விழித்துக் கொள்ளாவிட்டால் அழிவு நிச்சயம்!
தரைமேல் காணப்படுகிற அமேசான் காடுகளின் அடர்த்தியைப்பற்றி நாம் அறிவோம். கடலிலும் அப்படி ஓர் அடர்த்திமிக்க பவளப்பாறைத் தொடர்கள் தென்கிழக்கு ஆசிய கடல் எல்லைகளில் உள்ளன. இந்தக் கடல் பிரதேசத்தில்தான் குரோஷி என்கிற வெப்ப நீரோட்டமும் உள்ளது.
நிலப்பரப்பு உயிரினங்கள் தாங்கள் உணவைத்தேடிக் கண்டறிந்து தற்காப்புக்குத் தகுந்த சூழல்களில் வாழத் தலைப்படுவது இயல்பு. அதைப் போலவே கடல்வாழ் உயிரினங்கள் கடல்நீருக்கடியில் செழித்திருக்கும் பவளப்பாறைகளை அண்டி வாழ்வதும் இயல்பு. இந்தியக் கடலிலிருந்து பசிபிக் கடல் வழியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒட்டிச் செல்லும் குரோஷி நீரோட்டப்பாதை இதற்குப் பெரிதும் துணைபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பூமி வெப்பமடைவது நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இதை ஒரு கட்டுக்குள் வைத்திருந்தாலன்றி, பூவுலக உயிரினங்கள் அனைத்துக்கும் தீங்குகள் பல விளையும். இதைக் கருத்தில் கொண்டு 1990-ம் ஆண்டில் எந்த அளவு கரியமிலவாயு வெளியாகியதோ அதில் 80 சதவீதத்துக்குக்கீழ் உள்ளதாக இருக்குமாறு தற்காத்து வருவது அவசியம் என்றும் அதை அனைத்து நாடுகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் ஜப்பான் கியோட்டாவில் நடைபெற்ற உலக நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரகடனமானதோடு சரி. எந்த நாடும் அதை நடைமுறைப்படுத்தவில்லை.
ஆனால் அண்மையில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, கியோட்டா பிரகடனத்தை எண்ணிப்பார்க்க வைத்தது.நடக்கக்கூடிய தூரத்துக்கு நடப்பது, முடிந்தவரை மோட்டார்பைக்குகள், கார் இவற்றுக்குப் பதிலாக சைக்கிள்களைப் பயன்படுத்துவது, தனித்தனி என்பதைத் தவிர்த்து பலபேர் சேர்ந்து பயணம் செய்யத்தக்க பெரிய வாகனங்களைப் பயன்படுத்துவதுமான நடத்தைகளை ஐரோப்பிய நாடுகள் பல பின்பற்றத் தொடங்கின. சீனாவின் ஷாங்காய் மாகாண ரயில் நிலையங்களில் சைக்கிள்களை நூற்றுக்கணக்கில் நிறுத்திவைத்து ரயில் பயணிகள் வீடுகளுக்குச் சென்று திரும்ப அவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது.அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார் கார் உள்பட உலகின் பஸ், கார் உற்பத்தி நிறுவனங்கள் முடங்கிப்போயின.
அரசாங்கங்களும் விழிப்படைந்தன. கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மக்களிடையே தற்போது செய்து வருகின்றன. குறிப்பாக பூமிக்குள் படிந்திருக்கும் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை வரம்புமீறி தொடர்ந்து எரிப்பதால் வெளியாகும் கரியமிலவாயு இயல்புக்கு மாறானதான வெப்பத்தை அதிகரிக்கத் தூண்டுதலாக அமைந்துவிடுகிறது.அது நீடிக்குமேயானால், மேலே சொல்லப்பட்டிருக்கும் கடலுக்கடியில் மிளிர்கின்ற அமேசான் காடுகளைப் போன்ற பவளப்பாறைத் தொடர்களின் வளமை அழியும். 21-ம் நூற்றாண்டின் கடைசியில் பூமியில் வாழும் உயிர்களுக்கு வரக்கூடிய உணவுப் பஞ்சமும் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று பவளப்பாறை வளம் குறித்த ஆய்வுக்குழுவின் தலைவர் லிடாபெட் சோயிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையொட்டி நாம் நமது தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமைகளைப் பார்ப்போம்.நிலத்தடி நீர் தாழ்ந்து வருவதால் தோப்புகள் குறைந்து வந்துள்ளன. அன்னியச் செலாவணி ஈட்டுதல் என்பதன் பெயரால் டீ எஸ்டேட்டுகள் காடுகளைக் காலிசெய்து விரிவடைந்தன. பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடுதலாகி அவர்களின் கோடை வாசஸ்தலங்களாகவும் மாறிவருகின்றன.இங்கு வேலைகளைச் செய்யவும் உல்லாச வாசிகளுக்குப் பணிவிடை செய்யவும் நிலப்புலத்திலிருந்து ஆள்கள் குடும்பம் குடும்பமாய் தருவிக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர்.
