Monday, 27 April 2009

LK Series 2 வேலிக்காத்தான் (எ) டெல்லி முள் என்னும் வாழ்வாதாரக்கொல்லி






நான் பல்கலையில் படிக்கும் சமயம். கோயமுத்தூர் வடவள்ளி பகுதியில் ஒரு வீட்டில் ரெண்டு ஆண்டு தங்கியிருந்தேன். அந்த வீட்டை சுற்றிலும் நிறைய ப்ளாட்டுகள் வீடு கட்டுவதற்காக போடப்பட்டு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளே சில புற்கள் இருந்தது. சில ஆடுகள் உள்ளே நுழைந்து புற்களை மேயும். இரண்டு மாதங்கள் கழித்து பார்த்தல் ஏகத்திற்கும் சிறு சிறு முற்ச்செடிகள் முளைத்திருந்தன. நான்கு மாதங்கள் கழித்து பார்த்தால் முழுவதுமாக அந்த முற்ச்செடி மூடிவிட்டது. அந்த நிலத்தின் உரிமையாளர் வந்து பார்த்துவிட்டு ஒரு புல்டோசரை கொண்டு வந்து அவற்றை அகற்றினார். பிறகு ஒரு வருடம் கழித்து மீண்டும் அதே முற்ச்செடிகள் நிலத்தை குடைபோல் மூடியது. ஆடு கூட இனிமேய புள் முளைக்காத அளவுக்கு ஒரு அடர்நிழல் மற்றும் முள். வருடா வருடம் சங்காராந்திக்கு சிரை எடுப்பது போல் இப்படி ஒரு வேலை செய்ய வேண்டும் இந்த முள்ளை அகற்ற.


அது போல், எங்களுடைய மானாவாரி நிலமொன்று. மூன்ற ஏக்கர் பரப்பில் இருந்தது. பல வருடங்களுக்கு முன் ஓடை நீர் வற்றியதால் தொடர் சாகுபடி அங்கே இல்லை. வருடம் ஒரு முறை மானாவாரி சோளம் மட்டும் விளையும். பிற காலங்களில் ஆடு மாட்டு மேய்ப்போர் நிலத்தில் மேய்ப்பர். சில வருடம் தவிர்க்க முடியாத காரணத்தால் பக்கத்து வயல்காரர், நிலத்தை உழவில்லை. மூன்று வருடம் கழித்து பார்த்தால் ஒரு அடர்ந்த காடு உருவாகி இருந்தது. உள்ள அந்த மரத்தை தவிர புல் பூண்டு இல்லை. ஹிரோஷிமா, நாகசாகி போல் காட்சியளித்தது. இனி இந்த முற்க்காட்டை சுத்தம் செய்வது என்பது மிக கடினமான ஒன்று. அப்படி சுத்தம் செய்தாலும் தொடர்ந்து அதில் விவசாயம் செய்யா விட்டால் காலி. முற்க்காட்டை இனி புல்டோசர் விட்டு அழிக்க வேண்டும் அல்லது விறகு வெட்டுவோரிடம், கரி சுடுவோரிடம் கொடுத்து காட்டை சுத்தம் செய்து தர சொல்ல வேண்டும். இப்போது வினை என்னவென்றால் எங்கள் காட்டில் மேயும் ஆடு, மாடுகள் எங்கிருக்கும் முற்ச்செடியின் காய்களை தின்று இங்கே சானமிடுவதால் எங்களின் நிலம் முழுவதும் முற்ச்செடிகள் முளைக்க துவங்கிவிட்டன. ஆறு மாதத்திற்கு ஒரு முறை நிலத்தில் உள்ள சிறு முற்ச்செடிகளை களையாவிட்டால் நிலத்தை மறக்க வேண்டியதுதான். ம்ம்ம்ம்.

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ள இந்த செடியின் பெயர் வேலிக்காத்தான் () டெல்லி முள். இது இந்தியாவிற்கு இந்திய மண்ணிற்கு பூர்வீகமானது அல்ல. வேளான் ப்லகலையால் காமராஜர் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த செடி இன்று தென்னிந்தியாவை பாலைவனமாக்கிவிடும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. நமது வாழ்வுக்கு உலை வைக்குமிந்த செடியினை பற்றியும் அதன் தன்மை குறித்தும் இங்கு பார்ப்போம்.

