Friday, 30 July 2010

பாலும் கசந்ததடி... பசுவும் மடியுதடி...!


பாலும் கசந்ததடி... பசுவும் மடியுதடி...!


ஆர்.எஸ். நாராயணன்


Last Updated :

இன்று பருப்பு விலையும் உயர்ந்துவிட்டது. பால் விலையும் உயர்ந்துவிட்டது. ஏழை மக்களுக்கு வேண்டிய புரதச்சத்து இனி இல்லை என்றாகிவிட்டது. ஏனெனில், வறுமை நிலையும் உயர்ந்துவிட்டது.


ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையைவிட, இந்தியாவின் சில வடமாநிலங்களின் - குறிப்பாக பிகார், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், உ.பி.யில் வறுமைநிலை கூடுதல் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.


புரதச்சத்து மனிதனுக்கு மிகவும் அவசியம். புரதச்சத்து பெறுவதில் வடநாட்டு மக்களுக்கும் தென்னாட்டவர்களுக்கும் நுண்ணிய வேற்றுமை உண்டு. வறுமைக் கோட்டில் வாழும் தென்னாட்டவரின் புரதத் தேவை தினம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது இறைச்சி உணவால் நிறைவேறுகிறது.


பால், பருப்பு என்றுமே கிடையாது. அப்படிப் பயன்படுத்தினாலும் தயிர் வடிவிலோ, மோர் வடிவிலோ வாரம் ஒருநாள், மாதம் இருநாள் என்ற கணக்கில் இருக்கலாம். அதேசமயம் ஓட்டல், மெஸ் உணவில் பால் (தயிர், மோர் வடிவில்) பருப்பு வேண்டும். பால் இல்லாமல் டீக்கடை நடத்த முடியாது. பெரும்பாலான ஏழைத் தமிழர்களின் புரதத்தேவை வீட்டு உணவைக் காட்டிலும் வெளிஉணவு மூலம் நிறைவேற்றப்படலாம்.

மேற்கூறிய வடஇந்திய கிராமங்களில் தமிழ்நாடு அல்லது ஆந்திரப்பிரதேசம்போல் ஊர்தோறும் ஓட்டல்களையோ டீக்கடைகளையோ காண்பது அரிது. முழுக்க முழுக்கத் தங்களின் புரதத் தேவையை வீட்டு உணவின் மூலமே நிறைவேற்ற வேண்டும். வடஇந்தியாவில் ஜைன மதத் தாக்கம் காரணமாகப் புலால் உண்போர் குறைவு.


உலகிலேயே முழுக்க முழுக்க சைவ உணவை உண்பவர்கள் இந்தியாவில்தான் வாழ்கின்றனர். இந்தியாவிலும்கூட வடஇந்தியாவில்தான் மதத்தடை காரணமாக முட்டையைக்கூட உண்ணாதவர்கள் அதிகம் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் உண்டு. புத்தமதத்தால் ஈர்க்கப்பட்ட சைவ சித்தாந்திகள் வடஇந்தியாவில்தான் மிக அதிகம். வட இந்திய ஏழை மக்களின் கதி பரிதாபகரமானது. அவர்களுக்கு என்ன விலை கொடுத்தாவது பால் அல்லது பருப்பு வேண்டும்.


தமிழ்நாட்டில் வாழும் ஒரு சைவ நடுத்தரவர்க்கப் பெண்மணி - மதுரை புறநகரில், பாக்கெட் பால் வாங்காமல் ""கறந்தபால்'' வாங்குகிறார். அவரிடம் விசாரித்ததில்... ""பருப்பு விலை உயர்ந்ததிலிருந்து பருப்பை நிறுத்திவிட்டோம். இப்போது பாலும் கசந்துவிட்டது. 1 லிட்டர் பால் ரூ. 24 என்று பால்காரர் சைக்கிளில் வந்து ஊற்றுகிறார். எங்கள் மாத வருமானம் ரூ. 2,500. தினம் அரை லிட்டர் பால் வாங்குவோம். அந்தச் செலவே ரூ. 360 முதல் 400 ஆகிறது. அந்தப் பாலில் 40 சதவீதம் தண்ணீர் கலந்து விற்கப்படுகிறது. எனது 2 குழந்தைகளுக்கும் குடிக்கப் பால் தருவேன். அந்தத் தண்ணிப் பாலில் நான் ஆழாக்குத் தண்ணீர் விட்டுக் குழந்தைகளுக்கு டம்ளர் நிறைய வழங்கினால், என் பிள்ளை, ""ஏனம்மா பால் கேட்டால், தண்ணியில் பால்விட்டுத் தருகிறீர்களே'' என்று தினம் தினமும் வம்பு செய்கிறான்''. அவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்று கூறினார். அவருக்கு யார்தான் என்ன பதில் சொல்ல முடியும்? இந்தியாவில் உள்ள எல்லாப் புறநகர்ப் பகுதிகளிலும் இதுவே உண்மை நிலை.


