Thursday, 7 July 2011

பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு..?




ஆராய்ச்சியும் அதிர்ச்சியும்...
 பொன். செந்தில்குமார்
 காலையில் எழுந்ததுமே 'பால் பாக்கெட்' முகத்தில் விழிப்பவர்கள்தான் இங்கே அதிகம். 'சத்து நிறைந்தது' என்ற நினைப்பில் காலை, மாலை மற்றும் இரவு என்று மூன்று நேரமும் காபி, டீ, சத்து பானங்கள் என்று ஏதாவது ஒரு ரூபத்தில் பிள்ளை களுக்குக் கொடுத்து, நாமும் குடித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், 'பால் நமக்கு பகை’ என்று ஆராய்ச்சி அலறல் வந்தால்?
'ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன் மற்றும் கலப்பின மாடுகளின் பாலைக் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். இது உண்மையா என்பது குறித்த ஆராய்ச்சி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறு கிறது’ என்றொரு செய்தி, தற்போது பதைபதைப்பைக் கிளப்பி யுள்ளது!
'என்னதான் உண்மை?' என்பதை அறிய, துறை சார்ந்த வல்லுநர்களிடம் பேசினோம். முதலில் பேசுகிறார்... 'வெளிநாட்டு மாட்டினங்களான ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன் போன்றவற்றின் பாலைக் குடிக்காதீர்கள்' என்ற பிரசாரமே நடத்திக் கொண்டிருக்கும் புதுச்சேரி மாநிலம், திருநள்ளாறு, கால்நடை மருத்துவமனையின் டாக்டர் பிரசன்னா.
''பால் பற்றிய இந்த குற்றச்சாட்டு பல ஆண்டு காலமாகவே முன் வைக்கப்படுகிறது. ஆனால், அதைப் பற்றிய புரிதல் இன்றி தொடர்ந்து பயன்படுத்திதான் வருகிறார்கள். எந்த இன மாட்டின் பாலைக் குடித்தால் நன்மை என்று 1990-ம் ஆண்டு முதலே ஆய்வுகளும் நடக்கின்றன'' என்று முன்னுரை யாகச் சொன்னவர், விளக்கமாகத் தொடர்ந்தார்.
''பாலில் கால்சியம், வைட்டமின் ஏ, புரதம் போன்ற சத்துக்கள் உள்னன. புரதச் சத்திலும் கேசின் ஏ-1, கேசின் ஏ-2 ஆகிய இரு புரதங்கள் உள்ளன. இதில் கேசின் ஏ-1 புரதம் மனிதர்களுக்கு தீங்கு செய்யக்கூடியது. கலப்பின மற்றும் அயல்நாட்டு ரகங்களில் ஓரிரு மாடுகளைத் தவிர்த்து, பெரும்பாலான மாடுகளில் கேசின் ஏ-1 புரதம் மட்டுமே அதிகமாக இருக்கிறது. இவற்றின் பால், மனிதக் குடலில் செரிக்கும்போது நொதி மாற்றமடைந்து நீரிழிவு, நரம்புத் தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல் (ஆட்டிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாரம்பரிய இனங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, மணப்பாறை, சிந்து, தார்பாக்கர், ஓங்கோல் போன்ற... மாடுகளில் கேசின் ஏ-2 புரதம் அதிகமாக இருக்கிறது. இது மனித உடலுக்குத் தீமை செய்யாத புரதம்.
பால் ஒவ்வாமை மற்றும் நீரிழிவு நோய் உள்ள குழந்தைகள், கேசின் ஏ-2 புரதமுள்ள பாலைக் குடிக்கும்போது பிரச்னைகள் வருவதில்லை. அதனால்தான் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தனி வாரியம் அமைத்து, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்து பாரம்பரிய மாடுகளின் பாலை இறக்குமதி செய்கிறார்கள். நம் நாட்டில் அந்தத் தெளிவு இதுவரை ஏற்படவில்லை'' என்று வருத்தத்தை வெளிப்படுத்திய பிரசன்னா,
''இப்போது கிடைக்கும் பாக்கெட் பால், கொழுப்பு நீக்கப்பட்டது என்று தானே கூறப்படுகிறது. அதோடு சேர்ந்து இந்த கேசின் ஏ-1 புரதமும் காணாமல் போயிருக்கும் அல்லவா என்கிற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். ஆனால், நீக்கப் படுவது அதிகப்படியான கொழுப்புதானே தவிர, புரதம் அல்ல. அது பாலில் அப்படியேதான் இருக்கும்'' என்றும் தெளிவுபடுத்தினார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர், கால்நடை மருத்துவர் காசி. பிச்சை, ''அதிக பால் உற்பத்திக்காக வெளிநாட்டு மாடுகளை வரவழைத்தோம். செயற்கைக் கருவூட்டலும் செய்தோம். அதோடு நின்றுவிடாமல், ஹார்மோன் ஊசிகளைச் செலுத்துதல், மரபணுக்களை மாற்றுதல் என நவீன மருத்துவ உதவியோடு அதிக பால் சுரக்க வைக்கும் வேலைகளையும் செய்கிறோம். ஆண்டில், 300 நாட்களுக்கும் பால் கறக்கும் மெஷினாகவே மாடுகளை மாற்றி வைத்திருக் கிறோம். அந்த ஹார்மோன்களின் எச்சங்கள் பாலோடு கலந்து விடுகின்றன. அதைக் குடிக்கும் நபர்களுக்கு மூட்டு வலியில் இருந்து மூளைக் கோளாறு வரை ஏற்படுகிறது. அதனால்தான் சீமைப் பசுக்களுக்கு எதிராக நீண்டகாலமாகவே நான் முழங்கி வருகிறேன். அதற்கு வலு சேர்க்கும் விதமாக கால்நடைப் பல்கலைக்கழகமும் ஆராய்ச்சியில் இறங்கியிருப்பது வரவேற்கத் தக்கது!'' என்று சொன்னார்.
இதுதொடர்பாக பேசிய கால்நடை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் ஆர்.பிரபாகரன், ''ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன் மற்றும் கலப்பின மாடுகளின் பாலைக் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுமா என்பது குறித்த ஆராய்ச்சியில் பல்கலைக்கழகம் இறங்கியி ருப்பது உண்மைதான். ஆராய்ச்சியின் முடிவுகள் பற்றி மக்களுக்கு நிச்சயம் தெரிவிக்கப்படும்'' என்பதோடு முடித்துக் கொண்டார்.