பரவிய வரலாறு:

இந்த வேலிமுள் செடியானது தென் அமெரிக்காவின் மேற்க்குகடலோரம் பாலைநிலங்களில் வளரும் மரமாகும். ஏகாதிபத்திய காலத்தில் போர்த்துகீசியர்களால் உலகமெங்கும் கொண்டு செல்லப்பட்டது. 1828 ஆம் பரவ ஆரம்பித்து இந்த மரம் 1915 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வழியாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டு பின்னர் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரப்பப்பட்டது. இன்று உலகம் முழுவதுமுள்ள மிதமான வெப்ப, மற்றும் வெப்பமான வறண்ட பிரதேசங்களில் இதனை காண முடியும். இந்த மரம் மிகவும் வறண்ட சூழலையும் தாக்கு பிடித்து வளரக்கூடியது. கடுமையான வெயில் காலத்தில் இலைகளை சுருட்டி நீர்போக்கினை தடுத்து உயிர் வைத்திருக்கும். சிறிது மழை கிடைத்தால் போதும் சட்டென வளரும். நீர் தேங்கி இருக்கும் நிலத்தில் வைத்தாலும் அதனையும் சமாளித்து உயிர்வாழும். மிதமான நீர் மட்டும் வெப்ப நிலையுள்ள சூழல் கிடைத்தால் அவ்வுளவுதான், புற்றீசல் போல புழுத்து விடும்.

அத்தோடு நில்லாமல், இந்த மரம் தனது ஒரு கிலோ மரத்தினை உற்பத்தி செய்ய 1400 லிட்டர் தண்ணீரை உறிஞ்சிகிறது. தனக்கு சுற்றிலும் அடியிலும் எந்த ஒரு மரமோ, செடியோ முளைக்காத வண்ணம் இதனது நச்சுத்தன்மை விரவிக்கிடக்கிறது. காற்றின் ஈரமும் குறைந்து விடுகிறது. இது வளரும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கபடுவதாக தகவல்கள் உள்ளன. சூடான் நாடு இதனை அழிக்க போராடி வருகிறது.

பயன்பாடு என்ற நோக்கில் பார்த்தால், நல்ல விறகு. கரி சுடும் அளவுக்கு மிக அருமையான விறகு. வணிக நோக்கில் இதனை தொழிலாக செய்ய முடியும். இதனது பழங்கள் நல்ல கால்நடை தீவனம். எப்படிப்பட்ட நிலத்திலும் குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் வளருவதால் இதன் பயன்பாடு விறகிற்கு அதிகமாக இருக்கிறது.

எனினும் இதனது தீய விளைவுகளான மண்ணின் வளம் குறைக்கும் தன்மை, பிற பயிர்களை வளர விடாமல் செய்யும் தன்மை, நீர் அபரிதமாக உறிஞ்சும் தன்மை, நிலத்தை பாலைவனமாக்கும் தன்மை, போன்றவை மிக அபாயமானவை. இதனை ஊக்குவிக்கும் விஞ்ஞானிகள் நீண்டகால நோக்கில் சுற்றுசூழலுக்கு எப்படிப்பட்ட கேடு விளையும் என்று சிந்தித்தால் மிக நலமாக இருக்கும். நமது வாழ்வாதாரம் சிதையைய இந்த செடி மட்டுமே போதும். நீரும், நிலமும் பாழ்பட்டுபோய் விடும்.


அந்நியர்கள்
மட்டும் ஒரு நாட்டிற்கு கேடு அல்ல. இது போன்ற அந்நிய அதுவும் பாலை நிலத்து மரங்களும் கேடே! நல்ல நிலத்தில் விட்டால் அது அதனையும் பாலை நிலமாக்கிவிடும். விழித்துக்கொள்ளுங்கள் மக்கா! வேலிமுள் மரங்கள் இல்லாத கிராமங்களை உண்டாக்குவோம். இல்லையேல் ஒரு காலையில் உங்களுக்கு வேண்டும்கிற மரங்களை இந்த மரம் ஸ்வாகா செய்து விடும்.