ஹைதராபாதில் உள்ள தேசிய ஊட்ட உணவு நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற வீணா சத்ருக்னனின் கருத்துப்படி, 10 முதல் 15 வயதுள்ள சிறார்களுக்குக் குறைந்தபட்சம் 500 மில்லியும் வயதானவர்களுக்கு 250 மில்லியும் பால் வழங்கினால்தான் தேவையான ஊட்டத்தைப் பெற முடியும். விஜயலட்சுமியின் குழந்தைகளுக்கு 100 மில்லி தண்ணிப்பால் வழங்கவே இயலவில்லையே என்று வீணா சத்ருக்னனிடம் கேட்டால், ""கோடி கோடியாகப் பணம் செலவழித்து நகரங்கள்தோறும் விமான நிலையங்கள் கட்டும்போது குழந்தைகளுக்கு வேண்டிய பால் வழங்க உணவு மானியம் செலவழிக்க முடியாதா?'' என்று கேட்கிறார். வீணாவுக்கு பாரதப் பிரதமர்தான் பதில் கூற முடியும்.


1960-ல் பால் உற்பத்தி 2 கோடி டன் என்ற நிலை 2007-ல் 10.6 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. வளர்ந்து செல்லும் மக்கள்தொகைக்கு ஏற்ப பால் உற்பத்தி உயர்ந்துள்ளதை மறுக்கவில்லை. கறந்த பாலா, கலப்படப் பாலா என்றெல்லாம் யோசிக்காமல் கவனித்தால் இப் புள்ளிவிவரம் நம்பக்கூடியதே. ஐ.நா. உணவு விவசாய அமைப்பின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 1995-ல் தலா ஆண்டு நுகர்வு 57.7 கிலோ பால் என்ற நிலை 2005-ல் 65.2 கிலோ.


மாநகரங்களில் வாழும் மகாபிரபுகளுக்கு பாக்கெட்டுகளில் பால் கிடைத்துவிடும். எந்த நேரத்திலும் எந்தக் கடையிலும் பால் கிடைத்துவிடுவதால் இந்த வெள்ளை திரவத்தில் நிஜமான பால் எத்தனை சதவீதம்? எவ்வளவு சத்து உள்ளது? எவ்வளவு விஷம் உள்ளது என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய நேரம் இல்லை. அய்யா பேப்பர் படிப்பார். அம்மணி அந்த வெள்ளை திரவத்தைக் கரும்பழுப்பாக மாற்றி, அது காப்பி என்று கொண்டு வைப்பதை அவசரஅவசரமாக உறிஞ்சிவிட்டு அடுத்த வேலையை அவர் கவனிக்க வேண்டும். உண்மையில் பாலைப் பசு தருகிறதா? இயந்திரம் தருகிறதா? என்ற கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் தருவது கடினமே.


ஆண்டுக்கு ஆண்டு தீவனத் தட்டுப்பாடு தீவிரமாயுள்ளது. மாடுகளுக்குப் போதிய தீவனம் கிட்டவில்லை. மாடுகளுக்குத் தேவையான புரதச்சத்து மிகுந்த பிண்ணாக்கு உற்பத்தி குறைந்து விட்டது. பிண்ணாக்கு ஏற்றுமதி உயர்ந்துவிட்டது. பாலிலிருந்து மிச்ச சொச்சமுள்ள பாஸ்போ புரோட்டீனான பாலாடைக் கட்டியும் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுவதால், பாக்கெட் பாலில் என்ன சத்து மிஞ்சும் என்று புரியவில்லை. பால் பற்றிய புள்ளிவிவரங்களில் பல பச்சைப்புளுகுகள். பாலின் உற்பத்தி உயர்ந்துவிட்டது என்பது முதல் பொய். பால்போன்ற திரவத்தின் உற்பத்தி - இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடர் மூலமோ, ஸ்டார்ச், யூரியா கலவை மூலமோ, வாசமில்லா வெள்ளை திரவம் மூலமோ பால் அதாவது கலப்படப் பால் உற்பத்தி உயர்ந்திருக்கலாம்.


நல்ல சத்தான பால் வேண்டுமானால் கறவை மாடுகளுக்குப் புரதச்சத்துள்ள பிண்ணாக்கு வேண்டும். எண்ணெய் வித்து உற்பத்தியும் சமையல் எண்ணெய் உற்பத்தியும் குறைந்துவிட்டாலும், ஏற்றுமதி அதிகம். கடந்த சில ஆண்டுகளில் பிண்ணாக்கு விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இன்று தரமான நல்ல கடலைப் பிண்ணாக்கு விலை கிலோ ரூ. 24. தவிடு விலை மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது. ஏனெனில், தவிட்டு எண்ணெய் உற்பத்தியில் கிட்டும் தவிட்டுப் பிண்ணாக்கும் ஏற்றுமதியாகிறது. தவிட்டில் உள்ள புரதச்சத்தும் மாடுகளுக்குக் கிட்டுவது குறைந்துவிட்டது.


