும் என்ற நிலையில், அதற்கிடையில் கடந்த வருடம் பட்டீசீமா ஏற்றுப் பாசனம்” (Pattiseema Lift Irrigation) எனும் புதுத் திட்டத்தை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு. அதாவது, கோதாவரியிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதைக் கிருஷ்ணாவில் கொண்டு சேர்ப்பதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை. 
இந்த நீரேற்று நிலையத்தில் மொத்தம் 24 பம்ப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பம்ப்பும் தலா 354 கியூசெக்ஸ் (தோராயமாக நொடிக்கு 10 ஆயிரம் லிட்டர்) அளவுக்கான நீரை வெளியேற்றும். 24 பம்ப்புகளின் வழியிலிருந்து வெளியேறும் நீர், 12 பைப்களின் வழி பயணிக்கத் தொடங்கும். 2 பம்ப்புகளுக்கு ஒரு பைப் என்ற விகிதத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பைப்பின் விட்டம் (Diameter) 3.2 மீ, நீளம் (Length) 3.925 கிமீ. 12 பைப்களில் பயணிக்கும் கோதாவரி நீர், பட்டீசீமா நீரேற்று நிலையத்திலிருந்து 1.5 கிமீ தூரத்திலிருக்கும் "வெளியேற்றுத் தொட்டிக்கு" வந்து, அங்கிருந்து வலது முக்கிய கால்வாயில் கலக்கும். போலவரம் திட்டத்துக்காக கட்டப்பட்ட இந்த வலது முக்கிய கால்வாய் (Right Main Canal) தற்போது பட்டீசீமாவுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கால்வாயில் பயணிக்கும் கோதாவரி நீர் 177 கிமீ தூரம் பயணித்து "பவித்ரசங்கமம்" எனப் பெயரிடப்பட்டிருக்கும் இடத்தில் கிருஷ்ணாவில் கலக்கும். 

29-03-2015 - "பட்டீசீமா நீரேற்றுப் பாசனத் திட்டத்திற்கான" அடிக்கலை நாட்டினார் சந்திரபாபு நாயுடு. 

16-09-2015 - இந்த நிலையத்தின் முதல் பம்ப்பை நிறுவினார்கள்.

28-03-2016 - மொத்த திட்டமும் கட்டி முடிக்கப்பட்டது. 

06-07-2016 - முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். 

ஓராண்டிற்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்ட திட்டம் என்பதால் இது லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது. 24 பம்ப்புகளோடு இயங்கும் இதுதான் ஆசியாவின் மிகப்பெரிய நீரேற்று நிலையம். இந்தத் திட்டம்தான் சமீபகாலங்களில் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தது. அந்த விளம்பரங்கள் மொத்த ஆந்திராவும் பசுமையில் மிதப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியது. திட்டத்தின் முழு முகம் தெரியாத அரைவேக்காடுகள் மூலம் அது எங்கும் பரவியது. நிஜத்தை விடவும் பொய்த்தகவல்களோடு அது பரவியது. அதுதான், முதல் அத்தியாயத்தில் நாம் பார்த்த அந்த தாபா அக்காவை "எங்க பாபுகாரு கின்னஸ் ரெக்கார்டெல்லாம் பண்ணியிருக்காரு..." என்று சொல்ல வைத்தது. தண்ணீருக்காக தவித்துக்கொண்டிருந்தாலும், தான் நம்பும் அரசு, தனக்கான தண்ணீர்த் தேவையை நிச்சயம் பூர்த்தி செய்திடும் என்ற நம்பிக்கையை அவரிடம் விதைத்துள்ளது. வெடிப்புகளால் சிதறுண்ட அந்தக் கால்களில் செருப்புக் கூட இல்லாமல், வெடித்துச் சிதறிய அந்த நிலத்தின் வழி குடம் சுமந்துச் செல்லும் அந்தப் பெண்களுக்கு அதீத நம்பிக்கையைக் கொடுக்கின்றன இந்தப் பொய்ப் பிரசார விளம்பரங்கள். 
இது கடுமையான குற்றச்சாட்டாகப்படலாம். ஆனால், உண்மையை அலசி ஆராய்ந்துப் பாருங்கள். ஆந்திர அரசின் ஆவணத்திலிருக்கும் இந்த விளம்பரத்தைப் பாருங்கள். பட்டீசீமா மூலம் கோதாவரி கிருஷ்ணாவோடு இணைந்தால் "இப்படி இருக்கும் ராயலசீமா, அப்படி ஆகிடும்" என்று "சிவாஜி" ரஜினி பாணியில் சொல்கிறது. ஆனால், யதார்த்தத்திலோ சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடு "நிஜ" ரஜினியை ஒட்டியே இருக்கிறது. கோதாவரி கிருஷ்ணாவோடு இணைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் ராயலசீமாவின் இன்றைய நிலை என்னவாக இருக்கிறது என்பதை முதல் அத்தியாயத்தில் பார்த்தோம். 
"திட்டம் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள்தானே ஆகியிருக்கிறது? அதற்குள் எப்படி தீர்வை எட்டிவிட முடியும்?" என்று ஒரு கூட்டம் இதற்கு வக்காலத்து வாங்கலாம். ஆனால், ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். பட்டீசீமாவின் ஆயுளே மூன்றாண்டுகளுக்கும் குறைவுதான். அதன்பின்னர், போலவரம் வந்துவிடும். போலவரம் வந்துவிட்டால் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து விடுமா என்பது வேறு விஷயம். ஆனால், பட்டீசீமா அப்போது இருக்காது. ஆனால், வெகுஜன மக்களுக்கு ஒவ்வொரு முறையும் தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களைத் தொடர்ந்து ஏன் ஏமாற்ற வேண்டும்?... இல்லை இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மிச்சமிருக்கின்றன அதற்குள் ராயலசீமா செழித்துவிடும் என்று நம்பச் சொல்லுகிறீர்களா