LK Series 1 கரும்பு சர்க்கரை என்னும் வாழ்வாதாரக்கொல்லி - கற்பகக்கொல்லி


"உண்மை சுடும், கசக்கும்". கரும்பை வாழ்வாதாரக்கொல்லி, வாழ்க்கைக்கொல்லி என்று கூறினால் யாராவது நின்று யோசிப்பார்களா? சற்றே நின்று யோசியுங்கள். இனிப்பு என்பது அறுசுவைகளுள் மிகவும் பிடித்தமான பிரசித்தி பெற்ற சுவையாகும். இனிப்பின் மூலம் பல. செடிகள் தனக்கு தேவையான அனைத்து உணவையும் குளுகோஸ், பிரக்டோஸ் போன்ற இனிப்பின் நுண்ணிய மூலக்கூறுகள் வாயிலாகவே உற்பத்திசெய்து உட்கொள்கின்றன. கார்போஹ்டிரடே எனும்மாவுச்சத்தும் சர்க்கரை எனும் குளுகோஸ் வடிவமாகவே மாற்றப்பட்டு உடம்பால், செடிகளால் கிரகிக்கப்படுகிறது.

மனிதனுக்கு தேவைப்படும் இனிப்பு சுவையானது கரும்பு,பனை , தென்னை, கிழங்குகள் போன்றவற்றில் மூலம் வழக்கப்படுகிறது. அதில் முக்கியமானது கரும்பு சர்க்கரை. உலகின் 70 % சர்க்கரை தேவையை கரும்பே பூர்த்தி செய்கிறது. 30 % சர்க்கரை கிழங்கு எனும் கிழங்கின் மூலம் பூர்த்தியாகிறது. அதுவும் முக்கியமாக ஐரோபிய நாடுகளில். உலகின் பிறநாடுகள் இன்று சர்கரைக்கு கரும்பையே நம்பி இருக்கிறது.

கரும்பானது உண்மையில் கிழக்கு ஆசியா, மேற்கு இந்தியாவில் தொன்று தொட்டு வளர்ந்து வரும் வளர்க்கப்பட்டு பயிராகும். கரும்பு புல்லின் குடும்பத்தை சார்ந்ததே. சொல்லப்போனால் பெரிய புல்லாகும். நீர் பிடிப்பு அதிகமுள்ள மண்களில் செழித்து வளரும் பயிர். சமஸ்கிர்ருததில் "சர்க்கரா" என்று அழைக்கப்பட்டு இன்று மேற்க்கத்திய விஞ்ஞானிகளால் Saccharum என்று பெயருடன் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் கரும்பு பயிரிட்டதற்கான சான்றுகள் இருக்கிறது. பின்பு கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் எகிப்தியர்களால் கொண்டு செல்லப்பட்டு,பின்பு 7 ஆம் நூற்றாண்டில் ஸ்பைனை அடைந்தது. கரும்பின் சுவையை அறிந்த மேற்கு அதனை தனது ஏகாதிபத்திய காலனிகளில் அறிமுகபடுத்தியது. தென் அமேரிக்காவில் இருந்த சாதகமான சூழல் இன்று பிரேசிலை உலகின் மிகப்பெரிய கரும்பு சர்க்கரை உற்பதியாலராக்கியுள்ளது.


இந்தியாவில் இனிப்பின் தேவை மிகவும் அவசியமானது. பல பண்டிகைகளிலும் இனிப்பு வழக்கப்ப்டுவது வாடிக்கை. முன்பு கரும்பு வெள்ளம், தென்னை, பனை கருப்பட்டி, முதலியவை இனிப்பிற்காக உபயோகபடுதப்பட்டது. தென்னிந்தியாவில் பெரும்பாமையான மக்கள் பனை வெல்லத்தையெ பயன்படுத்தினார். பனையேறிகளின் வாழ்க்கை மிக செழிப்பாக இருந்தது.


ஆங்கிலேர்கள் வந்த பின் கரும்பிலிருந்து வெள்ளை சர்க்கரையை சுக்ரோஸ் சை பிரிதெடுத்தனர். வெள்ளை சர்க்கரையில் வாடை எதுவுமிருக்காது உடன் தேநீர், கேக், முதலியவற்றிற்கு அருமையான கலப்பாக இருக்கும் என்று நம்பினார். ஆனால், கரும்பிளிருக்கும் இரும்பு, செம்பு, முதலிய பல தாதுக்கைளை அகற்றப்பட்டது. வெல்லத்தில் செய்யும் அதிரசம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, போன்ற சமாச்சாரங்கள் மாறி வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்புகள் சமூகத்தில் மேலோங்கின. உடன் பால் உற்பத்தி தேசியமயமான பின் இந்தியாவில் பால் இனிப்பு வகைகள் பல்கி பெருகின. இன்று கரும்பின் வெள்ளை சர்க்கரையை உபயோகப்படுத்துவோர் 99 % ஆகும். பனை, தென்னை வெள்ளங்கள் மறக்கப்பட்டு விட்டன. சிலர் இன்னும்கரும்பு வெல்லத்தையாவது பயன்படுத்துகின்றனர். இன்று ஆங்கில மற்றும் பரம்பரை மருத்துவர்கள் கூறும் மூன்று வெள்ளை விஷங்க்களுள் கரும்பின் வெள்ளை சர்க்கரையும் அடக்கம் (வெள்ளை சர்க்கரை, உப்பு, பால்).