ஆக, வெளுத்ததெல்லாம் (நல்ல) பால் அல்ல!

  
கால்சியத்துக்கு எங்கே போவது?
'பால் குடிப்பதால்தான் மனிதர் களுக்கு கால்சியமே கிடைக்கிறது என்பார்கள் டாக்டர்கள். இந்த நிலையில், பால் குடிப்பதை நிறுத்திவிட்டால், கால்சியம் எங்கிருந்து கிடைக்கும்?' என்ற கேள்வி நமக்கு எட்டிப் பார்க்க... பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஹேமமாலினியிடம் கேட்டோம். ''கேசின் ஏ-1 புரதம் அடங்கிய பால் குடிப்பவர்களுக்கு... மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகிறது என்பது சமீபத்திய ஆராய்ச்சிகளிலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்திய பாரம்பரிய பசுக்கள் மூலம் கிடைக்கும் கேசின் ஏ-2 புரதம் அடங்கிய பாலைக் குடிப்பதுதான் நல்லது!'' என்று பரிந்துரை செய்தார்.
'இந்தியாவில் கிட்டத்தட்ட நாட்டுமாடுகளே இல்லை எனும் சூழல்தான் தற்போது நிலவுகிறது. இந்நிலையில் மாற்றுவழி என்ன?' என்ற கேள்வியை 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்தவரும் சித்த மருத்துவருமான ஜி. சிவராமன் முன்பாக வைத்தபோது...
''முதலில் பால் என்பது நமக்கானதே அல்ல. மாடுகளின் கன்றுகளுக்குதான். உலகில் மற்ற இனத்தின் பாலைக் குடிக்கும் ஒரே உயிரினம்... மனிதன் மட்டுமே. பழக்கத்தின் காரணமாக அதைத் தொடர்கிறோம். மற்றபடி பாலில் மட்டுமல்ல... நாம் சாப்பிடும் பல்வேறு பொருட் களிலும் கால்சியம் இருக்கிறது. குறிப்பாக கீரை, கிழங்கு வகைகள், சிறு தானியங்களில் கால்சியம் நிறைய இருக்கிறது. கேழ்வரகில் பாலைவிட அதிகமாகவே இருக்கிறது.
பால் சாப்பிடக்கூடாது என்றாலும், அதை மோராக மாற்றிச் சாப்பிடுவது சில வகைகளில் உடலுக்கு நல்லது செய்கிறது. மோராக மாற்றும்போது நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் உருவாகி, கேசின் ஏ-1 புரத பிரச்னைகளையும் குறைக்கிறது. பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மோர் ஏற்றது. இதைத் தவிர வேறு எந்த ரூபத்திலும் பாலை பயன்படுத்தக் கூடாது!'' என்று சொன்ன சிவராமன்,
''தாய்ப்பால் கொடுக்காமல், மாட்டுப் பால் குடித்தே வளரும் குழந்தைகளை சீக்கிரமாக நீரிழிவு நோய் தாக்குகிறது என்பதையும் மறந்து விடக்கூடாது'' என்றார் அக்கறை பொங்க!




No comments:

Post a Comment