ஆந்திர அரசின் ஆவணப்படி,

2015யில் 8.98 டிஎம்சி அளவிற்கான கோதாவரி நீர் கிருஷ்ணாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

2016யில் 55.60 டிஎம்சி நீர் கிருஷ்ணா டெல்டாவிற்கு மடைமாற்றப்பட்டு அதன் மூலம் 10.74 லட்சம் எக்கர் நிலத்திற்கு பாசன நீர் கிடைத்துள்ளது. 

25-07-2017 நாள் வரையில் இந்த வருடம் 19.70 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. 

2017யில் ஜூன் மாதமே கோதாவரி நீர் கிருஷ்ணா டெல்டாவை அடைந்துவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ஆவணங்களில் இதைப்படிக்கும்போது மெய்சிலிர்க்கிறதல்லவா? ஆனால், கள நிலவரமோ வேறு மாதிரியானதாக இருக்கிறது. 
ஆந்திர அரசோடு நெருங்கிப் பயணித்தாலும், நினைத்த நேரத்தில், நினைத்த அமைச்சர்களை சந்திக்கும் அளவுக்கான ஆளுமைகொண்ட மனிதராக இருந்தாலும், விமர்சிக்க வேண்டிய விஷயங்களில் ஆந்திர அரசைத் தொடர்ந்து விமர்த்தும், எதிர்த்தும் வருபவர் ஆந்திர விவசாய சங்கத் தலைவர் நாகேந்திரநாத். சந்திரபாபு நாயுடுவோடு பல விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டாலும், போலவரம் மற்றும் பட்டீசீமா திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறார். அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்...
" கடந்த வருடம் 70 சதவிகித அளவுக்கான விவசாய நிலங்களில் விவசாயம் நடைபெற்றன. ஆனால், இந்த வருடம் வெறும் 35 சதவிகித அளவுக்குத்தான் பயிர்களே விதைக்கப்பட்டிருக் கின்றன. அனந்த்பூர் மாவட்டத்தில் வழக்கமாக 20 லட்சம் ஏக்கரில் நிலக்கடலைப் பயிரிடப்படும். இந்த வருடம் வெறும் 1.5 லட்சம் ஏக்கரில்தான் பயிரிடப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணா டெல்டா விவசாயிகள் பலரும் தண்ணீரில்லாமல், மீன் வளர்ப்பு, இறால் பண்ணை என வெவ்வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில், ஏதேதோ கணக்குகளைக் காட்டி, ஆந்திர விவசாயிகள் செழித்து ஓங்குவதுபோல் பிம்பத்தைச் சந்திரபாபு நாயுடு கட்டமைத்திருக்கிறார். 
பட்டீசீமா அவசியமே இல்லாத ஒன்று. கடந்த முறைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோல்வியுற்றதற்கு முக்கியக் காரணமே, விவசாயம் சார்ந்த பிரச்னைகளை அவர் கையில் எடுக்காததுதான். இந்தத் தடவை அந்தத் தவறு நிகழக் கூடாது என்ற எண்ணத்தில், விவசாயத்தின் மீது அதீத அக்கறை இருப்பதுபோல் செயல்படுகிறார் முதல்வர். நதிநீர் இணைப்பதால் என்ன சூழலியல் பிரச்னைகள் வரும் என்பது இன்றுவரை சரியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், எங்களுக்குக் கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு அவசியம் வேண்டும்.
போலவரம் எங்கள் ஆந்திரத்தின் கனவுத் திட்டம். ஆனால், அதை இந்த அரசாங்கம் செயல்படுத்தும் முறைகளில்தான்  நிறைய கோளாறுகள் இருக்கின்றன. போலவரம் திட்டம் புவிஈர்ப்பு விசையை மட்டுமே பயன்படுத்தி நீரை மடைமாற்றம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டத் திட்டம். ஆனால், தற்போது பட்டீசீமாவில் மோட்டார் போட்டு நீரை உறிஞ்சி எடுப்பதெல்லாம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை’’ என்கிறார். 
தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இந்த போலவரம் திட்டத்துக்கு மாற்றாக ஒரு திட்டத்தையும் முன்வைக்கிறார் நாகேந்திரநாத். அது தற்போது செயல்படுத்தப்படவிருக்கும் திட்டத்தை விடவும் செலவு குறைவானது. இதை இவர் பலமுறை அரசிடம் முன்வைத்தும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்கிறார். இந்தத் திட்டத்தின் வழி செயல்படுத்தினால், அவர்களுக்கு வரும் கமிஷன் வருமானம் குறைந்துவிடும் என்றும் சொல்கிறார்.  முதலில் பட்டீசீமா திட்டத்துக்கான செலவு 1300 கோடி ரூபாய் என்று அறிவித்திருந்தார். 
பொதுவாக ஒரு அரசு, ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் விடும்போது 5 சதவிகிதம் வரைதான் அந்த நிறுவனம் லாபத் தொகையை எடுக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடு வெளிப்படையாக இந்தத்திட்டத்தை சீக்கிரம் முடிப்பவர்களுக்கு கூடுதலாக 17.25 சதவிகிதம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால், 5 சதவிகித அளவில் லாபம் பார்க்க வேண்டிய கான்ட்ராக்டர்கள், 22 சதவிகிதம் வரை லாபம் பார்த்தார்கள். திட்டச் செலவும் 1600 கோடியைத் தாண்டிச் சென்றது. 