இன்று இந்தியாவே நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியில் உலகில் முதலிடம். பனை, தென்னை, வெல்லம்களை புறக்கணித்து கரும்பை பிரதானமாக அதுவும் வெள்ளைக்காரனின் வெள்ளை கரும்பு சர்க்கரையை உண்ணும் நாகரிகத்தால் பாழ்பட்டது நமது வாழ்க்கையே. என்ன சம்பாரித்து உழைத்து என்ன பயன் இறுதியில் சர்க்கரை நோயால் உணவிழந்து, கண்ணிழந்து, கிட்னி இழந்து, இதயம் அடிபட்டு, கை கால் விரல்கள் புழுத்து, கால்கள் கைகள் அகற்றப்பட்டு, சர்க்கரைநோய் ஆஸ்பத்திரியில் பல நாள் அவதிப்பட்டு நரக வேதனையை அனுபவித்து பிறரை சித்ரவதை செய்து நாறிப்போய் உயிரிழக்கும் வேதனை தேவைதானா?

போதாகுறைக்கு கரும்பு ஆலைகள் மொலாசசிலிருந்து சாராயம் காய்ச்சி மக்களின் கெடுக்கும் அவலமும் இந்த கரும்பினால் ஏற்படுகிறது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் கரும்பு சாராய வியாபாரம் அரசாங்கமே எடுத்து நடுத்தும் அவலம் கொடி கட்டி பறக்கிறது. ம்ம்ம்.

சரி இந்த கரும்பு சர்க்கரையால் மனிதனுக்கு மட்டுமா கேடு. கரும்பு சர்க்கரையின் மேலுள்ள வணிக மோகம், பிற பயன் பாடுகள் நமது வாழ்வாதரத்தையுமல்லாவா கெடுக்கிறது (நீர், மற்றும் நில வளம்) .


கரும்பு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மிகப்பெரிய பணப்பயிராக உருவெடுத்தது. இந்தியாவின் சர்க்கரை தேவையும், மக்கள் தொகையும் ஒரு இனிய போல் கரும்பு பணம் கொழிக்கும் பயிரானது. மிகவும் வடிவமைக்கப்பட்ட தொழிச்சாளைகளாக உருவெடுத்தது கரும்பு - சர்க்கரை உற்பத்தி. கடந்த ஐம்பத்து வருடங்களில் இந்தியாவில் கரும்பின் பரப்பு இரண்டு மடங்காகவும், உற்பத்தி ஆறு மடங்காகவும் உயர்ந்துள்ளது. உலகில் பிரசிலுக்கு அடுத்து அதிகம் கரும்பு இந்தியாவில் உற்பத்தியாகிறது . இந்தியாவில் உத்திர பிரதேசம், மகாராஷ்டிராவிற்கு பிறகு தமிழகத்தில் அதிகம் கரும்பு உற்பத்தியாகிறது.

சரி அதனால் என்ன?

சரி அதனால் என்னவென்று நீங்கள் கேட்பது புரிகிறது. முன்பு சொன்னது போல் கரும்பு நீர் தேவை அதிகம் கொண்ட நீண்ட நாள் பயிர். கரும்பிற்கு வணிக வரவேற்ப்பு இருப்பதால் விவசாயிகள் அனைவரும் நீரிலாதவர்கள் கூட ஆள் துளை கிணறுகள் தோண்டி கரும்பு உற்பத்தி செய்கின்றனர். தென்னிந்தியாவில் கட்டுபாடட்ட்ற கரும்பு சாகுபடி நிலத்தடி நீரிணை கேள்விக்குறியாக்கியுள்ளது. கரும்பிலிருந்து பிரேசில் எரிபொருள் தயாரிப்பதால் நாமும் தயாரிக்க வேண்டும் கரும்பிற்கு விலையை கூட்ட வேண்டும் என்று போராடும் விவசாயிகளை காண்டால் அச்சமாக இருக்கிறது. நிலவும் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க பலர் கரும்பை விரும்புவதால் நிலத்தடி நீரின் நிலை , நிலத்தின் தன்மை இன்னும் மோசமாகும் சூழல் நிலவுகிறது.

