அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் நாயகன்
Posted: ஜனவரி 12, 2012 in ஊர்சுத்தி, நாட்டுப்புறவியல், நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்
ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வரும் ஊர் மதுரை அலங்காநல்லூர்தான். அலங்காநல்லூருக்கும், அழகர்கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. திருமலைநாயக்கர் ஆட்சிக்காலத்திற்கு முன்பு சித்திரைத் திருவிழாவிற்கு வரும் அழகர் இந்த ஊர் வழியாகத்தான் வந்து தேனூர்க்கருகிலுள்ள வைகையாற்றில் இறங்கியிருக்கிறார். அழகர்கோயிலிலிருந்து வரும் அழகருக்கு இந்த ஊரில் வைத்து அலங்காரம் செய்ததால் அலங்காரநல்லூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பின்பு இப்பெயர் மருவி ‘அலங்காநல்லூர்’ ஆகி விட்டது.
மதுரை அவனியாபுரத்தில் பொங்கலன்றும், பாலமேட்டில் மாட்டுப்பொங்கலன்றும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் நடத்தப்படுகிறது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வருடந்தோறும் யாருக்காக நடத்தப்படுகிறது தெரியுமா? இந்த ஊரின் காவல்தெய்வமான முனியாண்டிக்காகத்தான் நடத்தப்படுகிறது.
முனியாண்டி மலையாள தேசத்திலிருந்து மதுரைக்கு வந்த காவல் தெய்வம். மலையாளதேசத்தில் முனியாண்டியின் அலப்பறை தாங்காமல் அவருடைய அப்பா ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டார். அந்த பெட்டி கரையொதுங்கிய இடம் அலங்காநல்லூர். அதைப் பார்த்தவரிடம் முனியாண்டி தான் இங்கேயே இருந்து மக்களைக் காப்பதாக கூறியிருக்கிறார். அவரை பெட்டியில் வைத்து பார்த்த குடும்பத்தினர்தான் இங்கு காலம்காலமாக பூசாரியாக இருந்து வருகின்றனர். இதுபோன்ற கதைதான் கருப்புசாமிக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு ஒரு வருடம் நடத்தாவிட்டாலும் அந்த ஊர் மக்களுக்கு அதிக பிணிகள் ஏற்படுமென நம்பிக்கை நிலவுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஜல்லிக்கட்டைத் தடை செய்ய ஊரில் காலரா பரவியுள்ளது. பின் வழக்கம் போல தொடர்ந்து நடத்தியுள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன்பு கூட ஜல்லிக்கட்டைத் தடை செய்ய சட்டம் வந்தபோது அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் தன் பொறுப்பேற்று சிறப்பாக நடத்திக்கொடுத்தார்.
முனியாண்டி மிகவும் துடியான தெய்வம். நான் மதுரை முனிச்சாலையில் பிறந்தவன். எனவே, முனியாண்டி மீது எனக்கு அதிகப்பிரியம் உண்டு. முனி என்றாலே மக்களுக்கு அச்சமும் உண்டு. ஒருவரை முனி பிடித்துக்கொள்ளும் என்று அஞ்சுவார்கள். மதுரை மொட்டக்கோபுரம் முனியாண்டியை நிறைய பேர் வணங்கி வருகிறார்கள். சித்திரை வீதிகளில் சுற்றும்போது நானும் முனியாண்டியை வணங்கிச் செல்வேன். முனியாண்டி சொல்லி வரங்கொடுப்பவர் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.
அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் தென்னந்தோப்புகள் சூழ உள்ளது. முன்பு இப்போது இருப்பதைவிட நிறைய மரங்கள் இக்கோயிலில் அடர்ந்திருந்தன.
கோயிலினுள் நுழைந்தவுடன் இடதுபுறம் சேமங்குதிரையில் முனியாண்டி அழகாக அமர்ந்திருக்கிறார். மற்ற கோயில்களில் எல்லாம் குதிரையின் முன்னங்கால்கள் இரண்டு பூதங்களின் தலையில் படும்படி அமைத்திருப்பார்கள். இங்குள்ள சேமங்குதிரை சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. குதிரையின் கால்கள் அந்தரத்தில் மிதப்பது போலிருக்கிறது. பூதகணங்கள் இருவரும் கையில் கொம்பு போன்றதொரு வாத்தியக்கருவியை வைத்திருக்கின்றனர்.
குதிரைக்காலிற்கு நடுவில் கிருஷ்ணன் மிக அழகாக நின்று கொண்டிருக்கிறார். குதிரையின் கீழ் ஒரு புறம் மேளவாத்தியம் வாசிக்கும் ஆண்சிலைகளும், மறுபுறம் நர்த்தனம் ஆடும் பெண்சிலைகளும் உள்ளது.
குதிரை வாலின் கீழ் இங்கு வால்தாங்கி சிலை இல்லை.
கோயிலில் விரித்த சடையுடன் மூலவராக வீற்றிருக்கும் முனியாண்டியைப் பார்த்தாலே மேனி சிலிர்த்துவிடும். அந்தளவு துடியோடு இருக்கிறார். இடதுபுறம் இந்தாண்டு வந்த உற்சவர் சிலை இருக்கிறது. வருடந்தோறும் திருவிழாவின் போது புதிதாக முனியாண்டி சிலைகளை செய்கின்றனர். கோயிலின் பின்னால் கடந்த வருடங்களிலிருந்த முனியாண்டி சிலைகள் உள்ளன. இப்போது கோயிலில் மூலவர் இருக்குமிடத்தில் டைல்ஸ் எல்லாம் போட்டு மண்டபம் அமைத்து உள்ளனர். எனக்கென்னவோ, காவல்தெய்வங்கள் எல்லாம் மரத்தின் கீழ் வெயிலிலும், மழையிலும் இருப்பதுதான் சரியாகப் படுகிறது.
மதுரையில் இதுபோல் உள்ள காவல்தெய்வங்களை எல்லாம் போய் பார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றிருக்கிறேன். மதுரை அருளட்டும்.
வருடந்தோறும் இந்த ஊரில் முனியாண்டி கோயிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது எருதுகட்டும் நடைபெறுமாம். இந்த ஊரில் திருவிழாவின் போது இரவு பூசாரி ஊரைச்சுற்றி வரும் போது யாரும் வெளியே வரமாட்டார்களாம். வாய்ப்பிருந்தால் இந்தாண்டு செல்ல வேண்டும்.
(அலங்காநல்லூர் பெயர்க்காரணம் குறித்து ஆறுமுகம் அவர்கள் எழுதிய மதுரைக்கோயில்களும் திருவிழாக்களும் என்ற நூலில் வாசித்தேன்.
முனியாண்டி குறித்து மணா எழுதியதை நட்பூ தளத்தில் வாசித்திருக்கிறேன்.
ஆறுமுகம் அவர்களுக்கும், மணா அவர்களுக்கும் நன்றிகள் பல)
No comments:
Post a Comment