விளைவு: வனத்தின் பரப்பு சுருங்கியது . மழைவளம் குறைந்ததோடு ஊற்றுநீர் சுரந்துவந்த மலைத்தொடர்களும் வறண்டன. போதாக்குறைக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மரங்களும் சாய்க்கப்பட்டன.எங்கும் வறண்டு போனதால், குடிநீருக்காக அலைந்து தவிக்கும் வன உயிரினங்களின் துயரங்கள் சொல்லிமாளாது.தண்ணீரைத் தேடும் யானைகள் மலைகளையும் வனங்களையும் ஒட்டியுள்ள நிலங்களில் நுழைகின்றன. தாகத்தின் உச்சகட்ட விளைவாக மான் கூட்டம் ஒன்று அண்மையில் பாசனக் கிணறு ஒன்றில் பாய்ந்து மரணத்தைத் தழுவ நேர்ந்தது.
சனி நீராடு என்கிறது தமிழ் இலக்கியம். மெல்ல நகரும் நடக்கும் (நடந்தாய் காவிரி என்பதுபோல) நீரில் குளித்து எழு என்பது அதன் பொருள் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் அ. சிவபெருமானின் விளக்கம். சூரியனைச் சுற்றும் ஒன்பதில் ஒன்றான சனி கோள் ஒரு தடவை சூரியனைச் சுற்றிவர இரண்டரை ஆண்டுகளாகின்றன என்பதும் மற்றவை அதைவிடக் குறைந்த காலத்திலேயே சுற்றி வருகின்றன என்பதும் வானவியல் கணக்கு.ஆக, சனி என்றால் மெல்ல என்று பொருள் கொள்ளப்படுவதாலேயே சனி நீராடு சொற்றொடர் உண்டானது. ஆமாம்! குளிக்கின்ற மாதிரியான அந்த நீரோட்டம் இன்று வறண்டு கிடக்கின்றபோது, மற்றவற்றின் நிலையை விவரிக்கத் தேவையில்லை.அப்படி பூமியின் மேல்பரப்பில் கிடைக்கின்ற நீரைச் சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்த முடியாமல் உடல் நலத்துக்கு ஒவ்வாமை கொண்டுள்ள கனிமங்களும் ரசாயனங்களும் செறிந்து கிடக்கும் நிலத்தடி நீரை அல்லவா தமிழகத்தின் 10 ஆயிரம் கிராமங்களில் குடிநீராக வழங்கிவிடுகின்றனர். இதில் மாசுபட்ட நீரும் அடங்கும். ஆக, குளிக்கவும் குடிக்கவுமான இயற்கையான நீரோட்டத்தை அழித்த கையோடு, கிணறு மற்றும் குழாய் நீர் பாசனம் என்பதன் பெயரால் விளை நிலங்களையும் அல்லவா இன்று உப்பளமாக மாற்றியிருக்கிறோம்.
முன்பெல்லாம் ஒரு உழவு மழையில் விதைப்பு செய்து அடுத்தடுத்து வரும் இரண்டு மூன்று உழவு மழையிலேயே விளைந்து தள்ளிய புஞ்சை நில விளைச்சல் இன்று அற்றுப்போனதன் காரணங்களை யாரும் கண்டறியவில்லை.உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பது வழக்கு. ஆம், நமது கண் மூடித்தனமான பாசன முறைகளால் விளை நிலங்களும் நிலத்திற்கடியில் இருந்த உப்பைச் சுமந்து கொண்டுவிட்டபடியால், புஞ்சைப் பயிர்களும் இன்று நான்கு ஐந்து உழவு மழைக்கு ஏங்குகிறது. இப்போதெல்லாம் அந்த மும்மாரி மழை என்பது ஏது? இந்த ஆண்டு தொடக்கத்தில், புவி வெப்பமடைவதைத் தவிர்க்கும் வேலைத் திட்டங்களை ஆராய்ந்த கூட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு ஒன்றுமே இல்லை என்பது தகவல்.
மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இதற்கு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.பொதுவாக சுற்றுப்புறச் சூழல் கேட்டை படிப்படியாய்க் குறைப்பதற்கு இந்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. தொழிற்சாலை மற்றும் நகரக் கழிவுகளும், மறுசுழற்சிக்குப் பயன்படும் என்கிற விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லாத நம் நுகர்வோர் கண்ட மாதிரி வீசி எறிகின்ற பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் மருத்துவக் கழிவுகள் விளைநிலம் மற்றும் மழைநீரை மட்டும் அல்லாமல், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துவதை எவருமே கண்டுகொள்ளவில்லை.உலக நாடுகள் அனைத்தும் கவலைப்படுகின்றன. ஆபத்து நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது.
இப்படியே போனால் விரலால் எண்ணக்கூடிய அடுத்த சில தலைமுறைகளில் அந்த "டைம் பாம்' வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.இனியும் இந்தியா மெத்தனமாக இருந்தால் எப்படி? மரம் வளர்ப்பதும், புகை வெளியேற்றத்தைக் குறைப்பதும் தான் ஆபத்தைத் தள்ளிப் போடும் வழிகள். அது தெரிந்தும் தயக்கம் ஏன்? விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இதுவே!
நன்றி : http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=65563&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!