ரூ. 100-க்கு விற்ற 50 கிலோ தவிடு மூட்டை இன்று ரூ. 320. ஒரு கட்டு வைக்கோல் ரூ. 20 என்ற நிலை மாறி இன்று ரூ. 52. மேய்ச்சல் நிலத்தில் புல்லுக்குப் பதில் வேலிக்கருவை. அதையும் விடாமல் கொழுந்தைக் கடிக்கும் மாடுகளுக்கு வாய் வீங்கி அசை போட முடியாத நிலை. உலர்ந்த புல், அதாவது வைக்கோலைத்தவிர இதர தானியங்களின் அறுவடைக் கழிவுகள் பலவற்றையும் பசுக்கள் உண்டு பசியாறும். இதற்கும் ஆபத்து வந்துவிட்டது. இந்தியாவில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் பயோமாஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட பயோமின் தொழிற்சாலைக்கு மாட்டுத்தீவனமான உலர்ந்தபுல் பயனாகிறது. இவற்றை வடஇந்திய பயோமின் தொழிற்சாலைகள் எரித்து மின்சாரமாக்குவதாகக் கேள்வி. ஆந்திரத்தில் உமித் தவிடும் எரிமின்சாரமாகிறதாம்.


கடுமையான தீவனத்தட்டுப்பாடும், மாட்டுத்தீவன உற்பத்தி குறைந்தும் செல்லும்நிலையில் பால் உற்பத்தி மட்டும் உயர்வதாகச் சொன்னால் அது நம்பும்படியாக உள்ளதா? தென்னாட்டைவிட குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் தீவனத்தட்டுப்பாடு காரணமாகக் கறவை மாடுகளை இறைச்சிக்காக விற்கும் போக்கு பன்மடங்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலும் "பால் விவசாயிகள்' உருப்படிகளைக் குறைத்தவண்ணம் உள்ளனர். ஒன்று அல்லது இரண்டு கறவை மாடுகளுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. இப்போது மாட்டு இறைச்சி விலை உயர்ந்துள்ளதால் இறைச்சிக்குச் செல்லும் மாடுகள் ஆண்டுக்கு ஆண்டு கூடி வரும் நிலையில், பால் உற்பத்தி பெருகுவது எப்படி?


இன்று "பால் விவசாயிகளிடம்' நாட்டுரக மாடுகள் இல்லை. சீமைக்கலப்பினமே உள்ளது. ஒரு நாட்டுப்பசுவைவிட சீமைக்கலப்பினத்துக்கு 2 அல்லது 3 மடங்கு தீவன உணவு வேண்டும். அப்படி ஊட்டம் கொடுத்தால்தான் 5, 6 லிட்டர் பால் கறக்கலாம். வசதியுள்ள பெரும்பண்ணைகளில் 20 லிட்டர் பால் கறக்கும் மாடுகள் உண்டு. தீவனத்தட்டுப்பாடு காரணமாகக் கறவை குறைந்துவிட்டது. மாடுகள் போதிய ஊட்டம் இல்லாமல் மடியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இறைச்சிக் கடைகளுக்குச் செல்வதை கிராமங்களில் கண்கூடாகப் பார்க்கலாம்.


பாலுக்கு ஏங்கும் பச்சைக்குழந்தை முதல் வளரும் சிறார்வரை பால் இல்லாமல் சோகையாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் பாலை வழங்கும் பசுக்களும் ஊட்டம் இல்லாமல் உயிரை விடுகின்றனவே! இவற்றுக்கெல்லாம் விடையளிக்க வேண்டிய அரசாங்கம் அல்லது ஆளுங்கட்சியினரின் கவலையெல்லாம் பால் மடியைப் பற்றியது இல்லை. மாறாக, அவரவர் மடியை எப்படி நிரப்பலாம் என்று சிந்திக்கிறார்கள். ""எல்லாம் நமது தலைவிதி'' என்று நமக்குள் நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான்.


Source: http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=279671&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF...%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF...!

Wednesday, 7 July 2010

செம்மொழி கண்ட உழவு!



இந்த
புகைபபடத்தை எனது நண்பன் தமிழ் செல்வன் அனுப்பி வைத்தான். அவனுக்கு இருக்கும் ஈடுபாட்டிற்கு, அவனை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மேலும், இந்த கண்காட்சியை அமைத்தவர் யாரென்று தெரியவில்லை. அவர் உழவை பெருமைப்படுத்துகிறார். இதனால், நமது முதல்வரும், இன்ன பிற அமைச்சர்களும் இதனைப் பெருமையாக நினைத்து இருந்து விடக்கூடாது. உழவு தொழில் இழிதொழிலாக கருதும் மனப்பானமையை மாற்ற சிந்திக்க வேண்டும்.

கூலி வேலை செய்பவர்கள் பண்ணை அடிமைகளாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவர்களை மீட்கும் சீமான் போல, படம் போடும் முதல்வர் இருக்கிற போது உழவு மேலும் வீழ்ச்சி அடையும்.

மேலும் பார்க்க:
http://www.agriculturetheaxisoftheworld.com/2010/05/blog-post.html