பிரேசிலில் 16 % எரிபொருள் கரும்பின் "எத்தனால்" கொண்டு பெறப்படுகிறது. பிரேசிலில் நீருக்கு பஞ்சமில்லை. அமேசான் காடுகளில் பெய்யும் மழையே போதும் கரும்பு வளர. இங்கு அப்படியா? நிலத்தடி நீரை இரையாக்கினால் கரும்பு வளரும் கரும்பு வளர்ந்தால் எரிபொருள் தயாரிக்கலாம். எரிபொருள் தேவை என்பது பூர்த்தி செய்ய முடியாத ஒன்று. அதற்காக நாம் கரும்பை பயிரிட்டு வாழ்வாதாரங்களை காவு கொடுக்க வேண்டுமா? என்று சற்றே யோசிக்க வேண்டும். இன்றைய சந்தப்பவாத காசுக்காக, நிலையான செல்வங்களான நீர் நில வளங்களை, இழந்து விடக்கூடாது.


நீராதாரங்களை அழித்து, நில வளத்தை குலைத்து மாற்றமுடியாத துயரை ஏற்படுத்தும் இந்த கரும்பு நுகர்வு வணிக வியாபார மயம் தொடரவேண்டியதா என்று சிந்திக்க வேண்டும். பனையேறிகள் வாழ்வும், தென்னை விவசாயமும் நலிந்து கரும்பினை கொண்டு வளர்க்கும் இந்த கலாச்சாரம் பல குடியினரது வாழ்வாதாரத்தை கெடுப்பதுடன், ஒட்டு மொத்த மனிதனின் வாழ்வாதாரத்தை கெடுக்கிறது என்பது ஐயமின்றி தெளிவாகிறது.


இருக்குமிடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியம். மேற்ப்பரப்பு நீர் அதிகமிருக்கும் பகுதிகளில் மட்டுமே கரும்பு சாகுபடி என்ற சட்டம் வர வேண்டும். நீர் தேவை அதிகமுள்ள நீண்ட நாள் பயிர்களுக்கு ஆள் துளை கிணறுகள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட வேண்டும். பனை, தென்னை, கரும்பு வெல்லம் உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்ய வேண்டும். வெள்ளை சர்க்கரை உண்பதை தவிர்க்க சமூகம் அக்கறை காட்ட வேண்டும். கரும்பை கொண்டு வியாபாரம் செய்யும் பண முதலைகளுக்கு சுற்றுசூழல், சமூக உடல் நலம் குறித்த அறிவை புகற்ற வேண்டும்.

தென்னையை கற்பக விருட்சம் என்பார்கள். அதன் அனைத்து பாகங்களும் பல உபயோகத்திற்கு பயன் படுகிறது. கரும்பும் அவ்வாறே. அதனால் பல வணிக உபயோகம், சாராயம், வெள்ளை சர்க்கரை, நீரிழிவு, நிலத்தடி நீர் பாதிப்பு, சாராயத்தால் குடிகள் பாதிப்பு, நில வள பாதிப்பு. இப்படி பல உபயோகத்தால் பல பிரச்சனைகளுக்கு அச்சாரமாக திகழும் கரும்பை - கற்பகக்கொல்லி, வாழ்வாதாரக்கொல்லி என்று கூற வேண்டியதாகிறது.

இந்த கட்டுரை, நான்கு சக்கரையாலைகளை மகாராஷ்ட்ராவில் ஏற்படுத்தி அங்குள்ள விவசாயிகளை பருப்பு வகைகளை உற்பத்தி செய்வதை தடுத்து அதனை இறக்குமதி செய்து, அதோடு நில்லாமல் கரும்பினால் நீர் வளத்தை அழிக்கும் இந்தியாவின் விவசாய மந்திரி சரத் பவாருக்கு சமர்ப்பணம்.

கரும்பை, வெள்ளை சர்க்கரை உபயோகத்தை குறைப்போம். பனை, தென்னை வெல்லத்தை நுகர்வோம். உடல் நலம், சுற்றுசூழல் நலம் இரெண்டையும் ஒருங்கே பேணுவோம்!