கோதாவரியில் குறைந்தபட்சமாக 15 அடி அளவை எட்டும் வரை பட்டீசீமா பம்ப்புகள் நீரை எடுக்கும். 15 அடிக்கும் கீழாக நீரின் அளவு சென்றுவிட்டால், நீர் எடுப்பது நிறுத்தப்படும். 

இந்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மேலாக ஒரு பெரிய குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சர்மா எனும் சூழலியலாளர்.
போலவரம் திட்டம் சரியான முறையில் இந்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதிச் சான்றிதழைப் பெறவில்லை. ஆந்திரா தனியாகப் பிரிக்கப்பட்டதும், இது தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டதும் அதற்குரிய தடையில்லா மற்றும் அனுமதிச் சான்றிதழ்களை வாங்க வேண்டும். அதை இவர்கள் சரியாகச் செய்யவில்லை. மேலும், போலவரம் திட்டத்தின் காசை எடுத்து பட்டீசீமா திட்டத்துக்கு செலவழித்துள்ளார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, போலவரத்துக்கு வாங்கிய அனுமதிச் சான்றிதழ்களைக் கொண்டே பட்டீசீமாவையும் கட்டிமுடித்துள்ளார்கள். இதன் அர்த்தம் பட்டீசீமாவுக்கு இவர்கள் எந்த துறையின் அனுமதியையும், சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றிதழையும் வாங்கவேயில்லை என்பதுதான்." என்பதோடு அதற்கான அத்தனை ஆவண ஆதாரங்களையும் எடுத்துக்காட்டுகிறார். 
அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் நாகேந்திரநாத் கேட்டார், “அரசின் சார்பில் யாரையாவது சந்திக்கிறீர்களா?”
நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கோம்.என்று சொன்னோம்.
தன் போனை எடுத்து நீர்வளத்துறை அமைச்சரின் உதவியாளரிடம் பேசினார். அமைச்சர் ஐதராபாத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாகவும் அன்று மாலையே அவரைப் பார்க்க ஏற்பாடு செய்து தருவதாகவும் சொன்னார். 

 நன்றி: விகடன் 

ஆதாரம்: 

No comments:

Post a Comment